Pages

Saturday, February 3, 2018

'பக்கவாதமா? பயப்பட வேண்டாம்' ~ 'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் வேணி

'மூளை நரம்பியல் நிபுணர்' டாக்டர் அ. வேணி 
அதிரை நியூஸ்: பிப்.03
'பக்கவாதமா? பயப்பட வேண்டாம்' என வலியுறுத்துகிறார் திருச்சி, ராக்போர்ட் நரம்பியல் மையத்தின் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அ. வேணி.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது;
காலையில் மலரும் மலர்கள் போல் நாமும் தினமும் மலர்கிறோம். வேகமாக இயங்கும் உலகத்தில் நாமும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதை நோக்கி ஓடுகிறோம், வாழ்வின் நோக்கம் என்ன, நமது உடலின் இயல்பு என்ன, நமது உடலை எப்படி நோய்களிடம் இருந்து பேணி பாதுகாத்து, எப்படி ஆரோக்;கிய வாழ்வை நாம் வாழ வேண்டும் என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்.

உள்ளங்கையில் அடங்க கூடிய அலைப்பேசி மூலம் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்கிறோம். இலட்சக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஏவுகணையை இங்கிருந்தே இயக்குகிறோம். அறிவியல் அதிசயங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

நாம் வாசம் செய்யும் நம் உடலை அதிலும் நம்மை, நம் இதயத்தை மற்றும் அனைத்து பாகங்களையும் இயக்கும் நமது மூளை பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்றால் எத்தனை கோடி அறிவியல் அதிசயங்கள் வந்தாலும் அதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதை உணர்வோம் வாசகர்களே….

மூளை நரம்பியல் நிபுணரான நான் பல்வேறு மூளை நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயால் மக்கள் தன் உடல் இயக்கத்தை இழந்து நிற்பதை பார்க்கிறேன். சிலர் தன் வாழ்க்கையையே ஒரு நொடியில் இழந்து விடுகிறார்கள். இதில் முக்கிய நோய் பக்கவாத நோய். மக்கள் பக்கவாத நோயைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். ஆனால் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும். அதன் அறிகுறிகள் என்ன நோய் வந்நதால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் தான் பக்கவாத நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மனிதன் என்பவன் உடல், உள்ளம், உணர்வு ஆகிய மூன்றின் சங்கமம். நமது மனம் நமக்கு ஆருயிர் நண்பனாகவும், உயிரை போக்கும் பகையாளியாகவும் உள்ளது. இந்த இரண்டில் எதுவாக நம் மனம் இருக்க வேண்டும் என்பதை, நாம் நம் மனதிற்கு அளிக்கும் பயிற்சியே முடிவு செய்கிறது.

வாழ்நாள் முழுவதும் நோயின்றி பல்லாண்டு வாழ்வதும், நோயுடன் மரணிப்பதும் நம் மனதின் கையில் தான் உள்ளது. நாம் நம் மனதைக் கொண்டு உடலின் ஒவ்வொரு செல்லையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மனதை கொண்டு உடலையும், உடலைக் கொண்டு மனதின் உணர்வுகளையும் கையாண்டு, நோய் அறிகுறிகளை அறிந்து, நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களின் மனதில் நிறுத்த என்னின் சிறிய முயற்சி இதோ…

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான பகுதி மனித மூளை தான். இங்கிருந்தே மனித உடலின் அனைத்து விதமான செயல்களுக்கும் கட்டளை இடப்படுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல, மனித மூளை இல்லாமல் மனிதனுடைய செயல்கள் எதுவும் நடைபெறாது. இந்த மூளையானது எந்தவித பிரச்சினைகளுமின்றி செயல்பட்டால் தான் நாம் இயல்பாக வாழ முடியும்.

நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பார்க்கும்போது, நமது மூளையானது மிகவும் தனித்துவம் வாய்ந்தது. எனவே தான் கபால எலும்புக்குள் அது பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. மனித மூளைகளிலேயே ஆண் மூளைக்கும், பெண் மூளைக்கும் எடை விகிதத்திலும் சரி, செயல்திறனிலும் சரி நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பெண் மூளையின் எடையானது 1350 கிராம் எடையிலும், ஆண் மூளையின் எடையானது 1450 கிராம் என்ற அளவிலும் இருக்கும். மூளையின் தனித்துவம் என்னவென்றால், நமது வலது மூளையானது இடது பக்க உடலையும், இடது மூளையானது வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, வலது மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அது இடது பக்க கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது மூளைக்கு இரத்தமானது இதயத்தில் இருந்து இரத்தக் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. நம் மூளையானது நன்றாக செயல்பட வேண்டுமானால், சீரான இரத்த ஓட்டம் தடையின்றி மூளைக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும். இந்த இரத்த ஓட்டத்தில் 3 வினாடிகளுக்கு மேல் தடை ஏற்பட்டால் மூளை அதன் பணிகளை செய்ய இயலாது போய்விடும்.
அந்தவகையில், பக்கவாத நோய் (Stroke) என்பது மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் அடைப்பதாலோ அல்லது இரத்தக் குழாய்கள் வெடித்து நமது மூளைக்குள் இரத்தம் கசிவதாலோ வருகிறது (பக்கம் + வாதம் = பக்கவாதம்). ஒரு பக்க கை, கால் மற்றும் முகம் உட்பட உடலின் ஒரு பகுதி மட்டும் செயல் இழந்து போவதையே பக்கவாதம் என்கிறோம்.

இரத்தக் குழாயினுடைய அடைப்பைப் பொறுத்து தான் நோயினுடைய அறிகுறிகளும் அதனுடைய பாதிப்புகளும் இருக்கும். இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பினால் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால், அவரை நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த நபரை பக்கவாத நோயிலிருந்து ஓரளவு காக்க முடியும். மற்றபடி, இரத்தக் குழாய் வெடித்து அதன் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டால், எதனால் அந்த இரத்தக் கசிவு ஏற்பட்டது என்பதனையும், அதன் காரணிகளையும் கண்டுபிடித்து அதன் பின்னர் தான் சிகிச்சையளிக்க முடியும்.

பக்கவாதம் உண்டாகவிருப்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஒரு பக்கமாக கை,கால் செயல் இழத்தல்; ஒரு பக்கமாக வாய் கோணல்; பேச முடியாமல் போதல்; பேச்சில் தடுமாற்றம்; திடீரென ஒரு பக்கமாக கை, கால்கள் உணர்ச்சி குறைதல்; ஒரு கண் பார்வை மறைத்தல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது பார்வை இரட்டையாகத் தெரிவது; திடீரென நடையில் தள்ளாட்டம்; திடீரென விக்கல் ஏற்பட்டு சாப்பிடும் போது புரை ஏறுவது; திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு நினைவு இழத்தல் இந்த அறிகுறிகளில் எவை தென்பட்டாலும் உடனே நரம்பியல் நிபுணரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.
100 பேருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டால், அதில் 30 பேருக்கு பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 30 பேருக்கு 50-90 % வரை சரியாகிவிடும். மற்றொரு 30 பேருக்கு 10-50% வரை பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 10 பேர் பக்கவாதம் வந்த ஒரு மாதத்தில் இறந்துவிடுகின்றனர்.

இப்படியான இந்த பக்கவாத நோயை மற்ற நோய்களைப் போல பார்க்க முடியாது. பக்கவாத நோய் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்கக் கூடியது அல்ல. ஏனென்றால், பக்கவாத நோயானது பெரும்பாலும் ஆண்களையே அதிகமாக தாக்குகிறது. எனவே, குடும்பத்தின் தலைவனாக இருக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுமானால், அதுவரை அவரது உழைப்பினாலும் சம்பாதியத்தாலும் இயங்கிவந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் இதுபோன்று ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் அந்த ஒட்டுமொத்த குடும்பமுமே நிலைகுலைந்துவிடும். எனவே, இந்த பக்கவாதத்தினை தடுப்பது தான் சாலச்சிறந்தது.

இந்த பக்கவாத நோயானது எதனால் ஏற்படுகிறது? பக்கவாத நோய் வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை பக்கவாத நோய் ஏற்பட்டுவிட்டால் என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.

சிறப்பு நேர்காணல்: 
அதிரை நியூஸ்க்காக ஏ.சாகுல்ஹமீது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...