Pages

Saturday, February 3, 2018

மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் ~ 90 பேர் கைது (படங்கள்)

பேராவூரணி பிப்.03
பேராவூரணி சேதுசாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மாணவியர் விடுதி, வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் மருத்துவமனை, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்ட இக்கடையை சில மாதங்களுக்கு முன்பு, இதே இடத்தில் மீண்டும் திறந்தனர். மாணவிகள், பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை அகற்ற வேண்டும் என ஜனநாயக  மாதர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில்  நடைபெற்ற பல கட்ட  சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த ஜன 20 ந்தேதி கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் ஒப்புக்கொண்டபடி இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை. இதனால் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பிப் 3 ந்தேதி சனிக்கிழமை அன்று மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன் தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, தலைவர் ஆர்.கலைச்செல்வி, பொருளாளர் டி.அமுதா, ஒன்றிய செயலாளர் இந்துமதி, சிபிஐ நிர்வாகிகள் கோ.பன்னீர்செல்வம், எம்.சித்திரவேலு, பி.காசிநாதன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், நிர்வாகிகள் வீ.கருப்பையன், ஏ.வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, வே.ரெங்கசாமி, மதிமுக வ.பாலசுப்பிரமணியன், குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மோட்ச குணவழகன், அரவிந்தகுமார், மைதீன், நாம் தமிழர் கட்சி திலீபன், தேமுதிக சுரேஷ், திராவிடர் விடுதலைக்கழகம் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், மெய்ச்சுடர் வெங்கடேசன், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல்சலாம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் ஆயர் த.ஜேம்ஸ், சாமானிய சகாக்கள் சமந்தா,
தமிழக மக்கள் புரட்சி கழகம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300 பெண்கள் உள்பட 500 பேர் மதுக்கடைக்கு பூட்டுப்போட புறப்பட்டனர். பாதையில் இரும்பு தடுப்பு அமைத்து, காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டக்குழுவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருஞானம், உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி, கோட்ட கலால் அலுவலர் கோபி, டிஎஸ்பிக்கள் வல்லம் ஜெயச்சந்திரன், பட்டுக்கோட்டை செங்கமலக்கண்ணன், கள்ளச்சாராய தடுப்பு பிரிவு அசோக்குமார் படேல், ஏடிஎஸ்பி ரெத்தினவேல், வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் சிபிஎம் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், கோட்டாட்சியர் உறுதிமொழியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கடையை மூடுவதை தவிர வேறு எதனையும் ஏற்க முடியாது என போராட்டக்குழுவினர் உறுதியாக நின்றனர். இதையடுத்து 25 பெண்கள் உள்ளிட்ட 90 பேரை காவல்துறை கைது செய்தனர்.

பெட்டிச்செய்தி
பழைய பேருந்து நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் இரண்டு இடங்களில் இரும்பு தடுப்பு அமைத்து போக்குவரத்தை காவல்துறையினர் தடை செய்தனர். இதனால் இரண்டு இடங்களுக்கும் இடையே அமைந்துள்ள மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர். நோயாளிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் அமர்ந்து சமையல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதிய பெண்மணி வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட பின் பெண்மணி இயல்பு நிலைக்கு திரும்பினார். சாலையை அடைத்து காவல்துறை கெடுபிடி காட்டியதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டவர்களை சிபிஎம் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் சந்தித்து பேசினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...