Pages

Friday, January 5, 2018

மல்லிப்பட்டினத்தில் மதுக்கடையை அகற்ற கோரி செல்போன் டவர் மீது ஏறி 6 மணி நேரம் போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.05
மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி செல்போன் டவர் மீது ஏறி நின்று 6 மணி நேரம் போராட்டம் நடத்திய கோயில் பூசாரி, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கீழே இறங்கி வந்தார். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ரெண்டாம்புளிக்காடு- மல்லிப்பட்டினம் சாலையில் இருந்த, அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை, பொதுமக்கள் போராட்டம் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு  அருகில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டது.

கோயில் அருகே மதுபானக்கடை அமைத்ததை எதிர்த்து கோயில் பூசாரியான, அழகியநாயகிபுரம் பாலகிருஷ்ணன் என்பவர்  மகன் அருணாசலம் (வயது 46) பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அதிகாரிகள் இவரது கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

இதனால், 'கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்றாவிட்டால், செல்போன் டவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக பூசாரி அருணாசலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும்  அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். (இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு டிச 29 தீக்கதிரில் செய்தி வெளியாகியிருந்தது).

இந்நிலையில் மதுக்கடையையும் அகற்றாமல், கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் போனதால் விரக்தி அடைந்த பூசாரி அருணாசலம்
வெள்ளிக்கிழமை ஜன.05 அன்று காலை 6 மணி அளவில் மல்லிப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். பொதுமக்கள், உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பூசாரி அருணாசலம் கீழே இறங்கி வர மறுத்து விட்டார். மதுக்கடையை அகற்றுவதாக உறுதி அளித்தால் தவிர கீழே இறங்கப் போவதில்லை என்று கூறி,  கோரிக்கையை விளக்கி துண்டுப்பிரசுரத்தை கோபுரத்தின் மேலிருந்து கீழே வீசினார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரகுராமன், டாஸ்மாக் மண்டல  மேலாளர் புண்ணியமூர்த்தி, கலால் வட்டாட்சியர் கோபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வரும் ஜனவரி 22 ந்தேதி திங்கள்கிழமைக்குள் மதுக்கடையை அகற்றிக் கொள்வதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, பகல் 12 மணிக்கு பூசாரி அருணாசலம் 6 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். இதையடுத்து பூசாரி அருணாசலத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...