Pages

Sunday, November 12, 2017

அதிரையில் 'பறவை ஆராய்ச்சியாளர்' டாக்டர் சலீம் அலி பிறந்தநாள் விழா (படங்கள்)

ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி இஸ்ரா பரிசு வழங்கி பாராட்டு
அதிராம்பட்டினம், நவ.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில். பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி பிறந்த நாள் விழா அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வழக்குரைஞர் ஏ. அப்துல் முனாப் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ் பல்கலைக் கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச.சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசியது;
'பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி. நோய்வாய்ப்பட்ட தனது இறுதி நாளில் தனது மாணவக் குழுவினரை சந்தித்தபோது, தான் விட்டுச்செல்லும் ஆராய்ச்சி பணிகளில் சிலவற்றை  எனது டைரியில் உள்ளது. அவற்றை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திடீரென எனது இறப்பு செய்தி கேட்டு, டெல்லிக்கோ, மும்பைக்கோ யாரும் வந்து என்னை பார்க்க வர வேண்டாம். இதற்கு பதிலாக, உங்களுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கு கல்வி பயிலும் மாணவர்களை வயல்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 10 பறவைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். இதுதான் எனக்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த பிரார்த்தனை என எங்களிடம் அறிவுரை வழங்கினார். இவரைப்போன்று ஒவ்வொரு மாணவர்களும் இயற்கை பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். நாம் வசிக்கும் பகுதியை தூய்மை மிகுந்த பகுதியாக மாற்ற வேண்டும்' என்றார்.

விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு 'பறவைகள்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு, கரையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், ஏ.எல் மெட்ரிக். பள்ளி ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த 329 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) மு. அன்பழகன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக, அவ்வமைப்பின் செயலர் எம்.எஃப் முகமது சலீம் வரவேற்றார்.  அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, விழா முடிவில் நன்றி கூறினார்.

இவ்விழாவில், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்ற மாவட்டச் செயலர்  வை.முத்துவேல், ஜேசிஐ அமைப்பின் மண்டல பயிற்றுநர் ஸ்ரீநாத், ஈஸ்ட் கோஸ்ட் அகெதெமி சிபிஎஸ்இ பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இயக்குநர் சாகுல் ஹமீது, முதல்வர் மீனா குமாரி, லயன்ஸ் சங்க மாவடத் தலைவர் சாரா அகமது, ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...