Pages

Friday, January 12, 2018

தேசிய இளைஞர் தினம் ~ இளைஞர்களும்; சமூக எழுச்சியும்

அதிரை நியூஸ்: ஜன.12
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பது அவ்வை மூதாட்டியின் அமுத மொழி. ஆம்! மனிதப் பிறப்பானது மகத்தானது; பகுத்தறிவும் பக்குவம் படைத்தது; கட்டமைக்கப்பட்ட சமூகத்தைக் கொண்டது. மனிதனால் மட்டுமே தந்து சமூகத்துக்காகச் சிந்திக்க முடியம். மனிதனால் மட்டுமே தனது சமூகத்துக்காக செயல்பட முடியும். ஆனால் சமூகத்துக்காக எத்தனை பேர் சிந்திக்கிறார்கள்; எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இக்கேள்விகளுக்கு விடையாக அவ்வப்போது, ஆங்காங்கே எழும் இளைஞர்களின் சமூக எழுச்சியும், அக்கறையும் அமைவதை நாம் மறுப்பதற்கில்லை.

இளைஞர் என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென நினைவுக்கு வருவது கடந்த 2017 ஜனவரி மாதம் தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம்தான். அதிலும் குறிப்பாகச் சென்னை மெரீனா கடற்கரையில் எழுந்த எழுச்சியைக் குறிப்பிட்டாக வேண்டும். முதல் நாள் மூன்றாயிரம் பேர், இரண்டாவது நாள் இருபதாயிரம் பேர், அடுத்த நாள் ஐம்பதாயிரம் பேர் என ஆறு நாட்களின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் எப்படிக் கூடினார்கள்?

தங்களுக்கென ஒரு தலைமை இல்லாமல் தன்னெழுச்சி கொண்டுக் கூடிய அந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டுத் தமிழக மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் வியந்து நின்றன. வெளிநாட்டு ஊடகங்களில் கூட வியந்துப் பேசப்பட்டன. கூட்டத்தில் கூடியோரின் எண்ணிக்கைக்காக மட்டுமல்ல அந்த வியப்பு. ஓரிடத்தில் 100 இளைஞர்கள் கூடினாலே வேண்டத் தகாத நிகழ்வுகள் சில நேரங்களில் நிகழ்ந்துவிடும் நிலையில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் அவ்வாறு ஏதும் நிகழவில்லை என்பதற்காகத் தான் அந்த வியப்பு.

இளைஞர்களின் அந்த திரட்சி ஒரு கேளிக்கைக்காக என்றில்லாமல், எந்த ஒரு பேதமுமின்றிச் சாதிச் சமயப் பூசலின்றி, அனைத்து வகையான வேறுபாடுகளையும் களைந்துவிட்டுத் 'தமிழர்' என்ற இழையில் அவர்கள் இணைந்திருந்தமைதான் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளைஞர்களின் எழுச்சியைக் கண்ட மத்திய, மாநில அரசுகள் மிரண்டன; விரைவாகச் செயல்பட்டன. அவசரச் சட்டங்கள் அரங்கேறின. விரைவு இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் வெற்றி கண்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடந்தேறின.

இளைஞர்கள் எழுச்சிக்கு இன்னொரு அடையாளமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ளத்தக்க ஒரு வரலாறு உண்டென்று சொன்னால், அது தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டமாகும். இன்று இந்தியாவில் ஆங்கிலம் எனும் மொழி நீடித்திருக்கவும், உலக மயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தின் துணை கொண்டுப் பல நாடுகளுக்குச் சவால் விடத்தக்க வகையில் இந்தியா முன்னேறவும் வரலாற்றுக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது அம்மொழிப் போராட்டம். மாணவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம் அது. ஆனால், இன்றைய இளைஞர்களின் பெரும் பகுதியினருள் எத்தனை பேருக்கு அதுபற்றித் தெரியும்?

இந்திப் பேசப்படாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு அன்றைய மத்திய, மாநில அரசு மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து நடந்த போராட்டம் அது. உயிரோடு இருந்தால் இன்று 70 வயதைக் கடந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதியவர்களான அன்றைய மாணவர்கள்தம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நாயகர்கள்.

இந்தித் திணிப்பை எதிர்த்து எழுசிக் கொண்டுப் போராடிய மாணவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் அடக்கு முறையைக் கையாண்டன. மாணவப் போராளிகளுக்கு எதிராகத் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. சிலர் மடிந்தனர். பலர் சிறை பிடிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த மாணவ இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் இந்தித் திணிப்புக் கைவிடப்பட்டது. இந்தித் திணிக்கப்படாது என்ற உறுதி மொழி அன்றைய இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் வழங்கப்பட்டது. இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிடைத்த வெற்றியாக அன்று மாணவர்களின் எழுச்சி கருதப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது என்பதை உணர்ந்து உழைத்தவர்களின் முக்கியமானவர்களாக இரண்டு பேரைக் குறிப்பிடலாம். ஒருவர் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். மற்றொருவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். இருவருமே இளைஞர்களின் எழுச்சியில் அதிகக் கவனம் செலுத்தினார்கள்.

இளைஞர்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டு சுவாமி விவேகானந்தர் கூறிய கூற்று நினைவு கூறத்தக்கது. "100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக்காட்டுகிறேன்" என்றார். உலகமெங்கும் ஆன்மிக உரையாற்றிவிட்டு விவேகானந்தர் இந்தியாவுக்குத் திரும்பியபோது சென்னையில் 1897 ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல், 14-ம் தேதி வரை 9 நாட்கள் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஐஸ் ஹவுஸில் தங்கிருந்தார். அதுவே தற்போது விவேகானந்தர் இல்லம் என்றழைக்கப்படுகிறது. அந்த இடத்தில விவேகானந்தர் உரையாற்றியபோது, "சென்னை மாகாண இளைஞர்களே! எனது நம்பிக்கையெல்லாம் உங்களிடம்தான் உள்ளது. நீங்கள் உங்களை நம்பினால் மகத்தான இந்தியாவைப் படைக்க முடியும்" என்றார். விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கம் இன்றளவும் நிறைந்துள்ளது என்பதைத்தான் மேற்கண்ட இளைஞர்களின் எழுச்சிகள் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

சுவாமி விவேகானந்தருக்குப் பின் இளைஞர்களின் எழுசிக்காக அதிகம் குரல் கொடுத்து வந்தவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். அவர் எங்கு சென்றாலும் மாணவ இளைஞர்களைச் சந்திப்பதையும், அவர்களோடு உரையாடுவதையும் தம் நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி அவர் கூறிய சொற்றொடர் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டது. ஆம்! அதுதான் "2020 ல் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு இளைஞர்களே கனவு காணுங்கள்" என்னும் சொற்றொடர் இளைஞர்களிடையே வலம்வந்து கொண்டிருந்த அவரது இன்னுயிர் பிரிந்ததுகூட இளைஞர்கள் குழுமியிருந்த ஓர் அரங்கத்தினுள்தான் என்பது அனைவரையும் ஆச்சயரியத்தில் ஆழ்த்தியது. தனது உயிர் பிரிவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பதாக மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் கலாம் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் கடமையானது எந்த இளைஞர் சமுதாயத்தை அவர் நம்பினாரோ அந்த இளைஞர் சமுதாயத்திடமே உள்ளது என்பது உணர்ந்து செயலாற்ற வேண்டியது இளைஞர் சமுதாயத்தின் பொறுப்பன்றோ.

மனித வாழ்வின் இளம் பருவம் அழகு மிக்கது. அந்தப் பருவத்தில் அழகோடு அறிவையும், ஆற்றலையும் இணைத்து நாட்டையும், வீட்டையும் வளப்படுத்த வேண்டியது தம் ஒவ்வொருவரின் கடமை எனபதை உணர்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டியது மிக அவசியமாகும் என்ற கருத்தை இவவாண்டு இளைஞர் தினத்தில் முன்வைக்க விரும்புகிறேன்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...