Pages

Sunday, February 11, 2018

படிக்கும் பிள்ளைகளை இயந்திரமாக்காதீர்!

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆற்றல் மிக்கதாகவும்,பண்பாடு மற்றும் நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் உருவாக்குவது தான்.

அன்றைய கல்வி அரசால் கொடுக்கப்பட்ட போது நான் மேலே சொன்ன நல்லொழுக்கமும் சிறந்த பண்பாடும் பிள்ளைகளிடம் இருந்தன.ஆனால் இன்றோ கல்வி முற்றிலும் தனியாரின் லாபம் ஈட்டும் தொழிற்கூடமாகி விட்டன.

அன்றைய கல்வி என்பது காலை 9.00மணி முதல் மாலை 4.30மணி வரை தான், ஆனால்  இன்றோ காலை 8மணிக்கு பள்ளிக்கூடம் போய்ட்டு இரவு 7 மணிக்கு தான் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கே வருகிறார்கள்.

அன்றைய கல்வி முறையில் மாணவர் சமுதாயத்திற்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைத்ததால் நமது பாரம்பரியமிக்க விளையாட்டுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டனர்.அன்றைய விளையாட்டுகளில் பல்வேறு முறைகள் இருந்தன.

கிட்டி கம்பு, கோகோ, நொண்டி தாண்டுதல், கள்ளன் போலிசு, ரைட்டா?தப்பா? என்னும் சில்லு விளையாட்டு, கபடி போன்ற உடலுக்கு வலிமை கொடுக்கும் விளையாட்டுகள் பற்றி இன்றைய தலைமுறையிடம் கேட்டால் தெரியாது என்பர்.

காரணம் அப்போதெல்லாம் மாலை 4.30 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டால் வீட்டுக்கு வந்து புத்தக பையை வைத்து விட்டு உடனே வீதிக்கு வந்து தங்களின் தோழமைகளோடு சேர்ந்து இரவு 7மணி வரைக்கும் விளையாடிய நிலை மாறி இன்றோ இரவு 7மணிக்கு தான் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கே வருகிறார்கள்.

ஒரு தொழிலாளிக்கு கூட நாளொன்றுக்கு 8 மணி நேரம் தான் வேலைக்கானதென்று இருக்கும் போது பள்ளி படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் 10 மணி நேரம் படிப்புகென ஒதுக்கினால் அந்த பிள்ளைகள் என்ன தான் செய்யும்?

வார விடுமுறை கட்டாயம் என்ற நிலையையும் இன்று பல்வேறு பள்ளிகளில் மாற்றி விட்டனர்.விடுமுறை இல்லாமல் வாரத்தின் 7 நாட்களும் பாடம் நடத்துகின்றனர்.இதை கண்டித்து நாம் எதிர் கேள்வி கேட்டால் எங்கள் பள்ளிக்கூடத்தில் இதுதான் சட்டம் என தெனாவெட்டாக பதில் கொடுக்கின்றனர் தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகள்.

10,11,12 வகுப்பு படிக்கும் மாணவர் மாணவியரை பற்றி சொல்ல வேண்டிய தேவையே இல்லை.மாநிலம் மாவட்ட அளவில் தங்கள் பள்ளி மாணவர் மார்க் எடுக்க வேண்டுமென விருப்பம் கொள்வது தவறல்ல,அதற்காக மாணவர் மாணவியரை இயந்திரங்கள் போல் நடத்துவது ஏற்புடையதல்ல.

10மணி நேரம் பள்ளியிலேயே பொழுதை போக்கி விட்டு இரவு வீட்டுக்கு வந்தால் அங்கேயும் வீட்டுப்பாடம் என்ற பெயரில் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இதுபோன்ற பிள்ளைகள் பெற்றோர்,உடன் பிறந்தோர்,பக்கத்து வீட்டு உறவுகளிடம் கூட நெருங்கி பழக முடியாத ஒரு மன அழுத்தத்தை பெற்று விடுகின்றனர்.

சுருக்கமாக சொன்னால் இன்றைய மாணவர்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை அடிமை போல் நடத்தி தங்களின் பள்ளிக்கூட தகுதியை மாணவர்களின் மதிப்பெண்களை காட்டி உயர்த்தி கொள்ளும் தனியாரின் போக்கு கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

மாணவர்களை கசக்கி பிழிந்து தங்களின் கஜானாக்களை அட்மிஷன் என்னும் பெயரில் நிரப்பி கொள்ளும் தனியாரின் போக்கினை மத்திய மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும்.வார விடுமுறை மற்றும் அரசாங்க பொதுவிடுமுறைகளில் பாடம் நடத்தும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூட வேண்டும்.

அதிக பொதி சுமையோடு அதிக நேரம் மாணவர்களை இயந்திரங்களை போல் நடத்தும் பள்ளி நிர்வாகங்கள் தாங்களாக திருந்தா விட்டால்...அரசு திருத்த வேண்டுமென்பதே மொத்த மாணவர் சமுதாயத்தின் கோரிக்கையாகும்.

-கீழை ஜஹாங்கீர் அரூஸி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...