Pages

Monday, October 16, 2017

அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணி ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை 3 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைப்பதற்காக, இப்பாதை, கடந்த 2012ல் மூடப்பட்டது. இத்திட்டத்தில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 73 கி.மீ., துாரத்தில் ரயில் பாதை மற்றும் நிலைய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, அதிராம்பட்டினம், திருநெல்லிக் காவல், மாங்குடி, மாவூர் சாலை, அம்மனுார், ஆலத்தம்பாடி, மணலி ஆகிய 7 இடங்களில் ரயில் நிலைய கட்டடங்கள், ரூ. 17.26 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டு, இதில், அதிராம்பட்டினத்தில் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கூடம், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையத்தின் கட்டுமானப்பணியின் பூமி பூஜை கடந்த ஜூலை 3 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில்,  420 மீட்டர் நீளத்தில் நடைமேடை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக நிலையத்தின் வடக்குப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. ரயில்நிலைய நடை மேடை ஏறக்குறைய 8 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையம் முகப்பில் உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முட்புதர்கள் மண்டிக்காணப்பட்டன. இவற்றை ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு அகற்றி, அந்த இடத்தை  தூய்மைபடுத்தி, அதில் மண் நிரப்பட்டுள்ளது. இதில்  வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கூடம், பயணியர் ஓய்வு அறை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் அடுத்து சில மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க, திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணியில் பட்டுக்கோட்டை முதல் முத்துப்பேட்டை வரையிலான தண்டவாளப் பகுதியில் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உதவி பொறியியாளர் தலைமையில் சிறப்பு அலுவலக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

பணியின் முதல் கட்டமாக 2 அடி உயரத்திற்கு மண் நிரப்பும் பணி நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்டமாக நடைபெறும் 2 அடி உயரத்தில் கிராவல் மற்றும் மணல் கலவை தயாரிக்கும் பணிக்காக,  குஜராத் மாநிலத்திலிருந்து நவீன கலவை இயந்திரம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்த இயந்திரத்தின் மூலம் 80 சதவீத கிராவல் மற்றும் 20 சதவீத மணல் நிரப்பி கலவை தயாரிக்கப்படுகிறது. இக்கலவை பட்டுக்கோட்டை முதல் முத்துப்பேட்டை வரையிலான ரயில் பாதையில் நிரப்பப்பட்டு வருகிறது.

மூன்றாம் கட்டப் பணிக்காக 1 அடி உயரத்தில் ஜல்லி கல் நிரப்பும் பணியும் நடந்து வருகிறது. இதையடுத்து நான்காம் கட்டப் பணியாக ஸ்லீப்பர் கட்டைகள், தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இவைகள் அனைத்தும் நிறைவுற்ற பிறகு எலெக்ட்ரிக்கல் பணியும், சிக்னல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
சேக்கனா நிஜாம், மணிச்சுடர் சாகுல் ஹமீது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...