Pages

Monday, February 12, 2018

இரத்த ஒலிம்பிக் ! 34 வருடங்களுக்கு முன் விண்ணில் கொல்லப்பட்ட 115 கொரியர்கள்!!

அதிரை நியூஸ்: பிப்.12
சற்றே நீண்ட பதிவு! வரலாற்றை சொல்லும் போது சிலவேளைகளில் எவ்வளவு சுருக்கினாலும் நீண்டுவிடுவதை தவிர்க்க இயலாது, வாசகர்கள் பொறுமை காக்கவும்!

தென் கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிப் 9 முதல் 25 வரை நடைபெற்று வருகின்றன. இதற்கு முன் தென் கொரியாவில் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் செப். 17 முதல் அக். 2 வரை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தன ஆனால் இப்போட்டிகளை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்ட சதியில் சிக்கி 115 பேர் மரணமடைந்தனர் என்ற சோகமும் பின்னியுள்ளது.

இன்று தென், வட கொரியாக்கள் என இருக்கும் தேசங்கள் ஒன்றுபட்ட கொரியாவாக இருந்தவை. 1910 முதல் 1945 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப் போர் முடியும் வரை ஜப்பான் ஆண்டு வந்தது. ஜப்பானிய காலனியாட்சி முடிவுக்கு வந்தபின் 1948 ஆம் ஆண்டு அன்றைய வல்லரசுகளான சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பனிப்போர்களுக்கு (cold War) இடையே சிக்கி 2 நாடுகளாக பிரிந்தன. எனினும் கம்யூனிச ஆதரவு வட கொரியா இப்பிரிவையோ எல்லைகளையோ இன்றுவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

1950 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் கம்யூனிச தேசங்களான சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் சுமார் 75,000 வட கொரிய துருப்புக்கள் தென் கொரியாவை கைப்பற்றும் நோக்குடன் திடீர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த செயலால் ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவம் என்ற பெயரில் 21 நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டுப்படைகள் களமிறங்கின. இதில் 88 சதவிகித ராணுவத்தினர் அமெரிக்கர்கள் என்பதால் இயல்பாகவே தென் கொரியாவிற்கு ஆதரவாக போரிட்டது ஐ.ந. அமைதிப்படை.

இந்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 வரை சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் 'ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம்' (Korean Demilitarized Zone) அமைத்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்துடன் அடங்கியது என்றாலும் அமைதிக்கான ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளப்படாததால் 'டெக்னிக்கலாக' இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் அமைதிக்கான போர் நிறுத்தம் ஏற்படவேயில்லை.

எனவே, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய கலாச்சாரப் புற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவை வென்றெடுத்து மீண்டும் ஒருங்கிணைந்த கொரியாவாக மாற்ற வேண்டும் என்ற தாகம் மட்டும் கம்யூனிச வாதநோயால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவிற்கு தீரவேயில்லை.

இன்றைய சர்வதேச உலகில் அடிக்கடி அமெரிக்காவை வம்புக்கிழுப்பவராக வட கொரிய அதிபர் 'கிம் ஜோங் உன்' என்கிற சர்ச்சைக்குரிய மனிதர் உள்ளார். இவருடைய தாத்தா 'கிம் இல் சுங்' வட கொரிய அதிபராக இருந்த போது தான் தென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவதற்கு சுமார் 1 வருடம் இருக்கையில் (1987) தான் இன்றைய அதிபரின் தந்தையான 'கிம் ஜோங் இல்;' என்பவரின் உத்தரவாக சர்வதேச மொழிகளை பயிற்றுவிக்கும் கல்லூரியில் ஜப்பானிய மொழி படித்து வந்த 16 வயது சிறுமி 'கிம் ஹயொன் ஹூய்;' என்பவரிடம் தேசப்பற்றை? நிரூபிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேசத்திற்காக உழைப்பதற்காக அந்த அப்பாவிப் பெண் பெற்றோர்களிடமிருந்து நிரந்தர பிரியவிடை பெற வைக்கப்பட்டாள் பின்பு வட கொரிய உளவுத்துறையின் ஏற்பாட்டில் பல பயிற்சிகளையும் சில புதிய மொழிகளை கற்றுக் கொண்டாள் அதிலும் மிக முக்கியமாக உன் தாய் நாட்டை மீண்டும் இணைப்பதற்காகத் தான் நீ உழைக்கப் போகின்றாய் என நம்ப வைக்கப்பட்டாள்.

பயிற்சிகளுக்குப் பின் தயாரான 'கிம் ஹயொன் ஹூய்' அவர்களுக்கு 'மயூமி ஹச்சியா' (Mayumi Hayachi) என்ற ஜப்பானிய பெயர் சூட்டப்பட்டது, இன்னொரு வயதான வட கொரிய ஆண் உளவாளி அவருடைய ஜப்பானிய தந்தையாக உடன்வந்தார். இருவருக்கும் போலி ஜப்பானிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
ஜப்பானியர்களாக வேஷமிட்ட அந்த 2 வட கொரிய உளவாளிகளும் ரஷ்யாவின் மாஸ்கோ அழைத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து ஹங்கேரி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா என சுற்றிவிட்டு இராக்கின் பாக்தாத் வந்து சேர்ந்தனர்.

பாக்தாதின் சத்தாம் சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரிய விமானம் எண்: 848ல் விமானமேறிய அவர்கள் இருவரும் அபுதாபி வந்தடைந்தனர். அப்போது தங்களின் தலைக்கு மேல் இருந்த கேபினில் 'நேஷனல் பானாசோனிக்' டிரான்ஸிஸ்டர் ரேடியோ வடிவில் தரப்பட்ட வெடிக்குண்டையும் அது பற்றி எரிவதற்கான இன்னொரு வேதிப்பொருளையும் வைத்துவிட்டு அபுதாபியில் இறங்கி மீண்டும் இன்னொரு விமானம் மூலம் ஜோர்டான் செல்ல முயற்சித்தனர்.

எதிர்பாராதவிதமாக எழுந்த விசா பிரச்சனையையொட்டி பஹ்ரைன் சென்று அங்கிருந்து மீண்டும் ஜோர்டான் செல்வதாக திட்டம் ஆனால் பஹ்ரைன் விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களை அதிரடிப்படை போலீஸ் சுற்றிவளைத்தது. மாட்டிக்கொண்டதை உணர்ந்த இருவரும் தங்களிடமிருந்து சயனைட் விஷம் தோய்க்கப்பட்ட சிகரெட்டை வாயில் வைத்து கடிக்க சம்பவ இடத்திலேயே ஜப்பானிய தந்தையாக நடித்த பெரியவர் சாக, இந்தப் பெண் மயங்கினார்.

இதற்கிடையில் அபுதாபியிலிருந்து புறப்பட்ட அந்த கொரிய விமானம் தனது அடுத்த நிறுத்தமான தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தை அடைய மிகச்சில நிமிடங்கள் இருக்கையில் வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பயணிகள், 11 விமான சிப்பந்தி என 115 பேரும் பரிதாபமாக மாண்டனர். அவர்களில் 113 பேர் கொரியர்கள், ஒருவர் இந்தியர் மற்றொருவர் லெபனானியர்.

கைது செய்யப்பட்டும், சயனைட் தற்கொலையிலிருந்தும் காக்கப்பட்ட'கிம் ஹயொன் ஹூய்' விசாரணையின் இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் அவரது மரண தண்டனை அன்றைய கொரிய அதிபரால் ரத்து செய்யப்பட்டு தென் கொரியாவிற்குள் ஒரு ரகசிய இடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். மரண தண்டனை ரத்திற்கு அதிபர் சொன்ன காரணம், கல்லை எறிந்தவனுக்குத் தான் தண்டனை தரப்பட வேண்டுமேயொழிய கல்லுக்கு அல்ல என்றார்.

தவறான தேசபக்தியால் தவறாக வழிநடத்தப்பட்டு 115 பேரின் மரணம் மற்றும் அவர்களது குடும்பத்தின் துயருக்குக் காரணமான 'கிம் ஹயொன் ஹூய்' தன்னுடைய சுயசரிதையை The Tears of My Soul என்ற தலைப்பில் எழுதியுள்ளார். தன்னை விசாரித்த தென் கொரிய அதிகாரி ஒருவரையே திருமணமும் செய்து கொண்டு 2 பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள அவர் 'தன்னுடைய பெரும் பாவம் மன்னிக்க முடியாதது, யாரும் மன்னிக்கவும் மாட்டார்கள் தான் என்றாலும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன் என வேண்டுகிறார்.

இவருடைய கதை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமான தாக்குதல் மூலம் சர்வதேச நாடுகளை பயமுறுத்தி 1988 ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை நாசப்படுத்த மேற்கொண்ட சதிகளையும் கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்ததுடன் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது ஆனால் ஒரேயொரு வித்தியாசம், அன்று தென் கொரியா நடத்திய ஒலிம்பிக் போட்டிகளை சிதைக்க முயன்ற வட கொரியா, இன்று தென் கொரியாவுடன் கரம் கோர்த்து ஒரே அணியாக அணிவகுத்துச் செல்கிறது. மேலும் ஐஸ் ஹாக்கிப் போட்டியில் இரு கொரிய வீராங்கணைகளும் இணைந்து ஒரே அணியாக விளையாடுகின்றனர். வட கொரிய அதிபரின் தங்கை அரசின் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

மிகவும் விறுவிறுப்பும், திருப்பங்களும் நிறைந்த இந்த வலிமிகுந்த வரலாற்றை இதற்கு மேலும் சுருக்கமாக எழுத இயலவில்லை.

தொகுப்பு: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...