Pages

Sunday, January 14, 2018

அமீரக இந்தியத் தொழிலாளர்களுக்கு உதவ நல கமிட்டிகள் அமைக்க முடிவு!

அதிரை நியூஸ்: ஜன.14
அமீரக இந்திய தூதரகத்தின் சார்பாக மேலும் பல இந்தியர் நல கமிட்டிகள் அமைக்கப்படுகின்றன.

அமீரகத்தில் சில பல காரணங்களால் துன்பத்தில் உழலும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் தூதரக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் சமுதாய தலைவர்களும் இணைந்த 9 வகையான புதிய கமிட்டிகள் விரைவில் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தேவையான ஆலோசணைகளும் உதவிகளும் வழங்கப்படும் என இந்திய துணைத் தூதர் விபுல் தெரிவித்தார்.

இந்த 9 வகையான கமிட்டிகளின் சார்பாக இந்தியர்களின் கடல்சார் பிரச்சனைகள், சிறை, சட்டம், கலாச்சாரம், மாணவர்கள், மருத்துவம், சட்ட விரோத தங்குதல் மற்றும் குடியேற்றம், மரண சம்பவங்கள், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் திருமண சிக்கல்கள் ஆகியவற்றிற்கு தேவையான ஆலோசணைகளும், உதவியும் செய்யப்படும்.

இந்த உதவிக்குழுக்கள் 'இந்திய சமூக நல நிதியம்' (Indian Community Welfare Fund - ICWF) குறித்து இந்தியர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்வதுடன் இந்த நிதியை கொண்டு செய்ய இயலுகின்ற காரியங்களையும், அரசின் அனுமதியில்லாத காரணத்தால் செய்ய இயலாத சில காரியங்களையும் செய்து உதவிடுவர். உதாரணத்திற்கு, ஏழ்மையிலுள்ள சில இந்தியர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படும் கல்வி உதவிகளை இந்த 'இந்தியர் நல நிதியம்' மூலம் செய்திட இயலாது ஆனால் அவர்களுக்கான உதவிகளை சமுதாய புரவலர்களிடமிருந்து சமூக ஆர்வலர்கள் திரட்டி தூதரகம் வழியாக வழங்கிடுவர்.

தூதரகத்தின் மூலம் கையாளப்பட்ட இந்தியர்களின் பிரச்சனைகளைப் எடுத்துக் கூறுவதற்காக ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை திறந்தநிலை ஒன்றுகூடல் (Open Meeting) இந்திய தூதரகத்தால் நடத்தப்பட்டு வந்தது தற்போது சில வருடங்களாக நின்றுபோயுள்ளது மீண்டும் துவங்கவுள்ளது.
இந்த திறந்தநிலை ஒன்றுகூடல் நிகழ்ச்சி மீண்டும் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் நாள் (இந்திய குடியரசு தினம் முதல்) ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு இந்தியர்களின் குறைகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு தீர்வு காண உதவப்படும். இந்த மாதாந்திர திறந்தநிலை நிகழ்ச்சி வாராந்திர விடுமுறை தினமான வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுவதால் அனைவரும் பங்கேற்க இயலும்.

அதேபோல் எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் இங்கு பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கேட்டறியப்பட உள்ளது.

அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி பேசும் போது, அமீரகத்திலுள்ள சுமார் 3 மில்லியன் இந்தியர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் சாதாரண தொழிலாளர்களே, இவர்களுடைய பிரச்சனை காது கொடுத்து கேட்கவும், தீர்க்கவும் தன்னார்வலர்கள், சமுதாயப் புரவலர்கள் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன் தற்போது 24 மணிநேரமும் சமூக இணைய தளங்களின் வழியாக தொழிலாளர்களின் புகார்கள் பெறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

துபை இந்திய துணைத் தூதரகம் மூலம் 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உதவிகள்:
1. 403 பேருக்கு விமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
2. 39 மரித்தோரின் உடல்கள் கொண்டு செல்ல உதவப்பட்டுள்ளன.
3. 300 தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
4. 50 பேருக்கு அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன.
5. தொழிலாளர்களின் சுமார் 1,100 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
6. 86 பேருக்கு மருத்துவ மனை சார் உதவிகள் செய்யப்பட்டன.
7. 230 மீனவர்கள், மாலுமிகள் நாடு திரும்ப உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...