Pages

Sunday, October 22, 2017

முகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை சந்தித்த துபைவாழ் இந்திய தொழிலதிபர் !

அதிரை நியூஸ்: அக். 22
முகநூல் உதவியால் வளர்ப்புச் சகோதரியை 62 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த துபைவாழ் இந்திய தொழிலதிபர்

இளமைப்பருவத்தின் பசுமையான நினைவுகளைப் பற்றி எண்ணி மருகாத மனித உள்ளங்கள் இருக்க வாய்ப்பேயில்லை. தனது இளமைப் பருவத்தில் உடன் வளர்ந்த 'இடா' (Ida) எனும் சகோதரியை சுமார் 62 ஆண்டுகளுக்குப் பின் முகநூல் உதவியால் கண்டுபிடித்து அரிய நினைவுகளை பகிர்ந்து கொண்டவர்களைப் பற்றிய பதிவிது.

துபையில் வாழும் இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவர் அஸ்கர் ஷகூர் பட்டேல். இவர் அரபுநாடுகளில் வாழும் பணக்கார இந்தியர்களின் பட்டியலில் 61வது இடத்தில் இருக்கின்றார் என போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கின்றது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் பம்பாய் நகரில் வாழ்ந்த செல்வ செழிப்புமிக்க குடும்பம் இவருடையது. அஸ்கர் பட்டேல் 4 உடன்பிறந்தவர்களில் ஒருவர். நாடு சுதந்திரம் அடைந்தபோது தன்னுடைய குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்காட்லாந்தில் வாழும் தன்னுடைய நண்பரின் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார் அவரது தந்தை.

வளர்ப்பு அக்கா இடாவுடைய (அப்போது வயது 16) பெற்றோர்களையே தனது வளர்ப்புப் பெற்றோர்களாக ஏற்று இடாவின் குடும்பத்தின் சக பிள்ளையாக தனது 6 வயது முதல் 12 வயது வரை 'கிளாஸ்கோ' நகர 'ஹில்ஹெட் ஹைஸ்கூல்;' என்ற பள்ளியில் படித்தவாறு வளர்ந்தார் பட்டேல். இந்தக் காலக்கட்டத்தில் தான் வளர்ப்பு அக்கா இடாவுடன் மிகுந்த சகோதர வாஞ்சை ஏற்பட்டுள்ளது.

பின்பு 13 வது வயதில் பட்டேலின் தந்தை இவரையும் இவரது மூத்த சகோதரர் ஒருவரையும் லண்டன் நகரில் ஹாஸ்டல் வசதியுள்ள கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு மாற்றி 16 வயது வரை படிக்க வைத்தார் என்றாலும் இடாவின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தார்.

பின்பு இந்திய திரும்புவதற்காக கிளாஸ்கோ நகர ரயில் நிலையத்தில் இடாவின் குடும்பத்திற்கு கடைசியாக கையசைத்து டாடா காட்டி பிரிந்தவருக்கு மீண்டும் இடாவையும் அவரது குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவேயில்லை. அக்கா இடாவின் குடும்பம் வீடு மாறி சென்றுவிட்டதால் தொடர்பு முற்றிலும் அறுந்து போனது.

அஸ்கர் இடாவை சந்திக்க எடுத்த பல்வேறு முயற்சிகளும் கைகூடவில்லை. பின்பு பட்டேலும் தங்களது குடும்ப வணிக சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவிலும் அமீரகத்திலும் கட்டியெழுப்புவதில் கரைந்து போனார் என்றாலும் நினைவுகள் வளர்ப்பு அக்கா இடாவை நினைக்கத் தவறியதில்லை.

இடா என்ற பெயரில் உள்ள பல்வேறு முகநூல் ஐடிக்களின் வழியாக தனது வளர்ப்பு சகோதரியை தேடி வந்தவருக்கு ஒரு நாள் முகநூலில் Ida Wilde என்பவருடைய ஐடியில் பதிவேற்றப்பட்டிருந்த பழைய புரைபைல் போட்டோ பட்டேலின் இளமைக்கால நினைவுகளைத் தட்டியெழுப்ப இது Ida Moreland தானே என்று செய்தியனுப்பி விசாரிக்க, அவரும் ஆமாம் என பதிலளிக்க மீண்டும் துளிர்த்து பசுமையானது உறவுகள்.

தற்போது 83 வயதை கடந்துவிட்ட சகோதரியை சந்திக்க 78 வயது சகோதரன் விமானமேறி லண்டன் சென்று அங்கிருந்து ரயிலேறி கிளாஸ்கோ நகர் சென்று பின் அங்கிருந்து 1 மணிநேரம் பயணம் செய்து சகோதரி இடா வாழும் ஆய்ர்ஷையர் (Ayrshire) எனும் ஊருக்கு சென்று தனது அக்காவை சந்தித்து பசுமையான நினைவுகளை பகிர்ந்து வந்துள்ளார். தனது துபை வீட்டிற்கு எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் வருமாறு அழைப்பும் கொடுத்துள்ளார் அஸ்கர் ஷகூர் பட்டேல்.

ஒரு சிறுவனாக என் தம்பியை பிரிந்து ஒரு பணக்கார தொழிலதிபராக சந்திப்பது ஒரு இன்பக்கனவு போல் பரவசமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார் அக்கா இடா. பட்டேல் இன்னும் தன்னை நேசிப்பது அவரை ஓர் அழகான ஆண்மகனாக காட்டுவதாகவும் குறிப்பிடுகிறார் இடா.

இந்த மலரும் நினைவு ஸகாட்லாந்து பத்திரிக்கையில் வந்ததை தொடர்ந்து பலராலும் பாசத்துடன் பகிரப்பட்டு வந்தது துபையின் கல்ப் நியூஸ் வரை வந்துவிட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...