Pages

Monday, May 8, 2017

அதிரையில் நலிவடைந்து வரும் உப்பு உற்பத்தி தொழில்: Exclusive ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே-8:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே உப்பு உற்பத்தித் தொழிலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தியாகும் பகுதிகளில் அதிராம்பட்டினமும் ஒன்று. கடலோரப் பகுதிகளை ஒட்டிய சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இவை இந்திய உப்புத்துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமானவை.

அதிராம்பட்டினத்தில் மட்டும் ஏறக்குறைய 800 ஏக்கர் பரப்புள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி  நடந்து வந்தது. இப்பகுதியில் உணவு உப்பு, கெமிக்கல் உப்பு என 2 வகை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், போதிய விலை கிடைக்காததால் இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது என்றார் அதிராம்பட்டினத்தில் கடந்த பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏ.பிச்சை.

இது குறித்து அவர் மேலும் கூறியது:
அதிராம்பட்டினம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பு வழக்கமாக ஆந்திரா, புதுச்சேரி, மணலி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

ஆனால் தற்போது இந்தப் பகுதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் உப்பு மிக குறைந்த விலையில் அங்கிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுவதால், தமிழகப் பகுதிகளில் உற்பத்தியாகும் உப்புக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வி்ட்டது.

ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன் அதிரை பகுதியிலுள்ள உப்பளத்தில் 1 ஏக்கரில் குறைந்த பட்சம் 20 டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 டன்னுக்கு உப்பள குத்தகை தொகையாக ரூ.10 வீதம் 20 டன்னுக்கு ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்தது.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதன் பதவி காலம் முடிவடையும் நேரத்தில், தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கான மத்திய அரசிடமுள்ள இடத்தின் குத்தகைத் தொகையை 10 மடங்கு உயர்த்தியது. அதனால் அன்று முதல் தற்போது வரை அதிரை பகுதியில்
உப்பளத்திற்கான குத்தகைத் தொகை 20 டன்னுக்கு ரூ.2,000 என வசூலிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர்.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே உப்பு உற்பத்திப் பணி தொடங்கியது. நிறைவாக தற்போது உப்பு வாரும் பணிகள் நடந்து வருகிறது.

குஜராத்தில் உப்பு உற்பத்தி செய்யவதற்கான இடம் மாநில அரசிடம் உள்ளதால் குத்தகைக் கட்டணம் மிக குறைவாக உள்ளது. மேலும் அங்கு உப்பு உற்பத்திக்கு மாநில அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது. அதனால் அங்கு உப்பு உற்பத்திச் செலவு மிகவும் குறைவு.

ஆனால், தமிழகத்திலுள்ள உப்பு உற்பத்தி செய்வதற்கான இடம் மத்திய அரசு வசம் உள்ளது. குத்தகை தொகையும் மிக அதிகம். உப்பு உற்பத்தியின்போது தண்ணீர் இறைக்க வணிக கட்டணத்தில் மின்சாரம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி செலவு அதிகம்.

ஆகையால், அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கும் உப்பு உற்பத்தித் தொழிலை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும். உடனடியாக செய்ய வேண்டியது-மத்திய அரசு உப்பள குத்தகைத் தொகையை கணிசமாக குறைக்க வேண்டும். தமிழக அரசு உப்பு உற்பத்திக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மழைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...