Pages

Friday, February 23, 2018

ஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் PFI ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.23
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த மாநில பிஜேபி அரசைக்கண்டித்தும், தடையை திரும்ப பெற வலியுறுத்தியும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மதுக்கூர் எம்.சேக் அஜ்மல் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட்.முகமது இலியாஸ், துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் அபுல் ஹசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பிஎஃப்ஐ அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் கலந்துகொண்டு பேசியது;
தேசம் முழுவதும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. சமூக உரிமைகளுக்கான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடுக்கான திட்டங்கள், நாடு முழுவதும் பின்தங்கிய 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து, அங்கு முழுமையான கல்வியைப் பெற உதவி வருகிறது. மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி, தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் இழப்புகளில் முன்னின்று களப்பணியாற்றியது இந்த இயக்கம். தேசம் முழுவதும் கல்விப்பணிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.10.75 கோடி கல்விப்பணிக்கு செலவிட்டுள்ளது. பள்ளி செல்ல இயலாத 3.31 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி உள்ளது. 6 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகைக்காக ரூ.3.79 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடத்திற்கு முன்பு சென்னை வெள்ளத்தின் போது, எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4500 செயல்வீரர்கள் களப்பணியாற்றி வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை தேடிச் சென்று வழங்கினோம். இதன்மூலம், சுமார் 1.40 லட்சம் பேர் பயனடைந்தனர். நாடு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம்.

இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து அடித்தட்டு மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், மதச்சார்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நீதிக்காக போராடும் அனைத்து அமைப்புகளும், இஸ்லாமிய இயக்கங்களும், பொதுமக்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்போடு கரம் கோர்க்க வேண்டும். சமூக நீதிக்காக போராட வேண்டும்' என்றார்.

மேலும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலாளர் ரியாஸ் அகமது, தமுமுக மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த ஜார்க்கண்ட் மாநில பிஜேபி அரசைக்கண்டித்தும், தடையை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், தமுமுகவினர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில், வழக்குரைஞர் நிஜாமுதீன் வரவேற்றுப் பேசினார். முடிவில், பிஎப்ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்வர் உசேன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பை சேர்ந்த சலீம், புஹாரி, அசார், ரிழா, அன்வர் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...