Pages

Tuesday, October 17, 2017

சவுதியில் வாழும் 111 வயது முதியவரின் சுவராசியமான நினைவுகள்!

அதிரை நியூஸ்: அக். 17
சவுதி ஆவணங்களின்படி தற்போது 111 வயதை கடந்து வாழும் குனைபர் அல் தியாபி என்ற அரபியர் உண்மையில் நான் 120 வயதுக்கு மேற்பட்டவன் என்கிறார். அவருடைய நீண்ட வாழ்விற்கு இறைவனின் கருணையே காரணம் என்றும் வேறு ரகசியங்கள் ஏதுமில்லை என்றும் கூறும் குனைபர் அல் தியாபி (Khunaifar Al Dhiyabi) பெரும்பாலும் பேரீத்தம் கனிகளையும், ஒட்டகப் பாலையுமே உணவாக உட்கொள்கிறார். அதேபோல் பாலைவனத்தில் தினமும் சிறிது தூரம் நடப்பதற்கும் தவறுவதில்லை.

அவருடைய தினசரி வாழ்க்கை மிகவும் எளிமையானது. தினமும் அதிகாலை பஜர் தொழுகைக்காக எழுபவர் பின் சிறிது நேரம் தனது குடும்ப அங்கத்தவர்களுடனும் ஒட்டகங்களுடனும் செலவிடுவார்.

இளைஞர்களுக்கான அறிவுரையாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள், உணவகங்களில் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்கிறார். தற்போதும் தான் நடக்கும் சக்தியுடனும், சுயமாக நாற்காலிகளில் அமரவும் முடியும் என்றும் தான் கண்ணாடி அணிந்தாலும் தெளிவான ஞாபக சக்தியும், கேட்கும் திறனும் உள்ளதென்றும், சவுதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், தேதிகள், வளர்ச்சிகளை தன்னால் தெளிவாக நினைவுகூற இயலும் என்கிறார்.

இருமுறை திருமணம் செய்து கொண்ட அல் தியாபி அவர்களுக்கு மொத்தம் 7 மகள்களும் 4 மகன்களும் வாரிசாக உள்ளனர். இவர்கள் மூலம் 38 பேரன் பேத்திகள் உள்ளனர் என்றாலும் அவர்கள் அனைவருடைய பெயரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை என்று அங்கலாய்க்கிறார் இந்த வரலாற்று மனிதர். தன்னுடைய மாமி தன்னைவிட அதிக வயதுடனும் மிகுந்த ஞாபக சக்தியுடனும் வாழ்ந்தார் என்றும் நினைவுகூர்கின்றார்.

கடினமான அந்தக் காலத்தில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே தயாராகி பயணமாவதையும், தான் 3 முறை ஒட்டகத்தில் பயணித்து ஹஜ் செய்துள்ளதையும் அதில் ஒருமுறை சவுதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துல் அஜீஸ் பின் அல் சவூது அவர்களை அரபாத் மலையில் வைத்து நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.

மன்னர் அப்துல் அஜீஸ் பின் அல் சவூது சிறந்த இமாம் (தலைவர்) என்றும் அருமையான மனிதர் என்றும் புகழ்கிறார். மேலும், தனது வாழ்நாளில் ஒருங்கிணைக்கப்பட்ட சவுதி அரேபியாவின் அனைத்து மன்னர்களின் காலத்திலும் வாழ்ந்துள்ளார். தனது நாட்டின் அரசர்கள் மீதும் விசுவாசம் வைப்பதில் பேருவுவகை கொண்டுள்ளார்.

தனது இளமை காலங்களில் சவுதியில் பழங்குடியினர் மத்தியில் எவ்வாறு நீதிமுறை இருந்தது என்பதையும், வழக்குகள் எவ்வாறு விசாரித்து தீர்க்கப்பட்டன என்பதையும் நினைவுகூறும் அல் தியாபி, அப்போது சிறைச்சாலைகள் இருந்ததில்லை மாறாக வழக்குகளை விசாரிக்க ஒன்றுகூடும் பழங்குடியினத் தலைவர்கள் விசாரனைக்குப் பின் தீர்ப்புகளை கூறுவார்கள், அவர்களின் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டாயம் கட்டுப்பட வேண்டும், அந்தத் தீர்ப்புகளை எதிர்க்கவோ, மறுக்கவோ யாருக்கும் உரிமை கிடையாதாம்.

பல கூறுகளாக பிரிந்தும், சமூக பாதுகாப்பு இன்றியும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், கொள்ளையடித்துக் கொண்டும், கொலை புரிந்து கொண்டும் இருந்த பழங்குடி சிற்றரசுகளை வீழ்த்தி இன்றைய ஒரே சவுதி அரேபியாவாக மன்னர் அப்துல் அஜீஸ் எவ்வாறு ஒருங்கிணைத்தார் என்பதும் அதன் விளைவாக நாட்டிற்கு ஏற்பட்ட நன்மைகளும் தனது நினைவில் பசுமையாக உள்ளதாக கூறுகிறார்.

ஆரம்ப காலங்களில் தகவல் தொடர்பு விஷயங்களில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாகவும், அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்லும் நபர்கள் உயிருடன் திரும்பி வந்தாலோ அல்லது பிற பயணிகள் பார்த்ததை சொன்னாலோ தான் உறவினர்களை பற்றிய நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றும், சிலவேளை தங்களது உறவினர்கள் நிலை குறித்து அறிய 5 நாட்கள் கூட ஆகுமாம்.

தனது தாத்தா முஸ்லீஹ் அல் தியாபி ஒருமுறை 50 ஒட்டகங்களை தனது பழங்குடி இன உறவுகளுக்கு அன்பளிப்பாக வழங்கி அதை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொள்ளச் சொன்னதையும் நினைவு கூர்ந்தார்.

ஓரளவு வசதிமிகு குடும்பத்தில் பிறந்ததால் இவர் பிற வேலைக்கு செல்வதை குடும்பம் விரும்பவில்லையாம் அதனால் ஓட்டகங்களை மேய்ச்சலுக்கு அனுப்பி பாதுகாக்கும் பணியிலேயே இருந்துள்ளார், அன்றைய சூழலில் ஒட்டகங்களை பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததாம்.

மேலும் ஒட்டகங்களின் குணாதியங்களையும், ஞாபக சக்தியையும் வியந்து போற்றுகின்ற அல் தியாபி, ஒருமுறை ஜோர்டான் தலைநகர் அம்மானில் கொண்டுபோய் விற்கப்பட்ட ஒட்டகம் ஒன்று ஒரே வருடத்திற்குள் மீண்டும் சவுதி ஹிஜாஸ் பகுதியிலுள்ள விற்றவரிடமே திரும்பி வந்துவிட்டதாம்.

அல் தியாபி அவர்களின் சிறுபிராயத்தில் சுமார் 40 ரியால்களுக்கு விற்பனையான ஒட்டகங்கள் தற்போது மில்லியன் கணக்கான ரியால்களுக்கு விலை போவது குறித்து 'உலகம் ரொம்பவும் தான் மாறிவிட்டது' என ஆச்சரியப்படுகின்றார்.

பொதுவாக, அரபுநாடுகளில் வாழும் முதிய மனிதர்களின் பிறப்பு பற்றிய ஆவணங்கள் இல்லாததால் பலருடைய உண்மையான வயதை கணக்கிட முடியாமல் உள்ளன. கடைசியான 2013 ஆம் சவுதியில் தனது 154 வயதில் இறந்த முஹமது பின் ஸரய் (Mohammad Bin Zarei) அவர்களே 'நூறாண்டு கண்டவர்களின் தலைவர்' (the Dean of Centenarians) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டவர். இவருடைய 10 மனைவியர்களும் மூலம் வாரிசுகளாக பிள்ளைகள், பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரப் பிள்ளை என மொத்தம் 180 பேர் உள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. //சிரியா நாட்டின் அம்மான் நகரில்//

    அம்மான் நகர் சிரியாவில் இல்லை. அது அடுத்துள்ள ஜோர்டான் நாட்டின் தலைநகர்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி !

    பிழை திருத்தப்பட்டது...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...