Pages

Tuesday, January 30, 2018

'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில் என்னை காயப்படுத்துகின்றது ~ கல்ஃப் நியூஸ் ஆசிரியர் குமுறல் (சிறப்புக் கட்டுரை)

அதிரை நியூஸ்: ஜன.30
பத்மாவத் எனும் ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து வடமாநிலங்களில் எதிர்ப்பாளர்களால் பயங்கர கலவரங்கள் நடத்தப்பட்டன ஆனால் நியாயமாக பொங்கி எழுந்திருந்திருக்க வேண்டிய இந்திய முஸ்லீம்கள் அமைதியாக கடந்து செல்கின்றனர். 

இந்நிலையில் துபையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரியான கல்ஃப் நியூஸ் (Gulf News) பத்திரிக்கையின் ஆசிரியர் பாபி நக்வி (Bobby Naqvi) அவர்கள் இத்திரைப்படம் தொடர்பில் தனது உள்ளக்குமுறல்களை வெளியிட்டுள்ளதுடன் டெல்லியை ஆண்ட சுல்தான் பற்றிய அரிய பல வரலாற்றுத் தகவல்களை தருகின்றார்.

பொதுவாக, வட நாட்டு விஷயங்கள் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாத தமிழகத்தினருக்கு குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் இந்த வரலாற்றுச் செய்திகளை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாற்று திரிபுகளுக்கு தகுந்த கண்ணியமான, அறிவுப்பூர்வ எதிர்வினைகள் பிற சமூக மக்களின் உள்ளங்களை தொடும் வகையில் அமைய வேண்டும். 

பாபி நக்வி அவர்களுடைய பதிவை அதன் சாரம் சிதையாமல் அப்படியே தருவதற்கு ஓரளவு முயற்சித்துள்ளேன். மூல ஆங்கிலப் பதிவை வாசித்தவர்கள் தவறைச் சுட்டினால் திருத்திக் கொள்கின்றேன்.

இவண்
நம்ம ஊரான்

இனி பாபி நக்வி அவர்களுடைய எழுத்தில்...

ஓரு இந்திய முஸ்லீம் என்ற வகையில் பத்மாவத் திரைப்படம் எவ்வாறு என்னை காயப்படுத்துகின்றது

//இத்திரைப்படம் இந்தியாவில் முஸ்லீம் சமூகம் மோசமான சூழல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அரசர்கள் செய்தவையாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு இன்றைய முஸ்லீம் சமூகம் பொறுப்பேற்க வற்புறுத்தப்படுகிறது.//

திரைப்படத் துறையினர் வரலாற்று கட்டங்களை படமாக்குவதற்கான கலைச் சுதந்திரங்களை பெற்றவர்களே என்றாலும் அவர்கள் மனம் விரும்பும் போக்கில் வரலாற்றை மாற்றியமைக்க உரிமை பெற்றவர்கள் அல்ல.

கடந்த வாரம் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்று இந்தியாவின் சில பகுதிகளில் வன்முறைகள் மற்றும் பெரும் விவாதங்கள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்தது.

சினிமா விமர்சகர்கள் பத்மாவதி என்கிற ஹிந்து ராஜபுத்திர ராணி ஒருவர் முஸ்லீம் சுல்தான் ஒருவரின் படையெடுப்பை தீவிரமாக எதிர்த்ததை மிக கண்கவர் அழகியலோடு படம் பிடித்துள்ளதாக பாராட்டியுள்ளனர் ஆனால்,
டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி என்பவர் மாட மாளிகைகள், அழகிய ஆடை அலங்காரங்கள் மற்றும் மனம் மயக்கும் இசையுடன் சேர்த்து நேர்த்தியாக வரலாற்றை வரலாறாக சொல்வதை கைவிட்டுவிட்டு முஸ்லீம்களை வதைப்பதற்காக தன் பங்கிற்கு இன்னொரு குச்சியை எடுத்து வலதுசாரி ஆதரவாளர்களிடம் தந்துள்ளார்.

இத்திரைப்படம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி கவிஞரான முஹமது இக்பால் ஜயாஸி என்பவரின் காவியத்தை அடிப்படையாக கொண்டது. இக்காவியத்தின் அடிப்படையில் அலாவுதீன் கில்ஜி என்ற டெல்லி சுல்தான் சித்தூர் அரசு மீது படையெடுத்து கைப்பற்றியது, சித்தூர் ராணி பத்மாவதியின் கணவரை போரில் சுல்தான் கொன்றதை தொடர்ந்து ராணி பத்மாவதி மேற்கொண்ட உயிர்த்தியாகம் பற்றி பேசுகிறது.

கற்பனை பாத்திரம்:
பெரும்பாலான சரித்திர ஆசிரியர்களின் கருத்துப்படி, 1540 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜி இறந்தபின் சுமார் 200 ஆண்டுகள் கழித்துப் பிறந்த முஹமது இக்பால் ஜயாஸி என்ற கவிஞன் உருவாக்கிய கற்பனை பாத்திரம் தான் 'ராணி பத்மாவதி' என ஒப்புக் கொண்டுள்ளனர்.

பத்மாவத் டைரக்டர் பன்சாலியின் இயக்கமும் திரைக்கதையும் ஹாலிவுட் படமான டிராய் (Troy) என்பதுடன் ஒப்பிடுகையில் அதைவிட மிகச்சிறந்த முறையில் ஜயாஸியின் கதையை படமாக்கியுள்ளார் என்பதை மறுக்க இயலாது.

டைரக்டர் பன்சாலி ஜயாஸியின் கற்பனை கதையிலோ அல்லது வேறு எந்த வரலாற்று புத்தகங்களிலோ காணப்படாத வரலாற்றுத் திரிபை புகுத்தியதன் மூலம் ஒரு உண்மையான அரசனை ஒரு காட்டுமிராண்டியாகவும், பெண் பித்தனாகவும் உருவகப்படுத்தி வரலாற்றின் அடிப்படையையே தகர்த்துள்ளார்.

யார் இந்த அலாவுதீன் கில்ஜி?
கில்ஜி உண்மையில் மிருகத்தனம் உடையவரா?

இந்தக் கேள்விக்கு பதில் அறிய விரும்புபவர்கள் வரலாற்றை ஊனப்படுத்தும் 'பான்சாலி'த்தனமான கொடூர சிந்தனைகளிலிருந்து விலகி தூய மனதுடன் வரலாற்று பக்கங்களை தேடிப் படிக்க வேண்டும்.

1296 முதல் 1316 முதல் டெல்லியை ஆண்ட சக்தி வாய்ந்த அரசனே அலாவுதீன் கில்ஜி. கில்ஜி மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். அவர் காட்டிய வழியிலேயே அவருக்குப் பின் வந்த முகலாய மன்னர்களும், பிரிட்டீஷ் அரசும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை வரி மற்றும் வருவாய் வசூல்களை மேற்கொண்டு வந்தனர்.

அத்தியாசிய உணவுப் பொருட்கள் மற்றும் அதன் விலையின் மீது தினசரி நேரடி கள ஆய்வுகள் நடத்தி வந்ததுடன் விலைவாசிகளை கட்டுக்குள் வைத்திருந்தார். பஞ்சம் பட்டினியை வருமுன் சமாளிக்கும் திட்டத்துடன் பல தானிய சேமிப்புக் கிடங்குகளை கட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த ராணுவத் தளபதியாகவும் விளங்கினார்.

தனது 20 வருட ஆட்சியில் காட்டுமிராண்டி மங்கோலியப் படைகளை 6 முறை தோற்கடித்ததன் மூலம் மங்கோலியர்களால் இந்தியாவிற்கு நிகழவிருந்த பேராபத்துக்களை தடுத்து நிறுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கின்றனர்.

செங்கிஸ்கான் மற்றும் அவரது வாரிசுகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட மங்கோலிய ஆதிவாசிப்படைகள் கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, பெர்ஷியா, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளை நரவேட்டையாடி வெற்றி கொண்டிருந்தனர்.

நாய், பூனைகளை கூட கொன்றொழித்த மங்கோலியர்கள்:
அமெரிக்க வரலாற்று ஆசிரியரான ஜெரிமியா கார்டின் கருத்துப்படி, மங்கோலியர்கள் தங்களின் ரணகள வெறியாட்டத்தின் போது குறுக்கே வந்த நாய், பூனைகளைக் கூட விட்டு வைக்காது கொன்றொழித்தவர்கள்.

இன்னொரு வரலாற்று ஆசிரியரான சேஷாத்ரி குமார், மங்கோலியர்கள் படையெடுத்து நாடுகளை கைப்பற்றி வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டவர்கள் அல்ல மாறாக அங்கு நிலவும் கலாச்சாரத்தையே வேரோடு அழிப்பவர்கள் என குறிப்பிடுகின்றார்.

செங்கிஸ் கான் தலைமையில் பெர்ஷியாவை வெற்றி கொண்ட மங்கோலியர்கள் அப்போது சுமார் 6 மில்லியன் மக்களையும் கொன்றொழித்துள்ளனர் அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 1.5 சதவிகித மக்களை கொன்று தீர்த்தவர்கள். இவர்கள் மட்டும் இந்திய படையெடுப்புக்களில் அலாவுதீன் கில்ஜியை முறியடித்து வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவையே துவாம்சம் செய்து கற்பனைக்கு எட்டாத அழிவை ஏற்படுத்திச் சென்றிருப்பார்கள் என மேலும் கூறுகிறார்.

பன்சாலியோ தனது திரைப்படத்தில் கில்ஜியை ஹிந்துப் பெண்களின் பின் சுற்றும் போக்கிரியாகவும், எப்போதும் தின்று கொழுக்கும் மிருகமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

கில்ஜி ஒரு போதும் பெண்களுக்காக போர் நடத்திக் கொண்டிருக்கவில்லை மாறாக அன்றைய மரபுப்படி ஒரு சுல்தானாக தனது நாட்டு எல்லைகளை விரிவாக்குவதிலும் எதிரி நாடுகள் மீது வெற்றி கொள்வதையும் மேற்கொண்டிருந்தார். பாரசீக நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றி ஆட்சி நடத்தியவரே தவிர வெறும் கைகளால் இறைச்சிகளை குத்திக் கிழிக்கும் வித்தைக்காரர் அல்ல அவர்.

வரலாற்று ஆய்வாளர் ராணா சப்வி அவர்களின் கூற்றுப்படி, கில்ஜியின் ஆட்சி காலத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்களும், தூதர்களும் அதிகளவில் டெல்லிக்கு வருகை புரிந்ததால், பாக்தாத், கெய்ரோ, கான்ஸ்டான்டின்நோபில் ஆகிய நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று எழுந்தது.

கில்ஜி, இரண்டாம் அலெக்ஸான்டர் எனப்பொருள் தரும் ஸ்கந்தர்-இ-தானி என்று தான் அறியப்பட வேண்டும் என விரும்பினார். பொருளாதாரத்தை நிலையாக பேணும் நோக்கில் விலைவாசி கட்டுப்பாடு, மதுபானத் தடை போன்ற பல மக்கள் நல சீர்திருத்தங்களை புகுத்தியவாறு இருந்தார்.

நில வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசு வருவாயை முறையாக  உயர்த்தினார். இந்த வருவாய்கள் மூலமே மங்கோலியர்கள் உள்ளிட்ட எதிரிகளுக்கு எதிரான வலிமையான இராணுவத்தை அவரால் கட்டமைக்க முடிந்தது எனவும் ராணா சப்வி தெரிவிக்கின்றார்.

பத்மாவத் வெளியீட்டின் போது நடைபெற்ற வன்முறைகளுக்கு ராஜபுத்திரர்களின் மீது கலங்கம் சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது ஆனால் படம் வெளியான பின்னால் டைரக்டர் பன்சாலி உண்மையில் ராஜபுத்திரர்களுக்கு சிறப்பானதொரு அஞ்சலி தான் செலுத்தியுள்ளார் என்று அறிந்தவுடன் கலவரங்கள் தானாகவே அடங்கியது.

ஆயினும் டைரக்டர் பன்சாலி, கில்ஜி என்ற முஸ்லீம் மாமன்னரை ஒரு பாசிச மன்னராக, பெண்பித்து பிடித்தவராக காட்சிப்படுத்தியுள்ள வெட்கக்கேடும், உள்ளத்து மறைமுக கெட்ட எண்ணங்களுமே மேற்படி கலவரங்கள் தனிய உதவியுள்ளது.

நான் ஒரு இந்திய முஸ்லீம் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என்று இன்று சிதறிக்கிடக்கும் மண்ணை அன்று சுமார் ஆயிரம் ஆண்டுகள் நெருக்கத்தில் எம்முன்னோர்களான முஸ்லீம் மன்னர்களும், சுல்தான்களும் ஆட்சி செய்து அவர்களின் மண்ணை, மரபுகளை, கலாச்சாரத்தை, நிர்வாகத் திறன்களை பெருமைபடத்தக்க விதத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளை என்னைப் போன்ற இந்திய முஸ்லீம்களை, இந்தியாவில் முஸ்லீம் சமூகம் ஆட்சியாளர்கள் மூலம் மோசமான சூழல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள நேரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அரசர்கள் செய்தவையாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க வற்புறுத்துகிறது.

டைரக்டர் பன்சாலியின் இச்சித்திரத்தை படைப்பாளியின் சுதந்திரம் என்று கருதுவதை விட படைப்புச் சுதந்திரத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்றே கருதலாம்.

பேச்சுரிமைக்கு என்றும் ஆதரவாக குரல் தரும் நான் அதன் சந்தேகத்தின் பலனைக்கூட பன்சாலிக்கு விட்டுத்தர விரும்பவில்லை.

சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்ததோர் வெகுஜன ஊடகம் அதன் கேமராக்களின் பின்னால் இருப்பவர்கள் மிகவும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது மிக மிக அவசியம்.

இறுதியாக, பல்முனைகளில் இருந்தும் அநியாயமாக தாக்கப்பட்டு வரும் சமூகத்தை மேலும் ஒரு முனையிலிருந்து தாக்குதல் நடத்திய ஆயுதமாகவே பத்மாவத் திரைப்படத்தை கருதுகிறேன்.

என நிறைவு செய்துள்ளார் கல்ஃப் நியூஸ் ஆசிரியர் பாபி நக்வி அவர்கள்.


Bobby Naqvi
With over 20 years of experience in journalism, Bobby Naqvi has worked with several publications. He began his career in journalism in central Indian city of Bhopal. Before joining Gulf News in 2002 in Dubai, he worked with MP Chronicle, United News of India, Down To Earth and Hindustan Times in India. He joined XPRESS in 2006 and has been the Editor since 2010.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. முஸ்லிம்கள் உணரவேண்டுமே!நன்றி ஆசிரியரை...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...