Pages

Tuesday, October 17, 2017

உலகின் மிக பயனற்ற விமான நிலையத்திற்கு முதல் பயணிகள் விமானம் வருகை (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.17
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா நாட்டிற்கு மேற்கே சுமார் 1900 கி.மீ தூரத்தில் தெற்கு அட்லாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் எரிமலைகளுக்கு அருகே அமைந்துள்ளது செயின்ட் ஹெலீனா (St. Helena) எனும் குட்டித்தீவு. இதன் மொத்த மக்கள் தொகையே 4500க்குள் தான்.

1658 ஆம் ஆண்டு முதல் இது பிரிட்டீஷ் காலனியாக இருந்து வருகிறது. இந்தத் தீவில் சிறைவைக்கப்பட்ட பிரேஞ்சுப் பேரரசன் மாவீரன் நெப்போலியன் போனபர்ட் தனது கடைசி மூச்சை இங்கு தான் நிறுத்திக் கொண்டான் என்று நினைவுப்படுத்தினால் இந்த தீவைப் பற்றி பள்ளிக்கூட நாட்களில் படித்தது ஞாபகம் வரும்.

நம் அந்தமான் தீவில் இந்திய சுதந்திரப் போராளிகளை பிரிட்டீஷார் செல்லுலார் சிறையில் அடைத்து வைத்ததைப் போலவே தென் ஆப்பரிக்காவில் பிரிட்டீஷாருக்கும் போயர்களுக்கு (Anglo - Boer War) இடையே நடைபெற்ற போரில் பிடிபட்ட ஆப்பிரிக்க கைதிகள் சுமார் 6,000 பேரை அடைத்து வைத்திருந்தனர், அந்தக் கைதிகளின் கல்லறைகள் இன்றும் மௌன சாட்சியாய்.

சுற்றுலாவுக்கு ஏற்ற அழகியல் மிகுந்த இந்தத் தீவிற்கு செல்ல வேண்டுமானால் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் துறைமுகத்திலிருந்து புறப்படும் அஞ்சல் துறை கப்பலான  (RMS St. Helena, a British postal ship) என்ற கப்பலில் சுமார் 5 இரவுகள் பயணம் செய்தே அடைய முடியும்.

ஒழுங்கற்ற மலை முகடுகளும் பலத்த காற்றும் மிகுந்த இந்தத் தீவை வான் போக்குவரத்து மூலம் இணைப்பதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டு துவங்கிய விமான நிலைய கட்டுமான வேலைகள் ஒருவழியாக 2016 ஆம் ஆண்டு நிறைவு பெற்றாலும் இதுவரை சோதனை விமான ஓட்டங்கள் மட்டுமே அவ்வப்போது நடத்தப்பட்டு வந்தன.

இந்த விமான நிலைய கட்டுமானப் பணிகள் சுமார் 285 மில்லியன் பவுண்டுகளை விழுங்கியுள்ளதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு செயின்ட் ஹெலீனாவாசிகள் தலை மீது சுமார் 60,000 பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளன என்பதாலேயே இந்த விமான நிலையத்தை 'வெள்ளை யானை' என்றும் 'உலகின் பயனற்ற விமான நிலையம்' என்றும் அழைக்கின்றனர்.

அதன் பிறிதொரு காரணம் இந்தத் தீவிற்கு வருடத்திற்கு சுமார் 3,500 சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகின்றனர் என்பதும், சுமார் 100 ஹோட்டல் அறைகளே சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக உள்ளன என்பதும், இங்கிலாந்து அரசு வருடந்தோறும் 53 மில்லியன் பவுண்டுகளை தனது இருப்பிலிருந்து இத்தீவின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் வழங்கி வருவதுமே.

ஒருவழியாக, நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து புறப்பட்ட முதலாவது பயணிகள் விமானம் 68 பயணிகளுடன் வெற்றிகரமாக இந்த 'உலகின் பயனற்ற விமான நிலையத்தில்;' தரையிறங்கியது. இந்த வான் போக்குவரத்தின் மூலம் இத்தீவின் சுற்றுலா வருவாயும் அதையொட்டிய துணை வணிகங்களும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கேப் ஆப் பேடு ஹோப்' 'கேப் ஆப் குட் ஹோப்' என்று மாறியது போலவும், துருக்கி 'சிக் மேன் ஆப் ஐரோப்பா' என்ற தனது அவப்பெயரை துடைந்தெறிந்தது போலவும் ஒருநாள் இந்த செயின்ட் ஹெலீனா தீவின் விமான நிலையத்தின் அவப்பெயரும் மாற்றி எழுதப்படலாம். உலகெங்கும் வியாபித்திருக்கும் அதிரையர்கள் ஒருநாள் இங்கும் செல்லக்கூடும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...