Pages

Saturday, January 13, 2018

அதிராம்பட்டினம் கவிஞருக்கு 'கவிச்சுடர்' விருது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அ. ஷேக் அப்துல்லாஹ் (வயது 61). தமிழ் மொழி மீது தீராத பற்றுகொண்ட இவர் அதிரை நியூஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதி உள்ளார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், வழுத்தூரில் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய கவியரங்கில் 'கவிச்சுடர்' விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. விருதினை, இலக்கியப் பேரவை நிறுவனர் ஹாஜி அ. பஷீர் அஹ்மது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில், சிறப்பு அழைப்பின் பேரில், அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமையில், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ.அப்துல் முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது, அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர், வாப்பு மரைக்காயர், செய்யது முகமது ஆகியோர் கலந்துகொண்டு விருது பெற்ற கவிஞர் அ. ஷேக் அப்துல்லாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து கவிஞர் அ. ஷேக் அப்துல்லாஹ் கூறியது;
அதிரை நியூஸ் நிஜாம் அவர்கள் என்னை ஒருதடவை சந்திக்கும்போது எழுதத் தூண்டினார். எழுதவேண்டும் கட்டுரைகள், கவிதைகள் என்ற ஆர்வம் என்னில் இருந்தாலும் முன்னர் முயற்சிப்பதில்லை. ஆனால் நவீனகால கணினி, கைபேசி இவைகள் இதற்கு இலகுவாக பாதை வகுத்துள்ளது யவரும் அறிந்ததே. ஆக்கங்கள் உலகில் விரும்பியோர் பார்க்கயிலும் வகையில் இருப்பதும் அதன்மூலம் அவர்கள் தரும் பின்னூட்டங்களும் ஊக்கம் தருவதாகவும் இருப்பதும் ஒரு வசதியே.

எழுதி வைத்திருந்தாலும் உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இயற்கையாக ஏற்படும் ஐயப்பாடே. அதற்கும் இலகுவாக இவ்வமைப்பு உதவிகரமாகத்தான் உள்ளது.

பள்ளிகாலத்தில் தமிழ்பயின்ற பொழுது மறக்கமுடியா ஆசான்கள் திரு இராமதாஸ், திரு சன்முகம் அவர்களின் தமிழ்ஈர்ப்பால் அவ்வப்பொழுது ஏதோ கவிதையென எழுதுவதும் உண்டு.

பள்ளியில் படிக்கும்போது தமிழ் மீது ஆர்வம். எழுத்துக்களை அழகாக எழுத முயற்சி செய்வேன். ஏதோ மனதில் பட்டதை அப்பொழுது எழுதியதில் ஒரு கவிதை... தாய் தன்தோலை உரித்துப் போர்த்தும் பாசப் போர்வை.

தாயின் பாசம் வீரியம் உணர்ந்ததால் அந்த கவிதை என்னுள் முளைத்தது. பலகாலம் உருண்டோடியது. வாழ்வின் அர்த்தங்கள் என்னவென்று என்னை வந்து தீண்டி நான் தேடத் துவங்கினேன். அது மகான்களைப் பற்றி பற்று குறைந்தவர்கள் புதுப்புது புதுமைகளை கொட்டதொடங்கிய காலம். என்னவென்று அறிய மூழ்க விளையும் போது... தாகம் அறிந்த ஏகன் என்னை ஒரு சர்க்குரு ஒருவரிடம் தெளிவுகள் கற்க அமைத்தான். அங்கு பணிவு மரியாதை பொறுமை முதல் கவனத்தில் உண்மைகள் உலா வருவதை கிரகித்தேன். ஈடுபாடுக் கொண்டேன். ஏற்றமான அறிவுகளான ஏகம் என்றால் என்ன ? மனிதன் எப்படி ? இதன் தொடர்பு என்பதோடு ஆகாயம் அத்தனையும் ஒன்றின் நிலையில் எப்படி என்ற கல்விகள் தாராளமாக கிடைத்தது.

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான். உன்னதம் தந்தவர்கள் உலகை அழகாக்க அவதரித்தவர்கள் நம் நபிகளார் அவர்களின் பொன்மொழிகள் இதுபோன்ற பலதுடன் விரிவுகள் தொடும் எல்லைவரை விளக்கங்கள் என்னை இலகுவாய்க் கவர்ந்தன.

எங்கள் ஞானகுரு தமிழையும் உயிராய்க் கண்டவர்கள். சங்க கால புலவர்கள் கொண்ட யெழுத்தமைப்பு; கவிதை நடைகள், அதில் சித்திரக் கவி போன்றவைகள் இலகுவாக எழுதும் வல்லமை மிக்கவர்கள். ஈழநாட்டைச் சேர்ந்தவர்கள். எங்கள் பெருமானார் வழியில் நின்றுமுள்ளவர்கள். அவர்கள் தந்த ஞானசூத்திரம்...

தானே தன்னில் தானானான் ஒன்றின் மலர்ச்சி வேறில்லா குணம்காட்டும் சூத்திரம் கண்டேன். அதில் அருந்திய அத்தனையும் எனக்கு கவிதைகள் எழுத காரணங்களை வழங்கின. அவர்களின் இறையருட்பா மனதில் என்றும் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும்.

அத்தாக்கங்கள் என்னுள்ளத்தில் என்றும் கமழும். எழுதிய என் கவிதைகள் அதனைவிட்டும் அகலமால் அத்தனையும் அதன் பொருளை நான் உணர வெளிவந்தவைகள்.

பிறந்தவூரில் அதிரை நியூஸ் என்ற தளத்தில் மின்னிதழ் தினச்செய்திகள் வெளிவிடும் நன்பர் திரு நிஜாம் அவர்களின் தூண்டுதல்; என்னில் இலைமறைக் காயாயிருந்த உணர்வுகள்; அதற்கு நான் கற்ற சர்க்குரு போதனைகள்; என்னை நான் அறிய ஆவலின் வேகங்கள் கவிதை வடிவில் வெளிவர காரணமாயின. பின் மரபு கவிதைகள் எழுத பள்ளிப்பருவத்தில் படித்த இலக்கணங்கள் அவைகளையும் இன்னும்பல நுணுக்கங்களையும் நவீன நுட்ப கணினி வலைதளங்களில் கற்றேன், திருத்திக் கொண்டேன். பள்ளிசக நண்பர் கவிஞர் கலாம் அவர்கள் அதிரை நியூஸ் தளத்தில் எழுதும் கவிதைகளுக்கு பின்னூட்டமாக அதே இலக்கண அமைவில் கவிதை எழுதிவிட்டுத்தான் தூங்குவேன். மேலும் கற்பதற்கு அடிப்படை பள்ளிப்பாட கவனயீர்ப்புகளே என்றால் மிகையில்லை.

கணினிவழி தமிழ் கவிதைக் களங்கங்களில் தமிழமுது கவிச்சாரல் தமிழை திறன்பட புரிந்துகொள்ள உதவியது என்பதிலும் மிகையில்லை.

கவிதை எழுதும் மன அமைவு இருந்தாலும் அம்மனதிற்கு ஏற்படும் தாக்கங்களே பிறப்பெடுக்கின்றன கவிதைகளாக. அந்த வகையில் அனைத்தும் தரவல்லது ஆன்மீக அறிவு. அதன்வழி தொடர்பும் ஈழத்தின் வழியே எம்பெருமான் வழியோர் வழியில் நுகரும் பாக்கியமும் கிடைத்தமை என்வாழ்வின் மறக்கமுடியாத ஒன்றென்றாலும் மிகையில்லை ! உண்மை !

அவைகளை எழுதியதில் தமிழமுது கவிச்சாரல் எனக்கு ‘கவிசிற்பி’ என்ற பட்டம் தந்து கௌரவப்படுத்தியது. நிலாமுற்றம் ‘நிலாக்கவி’ என்று சிறப்பித்தது. இலங்கையில் இஸ்லாமிய பெண் ஒருவரால் நடத்தும் தடாகம் அமைப்பு என்னை ‘கவினெழியாக’ மூன்றுதரம் கண்டு அதன் முதல்நிலை பட்டமாக “கவியறுவி” பட்டமும் தந்து என்னை கௌரவபடுத்தியது. இதற்கெல்லாம் நான் தகுதிவாய்தவனா என்பதில் என் மனம் பகுத்துப்பார்பதில் ஓய்வதில்லை !

மரபுகவிதைகள் அது வகுக்கப்பட்ட இலக்கணத்திற்கு உட்படுவதால் அதனை புரிந்துகொள்வதில் எப்படியும் வழிகள் உண்டு. புதுக்கவிதைகள் சில புரிந்துகொள்ள யியல்வது மிகக்கடினமாக உள்ளது. அது எழுதியவர் மனநிலைக்கு தன்னை உயர்த்தினால் ஒழிய இயலாததாகவும் உள்ளது.

தமிழமுது கவிச்சாரல் மரபுகவிதை வெண்பா போட்டியில் கவிஞர், கவியறுவி கவின்முருகு அவர்கள் தலமையில் நடாத்தியதில் முதல்நிலை கவிஞர்களில் என்னையும் உயர்த்திக் கண்டார்கள். அதில் நுணுக்கங்கள் சிலகற்றேன்.  அவர்கள் issue என்ற மின்னிதழில் எனது வெண்பாக்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழமுது கவிச்சாரல் அமைப்பில் நடாத்தும் கவிதை போட்டியில் கலந்துகொள்வதில் என் சிந்தனைக்கு இறக்கை முளைத்ததென்று எழுதுவதிலும் மகிழ்வே. மேலும் இப்பொழுது ‘கவிச்சிகரம்’ என்ற பட்டமும் தந்து அதன் சிறப்புடையோர் தகுதியில் என்னையும் அவர்களில் ஒருவனாக உயர்த்தியுள்ளது.

சென்ற 12-01-2018 அன்று நடந்த பெருமானாரின் மீலாது விழாவில் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய கவியரங்கில் பங்கேற்றேன். அதில் ‘வேந்தரின் சாந்தம்’ என்ற தலைப்பில் கவியரங்கில் கவிதை பாடினேன். அவ்விழாவை நடத்தும் வழுத்தூர் பெற்ற கவிகாவலர் ஹாஜி லயன் அ. பஷீர் அஹ்மது அவர்கள் கவிச்சுடர் விருது தந்து கௌரவப்படுத்தினார்கள்.

அதிராம்பட்டனத்தில் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். என்னையும் கவிஞர் என்று அழைக்கும் பொழுது எனக்கு அச்சமாக இருக்கின்றது. நான் அதற்கு தகுதி வாய்ந்தவனா என்பது என்னுள் உருத்தும் கேள்வியாகவே இருந்து வருகிறது. இருப்பினும் இந்த பட்டங்களுக்கு தகுதிவாய்ந்தவனாக என்னை உயர்த்த நான் தினமும் முயற்சிகள் செய்துகொண்டுதான் வருகிறேன்.

‘அவன் அடிமை’ என்ற அந்தாதி வெண்பாவில் எழுதி எனது தமிழ் ஆசான் திரு சண்முகம் அவர்கள் வசம் தந்துள்ளேன். அவர்கள் அதனை பார்த்து ஒப்புதல் தந்தால் எந்தன் முதல் நூலாக அச்சிட வுள்ளேன் என்பதை பதிவதில் மகிழ்வு கொள்கிறேன்' என்றார்.

 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...