Pages

Thursday, August 24, 2017

எச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் !

அதிராம்பட்டினம், ஆக. 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதிகளின் சாலைகளில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். தேங்கி காணப்படும் குப்பைக் கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்தமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, சி.எம்.பி லேன் கடற்கரைத் தெரு, தரகர் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாமல் சாலைகளில் சிதறிக் கிடப்பதால், துர் நாற்றம் வீசி வருவதாகவும், இவற்றை ஆடு, மாடுகள் கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் கலக்கடைந்தனர்.

இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம், கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு பணியாளர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவிப்பு !

மேலாளர் ஹமீத்கான்
அதிராம்பட்டினம், ஆக. 24
நகைக் கடனை புதிப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
அன்புநிறை வாடிக்கையாளர்களே,
இது சென்ற வருடம் 31-07-2016க்கு முன் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் சிறப்பு முகாம்.

தாங்கள் செலுத்த வேண்டிய நகைகடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதிப்பித்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் ஒன்று எதிர்வரும் 29-08-2017, 30-08-2017 மற்றும் 31-08-2017 ஆகிய மூன்று தினங்களில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி, அதிராம்பட்டினம் கிளையில் நடைபெற இருக்கின்றது.

இவ்வாறு இவ்வாய்ப்பை பயன்படுத்தக் கொள்ள விரும்புபவர்கள் சிறப்பு முகாம் நடக்கும் தினங்களில் அன்று காலை 09.30 மணி முதல் 10.00 மணிக்குள் வங்கிற்கு வந்து, நகைக்கடனை புதிப்பித்துக் கொள்வதற்காக, தங்களது நகைகடன் அட்டையை வழங்கி பதிவு செய்துக் கொள்ள வேண்டுகிறோம்.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நகை ஏலத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்,
மேளாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
அதிராம்பட்டினம்.

அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்றம் !

அதிரை நியூஸ்: ஆக. 24
அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி எனப்படும் அடையாள அமீரக அட்டை தேசிய அடையாள அட்டையாக நடைமுறையில் உள்ளது. இதனை வழங்குவதற்காக Emirates Identity Authority என்ற பெயரில் அரசு நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இனிமேல் இந்த நிறுவனம்  The Federal Authority for Identity and Naturalisation (FAIN) என்ற புதிய பெயரில் அழைக்கப்படுவதுடன் கூடுதலாக விசா வழங்குதல், ரெஸிடென்ட் விசா ஸ்டாம்ப் பதிதல், பாஸ்போர்ட் பிரச்சனைகளை கையாளுதல் (The Federal Authority for Identity and  Naturalisation will be tasked with the identity, naturalization and passports affairs as well as the entry and residency of foreigners) போன்ற கூடுதல் பொறுப்புக்களையும் கவனிக்கும் என அமீரக ஜனாதிபதியும், அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் சட்ட திருத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி மையங்கள் திறப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 24
பெற்றோர்களுடன் ஹஜ்ஜூக்கு வந்துள்ள 1 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் நலனுக்கான புனித மக்காவில் புனித ஸ்தலங்களைச் சுற்றி குழந்தைகளுக்கான தற்காலிக மழலையர் விளையாட்டு கல்வி மையங்களை அமைத்துள்ளது சவுதி கல்வி அமைச்சகம். இதன் மூலம் குழந்தைகள் ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்குவதிலிருந்தும், காணாமல் போவதிலிருந்தும், நோய் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவர்.

இந்த மழலையர் மையங்களில் குழந்தைகளுக்கான மருத்துவமனை, மருந்தகம், தாய் சேய் இருவருக்கும் வாகன வசதி, பெண் சேவகர்கள், கல்வி புகட்டத் தேவையான உபகரணங்கள் ஆகிவையும் இடம் பெற்றுள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, August 23, 2017

அதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஆக. 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இபிஎம்எஸ் கல்வி நிறுவனத்தின் அங்கமாகிய தாருல் இல்ம் ஸ்கூல் ஆஃப் ஸ்டடீஸ் சார்பில், அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆய்ஷா மகளிர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, அம்மாபட்டினம், அன்னை கதிஜா மகளிர் கல்லூரி முதல்வர் எம். சைதா பானு கலந்துகொண்டு 'இன்றைய சமுதாயப் பெண்கள் பொறுப்புணர்வும், விழிப்புணர்வும்' என்ற தலைப்பிலும், எழுத்தாளர் இளையான்குடி ஏ.யாஸ்மின் ஆலிமா, 'பயனற்ற கல்வியும், பாதை மாறிய சமுதாயமும்' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள்.

இதையொட்டி, சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன. போட்டி முடிவில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, கல்வியக முதல்வர் எம்.ஏ ராபியா நவாஸ் வரவேற்றுப் பேசினார். முடிவில் பள்ளி ஆசிரியை பானு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், பெறோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்' கே.எம்.ஏ ஜமால் முகமது விருப்ப மனு தாக்கல் !

அதிராம்பட்டினம், ஆக. 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் விருப்ப மனுவை செவ்வாய்க்கிழமை மாலை தாக்கல் செய்தார்.

அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத் நிர்வாகத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, தற்போதைய நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் வருகிற செப். 15 ந் தேதியுடன் முடிவு பெற உள்ளதை அடுத்து, வரும் செப். 15 ந் தேதி, சங்க அலுவலகத்தில் நிர்வாகத் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 5 நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, சங்கத் தலைவர் ஹாஜி முகம்மது ஹசன் அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார். அருகில் சம்சுல் இஸ்லாம் சங்கப் பொருளாளர் ஹாஜி ஜலீல் உடன் இருந்தார்.

IAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண்ணப்பங்கள் விநியோகம் !

தமிழக அரசால் நடத்தப்பெறும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2018-ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணைக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்விற்கு பயிற்சி அளிப்பதற்கு (Preliminary Examination) மாணவ, மாணவியர்களை தெரிவு செய்திட 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவங்கள் தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20.09.2017 மாலை 5.45 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

தகுதிகள்:
1. மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

2. ஆதிதிராவிடர். பழங்குடியினர். பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. குறைந்தபட்ச கல்வித்தகுதியாகிய இளங்கலை பட்டப்படிப்பு ( BA., B.Com, B.Sc., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான BE, MBBS, B.D.S, B.V.Sc, B.Sc (Agri) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் அனைத்தும்) முடித்தவராக இருத்தல் வேண்டும்.

4. குறைந்தபட்ச வயது அனைத்து வகுபபினருக்கும் - 21

5. அதிகபட்ச வயது இதர வகுப்பினர் - 32

மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து கீழ்க்கண்டவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது;
1. ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் - 5 வருடம்

2. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்    - 3 வருடம்

3. மாற்றுத் திறனாளிகள் - 10 வருடம்

விண்ணப்பங்களைப் பெற தகுதியுள்ள மாணவஃமாணவியர்களின் வயது/ பிறந்த நாள் விவரம் (as on 01-08-2018);

SC/SC(A), ST -   Age 21 to  37 years,  31.07.1981-க்கு பின் 31.07.1997 வரை

BC, BC(Muslim), MBC(OBC)  - Age 21 to 35 years,  31.07.1983-க்கு பின் 31.07.1997 வரை

OC - Age 21 - 32 years, 31.07.1986-க்கு பின் 31.07.1997 வரை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் 20.09.2017 மாலை 5.45 மணி வரை. மேற்குறித்த காலக்கெடுவிற்குப் பின் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி, வயது, சாதி மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

அதிரை நியூஸ்: ஆக. 23
இந்த ஹஜ் சீஸனின் ஆரம்பத்தில் அனுமதியில்லாத 61 ஹஜ் ஏற்பாட்டு அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், ஹஜ் ஏற்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 10,533 சவுதி அரேபியர்கள் மற்றும் 213,541 வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹஜ் பாதுகாப்புப் படையின் துணை கமான்டர் மேஜர் ஜெனரல் ஜமான் அல் காம்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு வரை தினந்தோறும் சராசரியாக 340,929 வாகனங்கள் புனித மக்காவினுள் பிரவேசித்தும் வெளியேறியும் உள்ளன. அதேவேளை சாலை எல்லைகள் வழியாக சராசரியாக 1,333 பேருந்துகள் ஹஜ்ஜூக்காக உள்ளே வந்துள்ளன.

இதுவரை எந்த சாலை விபத்துக்களும் பதிவாகாத நிலையிலும் தொடர் தீவிர கண்காணிப்பின் கீழ் சாலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களில் காயமடைவோருக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. புனித மக்கா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றி சுமார் 72 பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கூடுதலாக 32 மையங்கள் புனித ஹரம் ஷரீஃபை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கா உட்பட அனைத்து புனித ஸ்தலங்களிம் ஏராளமான ரகசிய போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜித்தா, தாயிப், லெயித், சாயில் மற்றும் மதினாவை சுற்றியும் பாதுகாப்பு படையினர் அத்துமீறி உள்நுழையும் ஊடுருவல்காரர்களை பிடிப்பதற்காக 24 மணிநேரமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புனித மக்காவின் கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் கூறும் போது, ஈரானிய ஹஜ் யாத்ரீகர்களுக்காக எத்தகைய தனிச்சிறப்பு வசதிகளோ அல்லது வாக்குறுதிகளோ தரப்படவில்லை என்றும் ஹஜ் செய்ய வந்துள்ள பிற அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு தரப்படும் அதே வசதிகள் மட்டுமே ஈரானிய ஹஜ் பயணிகளுக்கும் சம அளவில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிலிருந்தும் ஹஜ் யாத்ரீகர்கள் நஜ்ரான் மாகாணத்தின் சஹாரா பிரதேசத்தில் அமைந்துள்ள 'அல் வஹீதா' சாலை எல்லை வழியாக ஹஜ்ஜூக்காக வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு கையேடுகள் அனைத்தையும் வழங்கி வருவதுடன் சவுதி செம்பிறைச் சங்கத்தின் சார்பாக ஏமன் ஹஜ் பயணிகள் எல்லை வழியாக உள்நுழைவதிலிருந்து மக்காவை அடையும் வரை 11 முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்களும் மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வல்லரசுகளால் ஏழையாக்கப்பட்ட நாடான ஆப்கானிற்கு 30,000 ஹஜ் கோட்ட வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வரும் ஹஜ் பயணிகளில் பலர் வறுமையாலும், போராலும், பசியாலும் பாதிக்கப்பட்டவர்கள். இத்தகையவர் ஹஜ் செய்ய வரும் போது உறவினர்களுக்கு விருந்து தருவதும் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் போது மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொண்டு செல்வது போன்ற அனாவசிய பழக்கங்கள் நிலவுகின்றன, இந்த பழக்கங்களை ஆப்கானியர்கள் கைவிட வேண்டும் என்றும், முதன்முறையாக ஹஜ் செய்ய விரும்பும் பலருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்வதை ஆப்கானியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஆப்கானிலிருந்து ஹஜ்ஜூக்கு வருகை தந்துள்ள ஹஜ் யாத்ரீகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 23
சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் நேற்று மாலை கூடி துல்ஹஜ் பிறை குறித்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அமீரக அரசும் தனது ஊழியர்களுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) அரஃபா தினம் முதல் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு தனியார் துறை விடுமுறை குறித்து வெளியாகவில்லை. மேற்படி தேதியில் மாற்றமிருந்தால் மட்டுமே அதுகுறித்த தகவல்களை வழங்குவோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

புனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட குடைகள் அமைக்க திட்டம் !

அதிரை நியூஸ்: ஆக. 23
புனிதமிகு மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீஃபை சுற்றியுள்ள திறந்தவெளி முற்றங்களில் புனித மஸ்ஜிதுன்னபவியில் அமைக்கப்பட்டுள்ளதை போன்ற பிரமாண்ட குடைகள் அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட ஆய்வு திட்டங்கள் நிறைவுற்றுள்ளன.

புனித மதினாவில் உள்ள குடைகளின் அளவு 25 X 25 ஆனால் புனித மக்காவில் அமைக்கப்படவுள்ள குடைகளின் அளவோ 53 X 53. இதுபோன்ற பிரம்மாண்ட அளவில் குடை வடிவங்கள் உலகில் எங்குமே இதுவரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குடைகள் புனிதப் பள்ளியின் முற்றங்களில் மட்டுமல்லாது மொட்டை மாடிப் பகுதியிலும் அமைக்கப்படுகின்றன. இந்த குடைகள் அமைக்கப்படுவதற்கான வேலைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் துவங்கும்.

இந்த வருடம் நிறைவடைந்த மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதிகளின் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால் கூடுதலான யாத்ரீகர்கள் எளிதாகவும், விரைவாகவும் தவாப் செய்ய இயலும்.

ஹஜ் யாத்ரீகர்கள் தவாப் சுற்றும் போதும், புனிதப் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும், புனிதப் பள்ளியை சுற்றியுள்ள சாலைகளிலும் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறிய வகை நவீன கருவிகள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 5,900 நவீன கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இம்முறை டிரோன்கள் (drones) எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் சந்தேக நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த வருடம் 9,500 சிறப்பு கூடுதல் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 6,000 பேர் புனித ஸ்தலங்களான மினா, அரஃபா, முஜ்தலிபா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 'அல் மஷாயர்' எனப்படும் மெட்ரோ ஸ்டேஷன்களில் ஹஜ் யாத்ரீகர்கள் இலகுவாக பயணம் செய்யவும் விரைவாக கடக்கவும் உதவுவார்கள். எஞ்சிய 3,500 பேர் புனித ஸ்தலங்களை சுற்றி போக்குவரத்து ஒழுங்குகளை போலீஸாருடன் இணைந்து மேற்கொள்வர்.

அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஹஜ் யாத்ரீகர் எங்கும் தேங்காமல் முறையாக புனித ஸ்தலங்களுக்கிடையே கடந்து செல்ல குழுவிற்கு தகுந்தவாறு நேரம் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்கவும் உதவவும் சுமார் 15,000 சமூக ஆர்வலர்களும், மாணவ தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எவராவது குறிக்கப்பட்டுள்ள நேரத்தை மீறினால் அல்லது தேங்கினால் அல்லது உட்கார்ந்து கொண்டால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவதுடன் அவர்கள் மீது கடும் அபராதங்களும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு !

அதிரை நியூஸ்: ஆக. 23
இந்த வருட ஹஜ்ஜை சிறப்பிக்கும் வண்ணம் சவுதி தபால் துறை 2 ரியால் மதிப்பு கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டாம்பில் புனித கஃபா மற்றும் ஹஜ் யாத்ரீகர்கள் பின்னனியில் இடம் பெற்றுள்ளதுடன் 'ஹஜ் ஓர் வழிபாடு மற்றும் ஓர் நாகரீக நடத்தை'  (Haj is a worship and a civilized behavior) என்ற பொருள்படும் அரபு வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அதிரடி கைது!

அதிரை நியூஸ்: ஆக. 23
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மாநகரில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான பயங்கர ஆயுதங்களும், பல நாட்டு பணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கொள்ளை கும்பலில் 11 ஆப்கானியர்கள், 4 சவுதிக்கள், 2 இளம் பெண்கள், எகிப்து, மொராக்கோ, ஏமன் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 3 ரிவால்வர்கள், 1 மெஷின் கன், 44 வெடிப் பொருட்கள், ஹஷீஷ் எனும் போதை மருந்து, மொபைல் போன்கள், 176,322 சவுதி ரியால்கள், 105,400 அமெரிக்க டாலர்கள், 80,000 யூரோக்கள் மற்றும் 34,729 எகிப்திய பவுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டு திருட்டுக்கார்களில் தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. மேலும் கடந்த வாரம் ரியாத்தில் நடைபெற்ற 3 தனித்தனி சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து இவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெருநாள் !

அதிரை நியூஸ்: ஆக. 23
சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அமர்வு நேற்றிரவு கூடியது. நேற்று (ஆக.23) இரவு பிறை காணப்பட்ட ஊர்ஜிதமான செய்திகளும் கிடைத்ததை அடுத்தும், துல் காயிதா மாதம் 30 நாட்களுடன் பூர்த்தியானதை தொடர்ந்தும் நேற்று இரவு துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை பிறந்ததால் இன்று (ஆக.23) முதல் பிறை தினமாக அனுசரிக்கப்பட்டு ஹஜ் கிரிகைகள் துவங்குகின்றது.

எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஹஜ் கிரிகைகளின் முக்கிய நிகழ்வான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுதலும் குத்பா பிரசங்கமும் நடைபெறும். அதேவேளை அரஃபா மைதானத்தில் உள்ள ஹாஜிகளை தவிர்த்து மற்ற உலக முஸ்லீம்கள் அனைவரும் சுன்னத்தான அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.

செப்டம்பர் 1 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத் திருநாள் கொண்டாடப்படும். சவுதியின் பிறை அறிவிப்பை பின்பற்றியே வளைகுடா அரபு நாடுகள் அனைத்தும் அன்றைய தினம் பெருநாள் தின கொண்டாட்டங்கள் மற்றும் விடுமுறைகளை அமைத்துக் கொள்கின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, August 22, 2017

அதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை மூடக் கோரி, காவல்நிலையத்தில் தமுமுக புகார் !

அதிராம்பட்டினம், ஆக. 22
உயர்நீதி மன்ற உத்தரவை மீறி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, சட்டவிரோதமாக இயங்கிவரும் மதுபானக் கடையை மூடக்கோரி, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதன் நிர்வாகிகள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகார் மனு அளித்தனர்.

தமுமுக மாவட்டத் தலைவர் அஹமது ஹாஜா, துணைத் தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, தமுமுக அதிரை பேரூர் செயலாளர் கமாலுதீன், பொருளாளர் யூசுப், துணைச்செயலாளர் தமீம், சலீம், சமூக ஆர்வலர் அஜ்வா நெய்னா உள்ளிட்ட தமுமுகவினர் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
 

அதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 22
அதிமுக கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி நீக்கப்படுவதாக, டிடிவி தினகரன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைக்கண்டித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை தலைமையில், டிடிவி தினகரன் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி 'சசிகலா ஒழிக...', 'டிடிவி தினகரன் ஒழிக' என கட்சியினர் முழக்கமிட்டனர்.

இப்போராட்டத்தில், முஹம்மது தமீம், சிவக்குமார், துரை.பாஞ்சாலன், கு.பாஞ்சாலன், லியாகத் அலி, ராமராஜ், யஹ்யா கான், தமீம் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திறன் கண்காட்சி !

அதிராம்பட்டினம், ஆக. 22
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திறன் கண்காட்சி விழா இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக எஸ். சுப்பையன் கலந்து கொண்டார்.

ஆங்கில மொழியில் உரையாடி சிறப்பிடம் பெற்ற 53 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில்,
ஆங்கில மொழி பயிற்றுநர்கள் அருண்குமார், விவேக், ஹாஜா நவாஸ் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

அதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ~ வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வாயிலில்
பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பல்கலைக் கழக ஆசிரியர் சங்கக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். மேலும், 1 நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் டி.லெனின் தலைமை வகித்தார். துணைச்செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், துணைத் தலைவர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், பொருளாளர் பேராசிரியர் எம்.பிரேம் நவாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

சங்கச் செயலர் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் சங்கப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 

சவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மையம் திறப்பு

அதிரை நியூஸ்: ஆக. 22
உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி, ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் உலக மக்கள் புகை பிடிப்பு மற்றும் பல்வேறு புகையிலை பழக்கங்களால் உயிரிழக்கின்றனர். சவுதி அரேபியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 70,000 பேர் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

எனவே, புகைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாராங்களை ஒருபுறம் துவக்கியுள்ள சவுதி சுகாதாரத்துறை புகைப்பிடிக்கும் ஆண், பெண் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 31 சிகிச்சை மையங்களை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் துவக்கியுள்ளனர். அதனடிப்படையில், அபஹா நகரில் ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியே சிகிச்சையளிக்கும் மையங்களை துவக்கியுள்ளதுடன், இங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் புகைப்பழக்கத்தை மறந்த புது மனிதர்களாக வீடு திரும்பலாம்.

மேலும், சவுதி வாழ் மக்கள் மத்தியிலிருந்து புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் சிகரெட் விலையின் மீது காலல் வரிகள் 2 மடங்காக உயர்த்தப்பட்டது. அதேபோல், சவுதி அரசின் பட்ஜெட்டிலும் புகை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சேர்மன் விருப்ப மனு தாக்கல் !

அதிராம்பட்டினம், ஆக. 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் விருப்ப மனுவை செவ்வாய்க்கிழமை மாலை தாக்கல் செய்தார்.

அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத் நிர்வாகத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, தற்போதைய நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் வருகிற செப். 15 ந் தேதியுடன் முடிவு பெற உள்ளதை அடுத்து, வரும் செப். 15 ந் தேதி, சங்க அலுவலகத்தில் நிர்வாகத் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 5 நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் சம்சுல், இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, சங்கத் தலைவர் ஹாஜி முகம்மது ஹசன் அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார். அருகில் சம்சுல் இஸ்லாம் சங்கப் பொருளாளர் ஹாஜி ஜலீல் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் உடன் இருந்தனர்.
 

துபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட்டம் விரிவாக்கம்

அதிரை நியூஸ்: ஆக.22
துபையில் 'DEWA' எனப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீர் பகிர்மான நிறுவனத்தின் மாதாந்திர கட்டணங்களை கட்டுவதற்கு பல்வேறு எளிய வழிகள் நடைமுறையில் உள்ளன நிலையில் மேலும் பல ஸ்மார்ட் திட்டங்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

மின் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்துவதற்கு எமிரேட்ஸ் என்பிடி பேங்க் (Emirates NBD) கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி தவணைமுறையில் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது இந்த வசதி மஷ்ரெக் பேங்க் (Mashreq Bank) கிரடிட் கார்டுதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி 'தேவா' கட்டணங்களை எத்தகைய வட்டியோ அல்லது கூடுதல் சேவைக்கட்டணங்களோ இன்றி 3 முதல் 6 மாத காலத்திற்குள் செலுத்தலாம்.

இதுபோன்ற ஸ்மார்ட் திட்டங்கள், ஆன்லைன் சேவை மற்றும் தேவா ஆப்களை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களுக்கு வருவது சுமார் 80 சதவிகிதம் குறைந்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...