Pages

Sunday, December 31, 2017

வாழ்வின் வெற்றி !

வ்வையகத்தார் வாழும் வாழ்வினை இரு வகையாகப் பகுக்கலாம். 'எப்படியும் வாழலாம்', என்பது ஒரு வகை; 'இப்படித்தான் வாழவேண்டும்' என்பது மற்றொரு வகை. இவ்விரண்டில் எவ்வகை வாழ்வில் வெற்றி உள்ளது என்பதை ஆராய வேண்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

'வெளுத்ததெல்லாம் பாலல்ல; மின்னுவதெல்லாம் பொன்னல்ல; என்றவாறு வெற்றிபோல் தோன்றுவதெல்லாம் வெற்றியாகாது. வாழ்வின் உண்மையான வெற்றி என்பது என்ன? புவியோர் புகழ்ந்தேத்தப் பொருளீட்டி வாழ்தல்தான் வாழ்வின் வெற்றி என்று சொன்னால், 'எப்படியும் வாழலாம்' என்று வகையினர் வாழ்வுதான் வெற்றிக்குரிய வாழ்வு என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால் பொருள் மட்டும் சேர்த்துப் புகழ்பட வாழ்வதை வாழ்வின் வெற்றியாக எந்த உலக அறிஞரும் என்றுமே ஒத்துக்கொண்டது இல்லை. அதனால் பொருளீட்டி வாழ்வதை வாழ்வின் வெற்றியாகக் கொள்ள இடமில்லை என்று பொருளல்ல. பொருளைக் கள்ள வழியில் பெறாது, நல்ல வழியில் பெற்றிருந்தால் அதனை வெற்றியாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. புகழினை வன்முறையில் பெறாது, மென்முறையில் பெற்றிருந்தால் அதையும் வெற்றியாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

கல்வி கற்றல், தொழில் புரிதல், வர்த்தகம் செய்தல், சமூகத்தோடு ஒழுகல் போன்ற வாழ்வின் எந்தப்பகுதியாக இருந்தாலும் சரிதான், அவை குறுக்கு வழியில்லாது, நேரான வழியில் நிகழ வேண்டும். அதுதான் வாழ்வின் உண்மையான வெற்றியாகும். சில நேரங்களில் குறுக்கு வழியில் வெற்றி கிட்டினாலும், அவ்வெற்றிக் கானல் நீர்போல் காட்சி தந்து விரைவில் மறைந்துவிடும். நேரான வழியில் கிட்டும் வெற்றியே மலைபோல் நிலைபெற்று நிற்கும் நிரந்தர வெற்றியாகும்.

சவுக்குத் தோப்பொன்றில் குறுக்கும் நெடுக்குமாக வளைந்து வளரும் மரங்கள் அடுப்பு எரிக்கும் விறகுகளாகத்தான் பயன்படும். அவை நெருப்புக் கொழுந்தில் அகப்பட்டு இறுதியில் சாம்பலாகி விடுவதைக் காணுகிறோம். ஆனால் அதே தோப்பில் நேராக நிமிர்ந்து வளரும் மரங்கள் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடியினைத் தாங்கி நிற்கப் பயன்படுகின்றன. அவற்றில் கொடியேற்றி மரியாதை செலுத்தும் போது, அதில் அந்தக் கொடிக் கம்பத்திற்கும் பங்குண்டுதானே! அதுதான் நேர்மைக்குக் கிடைக்கும் சீர்மை.

வன்முறை வாழ்வில் தோற்றமளிக்கும் வெற்றியும் வாழ்த்துக்குரியதாகாது. மென்முறை வாழ்வின் வரும் வெற்றியே மேன்மையக்குரியது. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்ற நெறியில் நூறாண்டுகளுக்கு மேலான வாழ்ந்து வாழ்வின் வெற்றியை பெற்றிருந்தார் பெரியார் ஒருவர். அவர் தம்வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கிடந்தபோது, அவரது நீண்ட வாழ்வின் வெற்றிக்குரிய காரணத்தைக் கேட்டபோது, பேசச் சக்தியற்றிருந்த அப்பெரியார் பற்கள் அனைத்தையும் இழந்திருந்த தன பல் ஈறுகளைத் தொட்டுக்காட்டினார். பின்னர் தனது நாவை நீட்டித் தட்டிக் காட்டினார். பற்கள் வலிமையானது; வன்மையானது; ஆனால் இடையிலேயே தோன்றி, இடையிலேயே மறைந்து விட்டன. நாவைப்போல் மென்முறையில் வாழ்ந்ததுதான் தன் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாகும் என்பதைத்தான் அப்பெரியார் தன் செயல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்.

நேரான மென்மையான வாழ்வினை மேற்கொண்ட புத்தர் பிரான், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்ற அருள் நெறித்தலைவர்கள் கன்பூஷியஸ், விவேகானந்தர், முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி போன்ற மெய்ஞான மேதைகள், சாக்ரடீஸ், ரூசோ, இமாம் கஸ்ஸாலி போன்ற சித்தனைச் சிற்பிகள், ஆப்ரஹாம் லிங்கன், காந்தியடிகள், அபுல்கலாம் ஆஸாத் போன்ற  அரசியல் அறிஞர்கள், நியூட்டன், சர்.சி.வி ராமன், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் போன்ற விஞ்ஞான வித்தகர்கள் நேர்மை நெறி நின்று வாழ்ந்த காரணத்தால்தான் அழியா புகழோடு இன்றும் நம்மிடையே வாழுகின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. It is amazing true now days it is hard to find kind of people. May Allah give us all the fithna.amin

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...