Pages

Tuesday, September 5, 2017

'என்னைச் செதுக்கிய ஆசிரியச்சிற்பிகள்' ~ முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன்

அதிராம்பட்டினம், செப்.05
ன்று செப்டம்பர் 5 ம் நாள், ஆசிரியர் தினம், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள். இன்றைய நாளில் என் நெஞ்சினின்றும் நீங்காது நிலைத்திருக்கும் என்னுடைய ஆசிரியர்கள் சிலரை நினைவுகூற விரும்புகிறேன்.

என்னுடைய 7 வயதில் அதிராம்பட்டினம் தச்சர் தெருவிலிருந்த முஸ்லீம் ஆரம்ப பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அங்கே அப்போது முதல் வகுப்பின் ஆசிரியையான செல்வி ஜெயலட்சுமி அவர்கள்தான் எனது கல்வி வாழ்க்கையின் முதல் ஆசிரியர். எனது இளம் விரல்களைப் பிடித்து 'அ, ஆ, இ, ஈ.... மற்றும் 1,2,3,4 ...' என எழுதப் பழக்கித் தந்த, அந்த ஆசிரியை இன்றும் என் நினைவில் நிற்கிறார். அந்த ஆசிரியையின் சிறந்த வழிகாட்டுதலாலும், அதை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டதாலும் அரையாண்டுத் தேர்வின் போது 'இரட்டைத் தேர்ச்சி' முறையில் இரண்டாம் வகுப்புக்கு உயர்த்தப்பட்டேன்.

இரண்டாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக வாய்த்தவர் திரு. அப்துல் கறீம் அவர்கள். அரையாண்டு தேர்வுக்குப் பின் இரண்டாம் வகுப்புக்கு வந்ததால் எனக்குத் தனிப் பயிற்சி (Private Tuition) தேவைப்பட்டது. பள்ளிக்கருகிலேயே ஓர் அறையில் தங்கியிருந்த ஆசிரியர் திரு. அப்துல் கறீம் அவர்களிடம் தனிப்பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அப்போது அவர் 'குமுதம்' மற்றும் 'கல்கண்டு' வார இதழ்களுக்கு அதிராம்பட்டினத்திற்கான ஏஜெண்டாக இருந்தார். தனிப்பயிற்சி வகுப்புக்கு அங்கு செல்லும் போதெல்லாம் சிறுவர்களுக்கான கல்கண்டு இதழை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுத் தொடர்ந்து வாசிக்கலானேன். அதற்கு ஆசிரியரும் அனுமதி தந்திருந்தார். அதனால் எனது 8 வயதிலேயே தமிழ் மொழியில் சரளமாக வாசிக்கும் திறனைப்பெற முடிந்தது. இத்தைகைய வாய்ப்புக்குக் காரணமான ஆசிரியர் திரு. அப்துல் கறீம் அவர்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறார்.

நான்காம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக அமைந்தவர் திரு. டேவிட் ஃபிலிப்ஸ் அவர்கள். (அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் திருமதி தபிதாவின் அம்மா வழித் தாத்தா ) கண்டிப்பு மிகுந்தவர். நன்கு படிக்காத, ஒழுக்கமாக நடந்துகொள்ளாத மாணவர்களை வழிக்குக் கொண்டுவரப் பிரம்பால் அடிக்கத் தயங்காதவர். மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லையென்றால் மூன்றாம் நாள் அந்த மாணவனின் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவார். அவருடைய புதல்வர் திரு. அற்புதராஜ் உயர்நிலைப்பள்ளியில் எனது வகுப்புத் தோழர். அவருடைய மகள் கிறிஸ்டில்டா, பேத்திகள் லிடியா, தபிதா மூவரும் எனது முன்னாள் மாணவிகள்.

காதிர் முகைதீன் உயர் நிலைப்பள்ளியில் ( தற்போது மேல்நிலைப்பள்ளி ) 10 மற்றும் 11 ம் வகுப்புகளில் படித்த காலத்தில் எனக்குக் கணித ஆசிரியராக இருந்தவர். திரு. சீனிவாச கோபாலன் அவர்கள். சிறந்த காந்தியவாதியாகத் திகழ்ந்த அவர் மொழிப்பற்றும், தேசப்பற்றும் மிக்கவர். பிற்காலத்தில் நான் கணித ஆசிரியராக வருவதற்கும், ஓரளவு பேசத் தெரிந்த மேடைப் பேச்சாளனாக உருவாவதற்கும் காரணமானவர் அவரே. வாரம் ஒருமுறை தேசியம், சமூகம், ஒழுக்கம் சார்ந்த நல்ல தலைப்புகளைத் தந்து மாணவர்களைப் பேச வைத்து சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார். அவர் ஆசிரியர்ப் பணியை எந்த அளவுக்கு நேசித்தார் என்றால், ஆசிரியர் பணியில் கிடைத்த ஊதியத்தைவிடப் பல மடங்கு ஊதியம் உள்ள LIC ல் கிடைத்த பணியைத் துறந்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

காதிர் முகைதீன் உயர் நிலைப்பள்ளியில் நான் 11-ம் வகுப்பு (SSLC) படித்த போது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தவர் திரு. ஜேம்ஸ் வேதநாயகம் அவர்கள். கண்டிப்பு மிக்கவர். தன்னுடைய மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது இலக்கியம், கலை, விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு சிறப்படைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர். அந்த ஆண்டு பள்ளியின் சார்பாக 20 மாணவர்கள்  அரசுப் பொதுத் தேர்வு எழுதினோம். அதில் நான் உட்பட 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றோம். காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு. என்.எம் முஹம்மது ஹனீபா (ஹனீபா சார்) அவர்களும் ஒருவர். எங்கள் 5 பேரில் வேணுகோபால் என்ற மாணவர் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். தேர்ச்சி பெற்ற 5 பேரும் பள்ளித் தலைமையாசிரியரை அவரது அறையில் சந்தித்தோம். அப்போது தலைமையாசிரியர் என்னை மட்டும் அழைத்துக் கைகுலுக்கிப் பாராட்டினார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். "ஹாஜா முகைதீனைத் தவிர மற்ற நால்வரையும் வகுப்பறையைத் தவிர்த்து வேறெங்கும் நான் பார்த்ததில்லை. ஹாஜா முகைதீன் மட்டுமே கட்டுரை, பேச்சு, நடிப்பு, விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளான். அவனைப் போன்றவர்களுக்குத்தான் எனது பாராட்டு கிடைக்கும்" என்றார். அந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. நான் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியாராகப் பணியாற்றிய காலத்தில் முடிந்தவரை என்னுடைய முன்னாள் தலைமையாசிரியர் திரு. ஜேம்ஸ் வேதநாயகம்அவர்களையொற்றி செயலாற்றிருக்கிறேன் என்பதை என்னுடைய முன்னாள் மாணவர்கள் அறிவர்.

கல்லூரி வாழ்க்கையில் என்னை வார்ப்பெடுத்த ஆசிரியர்களில் முதன்மையானவர்களாக பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் அவர்களையும், பேராசிரியர் டி. ஜெயராஜன் அவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும். கல்லூரித் தமிழ்த் துறை தலைவராகவும், பின்னாளில் முதல்வராகவும் பணியாற்றிய பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்கள், நான் பி.எஸ்சி இறுதியாண்டு படித்தபோது 'தமிழ் இலக்கிய வரலாறு' பாடம் எடுத்தார். அந்த வகுப்புதான் பின்னாளில் நான் ஓரளவு இலக்கிய அறிவு பெற்று விளங்கியதற்கு அடித்தளமாக அமைந்தது. 'அழகுத் தமிழுக்கோர் அப்துல் கஃபூர்' எனப் போற்றப்பட்ட அவருக்கு அதிரை செக்கடிப் பள்ளி திறப்பு விழாவின் போது அதிரை பொதுமக்கள் 'இறையருட் கவிமணி' எனச் சிறப்புப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டி ஜெயராஜன் அவர்களோடு எனக்குப் பாடத் தொடர்பு இல்லைஎன்றாலும் நான் எனது எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வதற்குக் காரணம் அவர்தான் என்பேன். கல்லூரி ஆண்டு மலருக்குப் பொறுப்பாளராக இருந்த அவர் மலருக்கு என்னை எழுதுமாறு வற்புறுத்துவார். படிப்பு முடிந்து நான் ஆசிரியராகப் பணியாற்றிய போது, பள்ளி ஆண்டு விழா மேடைகளில் அரங்கேறியதும், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஒலிப்பரப்பாகியதுமான 'மாவீரன் அலெக்ஸ்சாண்டர்', மற்றும் 'தீரன் திப்பு சுல்தான்' நாடகங்களை நான் எழுதுவதற்குத் தேவையான வரலாற்றுக் குறிப்புகளை வழங்கி உதவிய பேராசிரியர் ஜெயராஜன் அவர்களும் என் நினைவிலிருந்தும் நீங்காதவர்.

இவ்வாண்டு ஆசிரியர்கள் தினத்தன்று என்னுடைய முன்னாள் ஆசிரியர்களை நினைவு கூர்வதற்கு வாய்ப்பளித்த 'அதிரை நியூஸ்' ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

5 comments:

 1. அருமையான, உயிர் நினைவான, உன்னதமான தொகுப்பு. மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை, கண்களில் நீர் திவலைகள் ததும்பின.

  ReplyDelete
 2. முகநூலில் Ahamed Thameem கூறியது;
  Haji Janab S. K. M. Haja Mohideen is a one of the best Mathematician teacher in KMHS school and his ideas many times proved

  ReplyDelete
 3. 'எழுத்தாளர்'இப்ராஹீம் அன்சாரி வாட்ஸ்அப்பில் கூறிய கருத்து;

  நீங்கள் சிற்பியாக இருந்து செதுக்கிய பல மாணவர்களில் நானும் ஒருவன். இது எனது வாழ்நாள் பெருமை சார்.

  ReplyDelete
 4. Anwardeen MA முகநூலில் கூறிய கருத்து;

  எங்களுக்கு நல் அறிவை மட்டும் ஊட்டிய ஆசான் அல்ல நல்லொழுக்கத்தையும் ஊட்டிய ஆசான் , நூறாண்டு வாழ்வாங்கு வாழ துவா செய்கிறேன்

  ReplyDelete
 5. கல்வி அறிவையும் உலக அறிவையும் பிரம்பால் அல்லாமல் அன்பால் மட்டுமே போதித்த நீங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆசான் , எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...