Pages

Saturday, October 7, 2017

பட்டுக்கோட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வலியுறுத்தல்!

பட்டுக்கோட்டை, அக். 07
பட்டுக்கோட்டையில் தாற்காலிகமாக அகற்றப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை அண்ணா நகர், ஓடக்கரை, லெட்சுமி நகர், பாரதி நகர், பூமல்லியார் குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எல்சி 94 ரயில்வே கேட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் நலச் சங்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் எஸ்.மார்டின் ரெக்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்குடி}திருவாரூர் வழித்தடத்தில்  அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை ரயில் நிலையம்  பட்டுக்கோட்டை ஜங்ஷனாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கு நவீன ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் தொடங்குவதற்கு முன் பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், கேஓஎன் பாளையம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலிருந்த எல்சி 94 என்ற ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

குறிப்பாக, பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு தென்புறம் உள்ள அண்ணாநகர், ஓடக்கரை, லெட்சுமி நகர், பாரதி நகர் ,பூமல்லியார்குளம், ஆர்.வி. நகர், சீனிவாசநகர், சிவக்கொல்லை, நயினாங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எல்சி 94 ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எல்சி 94 ரயில்வே கேட் தாற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால், தற்போது பட்டுக்கோட்டையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், அகற்றப்பட்ட இடத்தில் எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் நிறுவுவதற்கான எந்தப் பணிகளும் தொடங்கவில்லை.

இதனால் இந்த கேட்டை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, கடந்த  2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்சி 94 ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட அனுமதி வழங்கி அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, எல்சி 94 ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும், எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர வலியுறுத்தியும் பிரதமர், ரயில்வே துறை அமைச்சர், தமிழக முதல்வர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர்,  பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாசியர் ஆகியோருக்கு  மனு அனுப்பப்பட்டது.

மனு அனுப்பி பல மாதங்களாகியும் தற்போது வரை எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் அமைத்துத் தர  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, இப்பிரச்னையில் ரயில்வே துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்  இப்பகுதி மக்களை திரட்டி  தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...