Pages

Wednesday, August 2, 2017

ஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் பயணிகளுக்கு சவூதி மீண்டும் அழைப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 02
சவுதி உட்பட 4 அரபு நாடுகளுக்கும் அதன் அண்டை அரபு நாடான கத்தாருக்கும் இடையில் வெளிப்படையாக சொல்லப்பட்டும், சொல்லப்படாத சில பல காரணங்களால் ராஜிய உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் புனித ஹஜ் யாத்திரை தற்போது இருநாடுகளுக்கிடையேயான அரசியலாக மாற்றப்படும் சூழல் எழுந்துள்ளது.

கத்தார் அரசு தங்கள் நாட்டு ஹஜ் பயணிகள் தடுக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள நிலையில் சவுதி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன் புனித மக்கா நகரின் அஸீஸியா மாவட்டத்தில் அலாவி துனிஸி மருத்துவமனை அருகிலுள்ள கத்தார் நாட்டின் ஹஜ் விவகாரங்களுக்கான அலுவலகம் பூட்டியே கிடப்பது கத்தார் நாடு இந்த வருட ஹஜ்ஜை புறக்கணிப்பதற்கான திட்டத்தின் அறிகுறியாக தெரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், கத்தார் நாட்டின் ஹஜ் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்களும், மினா கூடாரங்களும், அவர்களுக்கான இன்னபிற வசதிகளும் ஹஜ் காலம் முடியும் வரை அப்படியே தொடரும் என்றும் அவை பிறருக்கு ஒதுக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளது.

மேலும், கத்தார் பிரஜைகளுக்கான ஹஜ் பெர்மிட்டுகள் கத்தார் தலைநகர் தோஹாவில் தயார் நிலையில் இருப்பதால் உடனடியாக அதை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேபோல் ஈரானும் கடந்த வருட ஹஜ்ஜை புறக்கணித்திருந்த நிலையில் இந்த வருடம் முதல் மீண்டும் ஹஜ் பயணிகளை அனுப்ப சம்மதித்துள்ளது. சுமார் 86,500 ஈரானிய ஹஜ் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 375 பேர்கள் அடங்கிய அதன் முதலாவது பயணக்குழு நேற்று வருகை தந்துள்ளது.

இதற்கிடையில், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு 'ஹஜ் ஓர் புனித வணக்கம் மற்றும் நாகரீக நடத்தை' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை புனித மக்காவின் துணை கவர்னர் இளவரசர் அப்துல்லா பின் பந்தார் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஹஜ் கடமைகளுடன் தொடர்புடைய 30 அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் சுய கட்டுப்பாடு காத்தல், முறையான ஹஜ் பெர்மிட்டுகளை பெற்றுக் கொள்ளுதல், 5 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்ய வேண்டுதல், சுத்தமான சுற்றுச்சூழலை பேணுதல், தெருக்களுக்குரிய உரிமையை இஸ்லாமிய முறைப்படி பேணுதல், ஜன நெரிசல்கள் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்த்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், இந்த வருடம் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹரம் ஷரீஃபின் விரிவாக்கப் பகுதிகளையும், ஹஜ் பயணிகளை வரவேற்பதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகளையும் புனித ஹரம் ஷரீஃபின் தலைமை இமாம் மற்றும் 2 புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைவருமான ஷேக். அப்துல் ரஹ்மான் சுதைசி அவர்கள் ஆய்வு செய்தார்.

தீயணைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பாக விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி உள்நுழைவுகள் மூலம் வருகை தரும் ஹஜ் பயணிகள் மத்தியில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டு நோட்டீஸ்கள், பவர் பாயிண்ட் திரை விளக்கங்கள், அவசரகால தேவையின் போது கடைபிடிக்க வேண்டிய பண்புகள் குறித்தும் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

சுரங்கவழிப் பாதைகளில் வாகனத்தை செலுத்துவது, பாதசாரிகள் பேண வேண்டிய ஒழுங்குகள் மற்றும் மஷாயிர் எனப்படும் மெட்ரோ ரயில் சேவையை கவனமுடன் பயன்படுத்துதல் குறித்தும் தீயணைப்புத் துறையால் எடுத்துரைக்கப்படுகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...