Pages

Sunday, January 14, 2018

இந்தியரின் இதயம் பாகிஸ்தானியரின் உடலில் இணைந்த அழகிய வரலாறு!

அதிரை நியூஸ்: ஜன.14
3 ஆம் ஆண்டில் ஓர் இந்திய இதயம் பாகிஸ்தானியருடன் இணைந்த அழகிய வரலாறு

இது காதல் கதையல்ல! நமது சென்னையில் 3 ஆண்டுகளுக்கு முன் நிஜத்தில் நிகழ்ந்த அற்புத வரலாறு. கராச்சியை சேர்ந்த பைஸல் அப்துல்லா மாலிக் என்ற அந்த பாகிஸ்தானியர் உளப்பூர்வமாய் சொல்கின்றார் 'பாகிஸ்தான் பாதி, இந்தியா பாதி என இணைந்து வாழும் கலவை நான்'

வெள்ளைக்காரன் துவக்கி வைத்துவிட்டுப் போன வடுக்கள் நிறைந்த பிரிவினை அரசியலாலும், அதை இன்று வரை அணையவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளாலும் 2 நாடுகளும் நித்தமும் எல்லையில் இரத்தம் சிந்திக் கொண்டுள்ளன, இதற்கிடையில் கசப்பான 3 போர்களும் நடந்துவிட்டன.

37 வயது பைஸல் அப்துல்லா மாலிக் என்ற அந்த வங்கி ஊழியருக்கு 2014 ஆம் ஆண்டு திடீரென வைரல் மையோகார்டிடிஸ் எனும் ஓர் அபாயமான இதய நோய் தாக்க இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என முடிவானது (Viral Myocarditis — a fatal cardiac condition that can be cured only by heart transplant). உலகமே கைவிரிக்க இந்தியா மட்டுமே உதவ முன்வந்தது.

பாகிஸ்தானில் இந்த சிகிச்சையை மேற்கொள்வதென்பது மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். மாலிக்கின் கண்முன்னே தனது இறப்பிற்குப் பின்னான மனைவி மக்களின் நிலை கனவாய் நிழலாடியது. எனினும் அவரது குடும்பத்தினர் மலை போன்ற உறுதியுடன் மாலிக்கிற்கு ஆதரவாய் நிற்க சென்னை போர்டீஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கராச்சியிலிருந்து துபைக்கு வந்து பின் அங்கிருந்து மும்பை வழியாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் ஆபத்தான நிலையில் பயணமானார். இப்போதும் இறைவனுடைய துணை இவருடன் கூடவே வந்ததன் விளைவாக எமிரேட்ஸ் விமானத்தின் பைலட் மருத்துவ அவசரநிலை கருதி மும்பையில் இறக்காமல் சென்னைக்கே விமானத்தை இயக்கினார்.

போர்டீஸ் மலர் மருத்துவமனையில் (Fortis Malar Hospital) சேர்க்கப்பட்ட பைஸல் அப்துல்லா மாலிக்கிற்கு முதலில் பழுதான நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சாந்தமாக இயங்க சிகிச்சையளிக்கப்பட்டன.

மருத்துவமனையில் சேர்ந்த 22வது நாளில் கோயம்புத்தூரில் நிகழ்ந்த ஒரு பைக் விபத்தில் மூளைச்சாவடைந்த 26 வயது இளைஞர் மோகன் ராஜ் என்பவரின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் முன் வந்தனர், அதில் இவருக்கு இதயம் கிடைக்க 2015 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி இதய அறிவியல் துறையின் இயக்குனர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 90 நிமிட அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இதயத்தை இவருக்குள் இடம் மாற்றி மீண்டும் குதூகலத்துடன் துடிக்கச் செய்தனர்.

மருத்துவ சோதனைகளுக்காக தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஓர் புனித யாத்திரை போல் வந்து செல்வதாக கூறும் பைஸல் அப்துல்லா மாலிக்கின் உள்ளம் முழுவதும் இந்தியாவிற்காக, அதன் மக்களுக்காக, அதன் அரசிற்காக, அதன் குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்காக, மருத்துவமனை, மருத்துவர்கள், தாதியர்கள் என அனைவர் மீதும் உள்ளம் நிறைய அன்பு கலந்த நன்றியை தனது இதயத்துடன் சேர்த்து சதாகாலமும் சுமந்து கொண்டுள்ளார்.

தனது மகனை இழந்த சோகத்திற்கு நடுவிலும் தனது மகனின் இதயத்தை வழங்கி உயிரைக் காப்பாற்றிய மோகன் ராஜின் தாய்க்கு ஓர் திறந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அம்மா! நீங்களும் நானும் ஒருமுறை கூட சந்தித்ததும் இல்லை, பேசியதும் இல்லை ஆனால் நாம் இருவரும் தெய்வீகத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். உங்களுடைய கர்ப்பத்தில் வளர்ந்த இதயம் தற்போது என்னுடைய உடலில் இரத்தத்தை சுழலச் செய்து கொண்டுள்ளது. நீங்களும் உங்கள் மகனும் இணைந்து தற்போது என்னுள்ளே வாழ்கின்றீர்கள் என உருக்கமாக எழுதியுள்ளார்.

இதுபோன்ற உண்மைச் சம்பவங்கள் 2 அணு ஆயுத நாடுகள் மத்தியில் போர்கள், இராணுவ அச்சுறுத்தல்கள், எல்லையற்ற அவநம்பிக்கைகள், அழிவுகளுக்கு மத்தியில் சிக்கித் திணறிக் கொண்டுள்ள இருநாட்டு மக்களுக்கும் நம்பிக்கை சுவாசம் தரும் காரணிகளாக திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...