Pages

Monday, January 8, 2018

துபையில் சாதனை இன்ஜினியர் 42 ஆண்டுகளுக்கு பின் ஓய்வு !

அதிரை நியூஸ்: ஜன.08
துபை கழிவுநீர் மேலாண்மை திட்டங்களின் வடிவமைப்பாளர் 42 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு

7 தனித்தனி எமிரேட்டுகளாக இருந்த இன்றைய ஐக்கிய அரபு அமீரகம் எனும் ஒற்றை நாடாக உருவாகும் முன்பும் பின்பும் பல வெளிநாட்டினர் இந்த மண்ணிற்கு விஜயம் செய்து தங்களின் அறிவையும் உழைப்பையும் வாரி வழங்கியதன் விளைவே இன்றைய நவீன அமீரகமாக திகழ்கின்றது.

அவ்வாறு அமீரகத்திற்காக தொடர்ந்து 42 ஆண்டுகள் உழைத்தவர்களில் ஒருவரே இன்று 69 வயதில் ஓய்வு பெற்றுச் செல்லும் எஞ்சினியர் சயீத் ஹயாத் எனும் பாகிஸ்தானியர், இவரது உழைப்பின் பலனை அவரது சொந்த மண்ணும் பெற்றுக் கொண்டது இன்னும் சிறப்பு. இன்னும் சொல்வதென்றால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே பணி ஓய்வுபெற இருந்தவரின் சேவை நமக்கு மேலும் தேவையென கருதிய மாநகராட்சி நிர்வாகம் 2017 ஆம் வருடம் இறுதிவரை பணிநீட்டிப்பு செய்தது ஒன்றே இவரது திறனை பறைசாற்றப் போதுமானது.

சயீத் ஹயாத் அவர்களின் வேலையை பற்றி பார்க்குமுன் அவரது சமூகப் பணியை சிறிது பார்த்துவிடுவோம். பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரம் அருகேயுள்ள கோட்லி புட்டா கிராமத்தின் ரோராஸ் சாலையில் மட்டும் 10 வகையான தொண்டு காரியத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார், வருகிறார்.

1995 ஆம் ஆண்டு இவரால் துவக்கப்பட்ட அல் இல்ம் வெல்பேர் டிரஸ்ட் சார்பாக 2008 ஆம் ஆண்டு தனது முன்னோர் வழிவந்த பரம்பரை சொத்திலிருந்து சுமார் 1 லட்சம் சதுரஅடி மனையை தர்மமாக வழங்கி அங்கு பெண்களுக்கான கல்லூரி ஒன்றை நிறுவியுள்ளார். அத்துடன் 135 மாணவிகளுடன் பெண்களுக்கான மதரஸா, தையல் தொழிற் பயிற்சி மையம், வெளிநோயாளிகளுக்கான மருத்துவமனை, அனாதை மற்றும் ஆதரவற்றவர்களுக்கான மையம் மற்றும் குடிநீரை சுத்தப்படுத்தும் நிலையம் என அமைத்து தந்துள்ளார். மேலும் 20 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வரும் பிரசவ மருத்துவமனை ஒன்று எதிர்வரும் ஏப்ரலில் திறக்கப்படவுள்ளது.

பொதுவாக இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளும் மருந்துகளும் அனைத்தும் இலவசம் தான் என்றாலும் இலவசம் என்பதற்காகவே மக்கள் மருந்துகளை அலட்சியமாக தூக்கி எறிந்துவிடக்கூடாது என்பதற்காக 30 பாகிஸ்தானிய ரூபாய் (சுமார் 17 இந்திய ரூபாய்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவரது பெண்கள் கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகின்ற அதேவேளையில் சிறுபான்மையின ஹிந்து, கிருஸ்தவ மாணவிகளுக்கு கல்வி முற்றிலும் இலவசம், கல்விக் கட்டணம், பாடப் புத்தகங்கள், யூனிபார்ம் உடைகள் உட்பட.

மேலும் இவரது கிராமத்தை சேர்ந்த கிருஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டுக்கு 1 கிலோ இனிப்புகளும், கிருஸ்துமஸ் தினத்தில் பிரியாணியையும் டிரஸ்ட் சார்பாக வழங்கி வருகிறார். சிறுபான்மையினருக்கு மருந்துகள் கூட முற்றிலும் இலவசம் என்பதுடன் இவரது தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் அனைவருக்கும் பொதுவானதே. மேலும் 25 இடங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு பழைய புத்தகங்கள் குறிப்பாக மார்க்க சம்பந்தமான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன இதனால் அந்தப் புத்தகங்கள் குப்பையிலும், தண்ணீரிலும் வீசப்படாமல் தடுக்கப்படுகின்றன.

மீண்டும் அமீரக சாதனைகளின் சில துளிகள் ஒரு பார்வை, 1975 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி முதன்முதலாக ஷார்ஜாவில் இயங்கிய ஒரு பிரிட்டீஷ் கம்பெனியில் 2 கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்களுக்கு பொறுப்பாளராக பணியில் அமர்ந்து பின் வீடுகளுக்கான கழிவுநீர் திட்டப்பணிகளில் ஈடுபட்டார். பிறகு 1985 ஆம் ஆண்டு துபை மாநகராட்சியில் இணைந்து தொடர்ந்து 32 ஆண்டுகள் கழிவுநீர் மேலாண்மையில் பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில் தான் அவர் தன் பெயர் சொல்லும் பல வெற்றிகரமான திட்டங்களை வடிவமைத்தார். அவரது திட்டங்களின் அடிப்படையையே துபை மாநகராட்சி இன்று வரை பின்பற்றுகின்றது.

1995 ஆம் ஆண்டு இவரும் இவரது சக பொறியாளருமான ராஷித் சுவைதியும் இணைந்து உணவகங்களுக்கான 3 வகை கிரீஸ் டிராப் (3 Types of Grease Traps) எனும் திட்டங்களை கட்டாயமாக்கியதன் விளைவாக கழிவுநீரில் கலக்கும் எண்ணெய், கொழுப்பு மற்றும் கிரீஸ் தன்மையுடைய பொருட்கள் தனியாக சேகரிக்கப்பட்டன இதனால் கழிவுநீரிலிருந்து எழும்பும் துர்நாற்றமும் வெள்ள நேரத்தில் ஏற்படும் அடைப்புக்களும் இல்லாது ஒழிந்தன.

மேலும் துபையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலத்தடி கார் பார்க்கிங்களில் (Basement parking) உள்ள கழிவுநீர் வெளியேற்று திட்டமும் இவரால் உருவானது தான். இத்திட்டத்தின் மூலம் கழிவுநீருடன் கலந்து வரும் குப்பைகள், மண் மற்றும் திடக்கழிவு பொருட்கள் தனியாக சேகரிக்கப்பட்டு நீர் மட்டுமே கழிவுநீர் குழாய்களில் செல்லுமாறு வடிவமைத்திருந்தார்.

1997 ஆம் ஆண்டுகள் வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு என எந்த வரையறுக்கப்பட்ட கழிவுநீர் மேலாண்மை விபரக்குறிப்புகளும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு நாட்டு எஞ்சினியர்களும் தங்கள் நாட்டில் உள்ளவாறு அவற்றை அமைத்துக் கொண்டிருந்ததை ஒருமுகப்படுத்தி குழாய்களின் விட்டம், அளவு மற்றும் குழாய்கள் இணைப்பிற்கான அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

2007 ஆம் ஆண்டு துபைமாநகராட்சியின் திட்டங்களின் துறைக்கு மாறியவர் அங்கிருந்து பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கான கழிவுநீர் அமைப்புக்களை உருவாக்கித் தந்தார். இவரது டிஸைனிங்கில் பெரும் பூங்காக்கள், தொழிலாளர் குடியிருப்புக்கள் மற்றும் பிரம்மாண்ட கட்டிடங்கள் உருவாயின,

சமீபத்தில் திறக்கப்பட்ட துபை பிரேம், துபை சபாரி, ஷேக் ஹம்தான் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், பழைய டிரக் மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் போன்றவை அவற்றில் சில. உருவாகிவரும் அல்குர்ஆன் பார்க்கிற்கும் இவரே டிசைனிங் செய்துள்ளார். 2000 ஆம் ஆண்டு இவரும் இவரது குழுவும் சேர்ந்து துபைக்கான கழிவுநீர் மேலாண்மை கையேடு எனும் புத்தகத்தையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

தனக்கும் தனது திட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்த அனைத்து மேலதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி நவிழ்ந்தவராக விடைபெற்றவர் பாகிஸ்தானில் செயல்படும் தனது தொண்டு நிறுவனத்தில் தனது எஞ்சிய காலத்தை செலவழித்து தனது கிராமம் மேலும் முன்னேற உழைக்கவுள்ளார்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...