Pages

Sunday, February 11, 2018

அதிராம்பட்டினத்தில் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், பிப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மமக 10 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக/மமக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழகத்தில் சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரையிலான பரப்புரை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையிலானக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வருகை தந்தனர்.

அதிராம்பட்டினத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு, கட்சி அலுவலகம், தக்வா பள்ளிவாசல் முக்கம், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, கல்லூரி முக்கம், பிலால் நகர் ஆகிய 8 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து பேசியது;
சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளுக்காக வேண்டி வீரியமாக குரல் கொடுத்தக் கட்சி மனிதநேய மக்கள் கட்சி. இந்த பரப்புரை பயணம் 3 நோக்கங்களுக்காக நடைபெற்று வருகிறது. முதலாவது, 'சாகர் மாலா' என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள், துறைமுகங்கள், நீர் வழிகள் ஆகியவற்றை மோடியின் கூட்டாளியாக இருக்கக்கூடிய அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கக்கூடிய திட்டம்தான் சாகர் மாலா திட்டம். இதனால், மீனவர்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டப்படுவார்கள். மீனவ்ர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் கேட்டினை விளைவிக்கக்கூடிய திட்டம்தான் இந்த சாகர் மாலா திட்டம்.

அடுத்து, இந்திய அரசிய சாசன சட்டம் 25 வது பிரிவு, இந்த நாட்டின்  குடிமக்கள் எந்தவொரு மதத்தையும் ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும், பரப்புரை செய்யவும் உரிமை அளித்து இருக்கிறது. இந்த உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது. பெண்களை பாதுகாக்கக்கூடிய சட்டம் என சொல்லப்படுவது உண்மையல்ல. முஸ்லீம் குடும்பங்களை சிதைக்கக்கூடிய சட்டம். அப்பாவி முஸ்லீம்களை சிறையில் தள்ளக்கூடிய ஒரு கொடுரமான சட்டம். இது ஒரு கறுப்புச்சட்டம். இவற்றைக் கண்டித்தும் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

மூன்றாவதாக, இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு, வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக நடத்தக்கூடிய வாக்குப்பதிவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது. இயந்திர வாக்குப்பதிவு முறை ஒரு சந்தேகப் பார்வையுடன் பார்க்கக்கூடிய, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்து இருக்கிறது. எனவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களது மூன்றாவது கோரிக்கை' என்றார்.

முன்னதாக, தமுமுக,மமக அதிரைப் பேரூர் அலுவலகத்தில் மவுலான அபுல்கலாம் ஆஸாத் படிப்பகத்தை திறந்து வைத்தார். பின்னர், பயனாளி ஒருவருக்கு மருத்துவ நிதி உதவி ரூ. 2 ஆயிரம் மற்றும் தலா 5 கிலோ அரிசி வீதம் 60 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, தமுமுக / மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் வழக்குரைஞர் தஞ்சை பாதுஷா, தாம்பரம் யாகூப், தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, தமுமுக அதிரை பேரூர் துணைச் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன், மாவட்ட துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார், தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் முகமது யூசுப் உட்பட தமுமுக / மமகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்காக கடைத்தெரு அலுவலகம், நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

திமுகவினர் வரவேற்பு:
அதிரை பேருந்து நிலையத்தில், பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாவுக்கு திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...