Pages

Tuesday, March 27, 2018

உலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்கள் ~ வர்ணனை)

அதிரை நியூஸ்: மார்ச் 27
விமான பயணம் என்பது ஒரு சுகமான ஆனால் செலவு கூடுதலானதொரு அனுபவம். உலகில் சுமார் 1,000க்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஒருசில மிகச்சிறியதாகவும் குறைவான எண்ணிக்கையிலான விமான சேவைகளையும் கொண்டிருக்கும் வேறு சில விமான நிலையங்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு விமானம் வந்திறங்கிச் செல்லும், இவற்றையே நாம் பரபரப்பான விமான நிலையங்கள் என குறிப்பிடுகிறோம்.

விமான வருகைகள் என்பது குறைவோ அல்லது நிறைவோ, ஒரு சில விமான நிலையங்கள் நம்மை வெகுவாக ஈர்த்துவிடும் மற்றொருபுறம் சில விமான நிலையங்கள் இனி இங்கு வரவே கூடாது என எண்ணத்தூண்டும் (உதாரணமாக நம்ம மதுரை விமான நிலையம்)

இன்னும் சில விமான நிலையங்களின் கட்டுமான தோற்றங்கள் மிக அழகாக தோன்றும் என்றாலும் இப்பார்வை மனிதனுக்கு மனிதன் வேறுபடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. சில விமான நிலையங்கள் ஒவ்வொரு மனிதனை விட்டு வைக்காது அழகில் மயக்கிவிடும், உலகின் அத்தகைய 25 மிக அழகிய விமான நிலையங்களை பட்டியலிட்டுள்ளோம், பாருங்கள்! ரசியுங்கள்!!

-- நம்ம ஊரான்
1. Changi Airport - Singapore
1. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்: 
நகரின் மத்தியிலிருந்து சுமார் 17 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. தொடர்ந்து பல வருடங்களாகவே சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. விமான நிலையத்திற்கு உள்ளேயுள்ள தோட்டங்கள், பொழுது மற்றும் ஓய்வுக்கான சாதனங்களுடன் 'கொய்' (Koi) எனப்படும் அழகிய மீன்களின் தாடகங்களும் மனதை மயக்கும் வல்லமை உள்ளவை.
2. Madrid Bajaras Int'l Airport - Spain
2. மேட்ரிட் பஜாரஸ் சர்வதேச விமான நிலையம் ~ ஸ்பெயின்:
நகரிலிருந்து மிகச்சில கி.மீ தூரமேயுள்ள இந்த விமான நிலையம் குறிப்பாக இதன் டெர்மினல் 4 மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களில் மனதை தொலைத்துவிட வாய்ப்புண்டு.
3. இன்ச்சியோன் சர்வதேச விமான நிலையம் ~ தென் கொரியா: 
தலைநகர் சியோலில் இருந்து சில கி.மீ தூரமேயுள்ள இந்த விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று என்பதுடன் தென் கொரியாவின் மிகப்பெரியதும் கூட. இங்குள்ள உட்புறத் தோட்டங்களும், ஸ்பா, கேஸினோ போன்ற இன்னபிற வசதிகளும் இதையொரு சிறு நகரமாக தோன்றிடச் செய்யும்.
4. Marrakech Menara Airport - Morocco
4. மராகெச் மெனாரா விமான நிலையம் ~ மொரொக்கோ: 
இதற்கு முன் ராணுவ விமான தளமாக இருந்து பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட்டது. 2 டெர்மினல்களுடன் 15 சர்வதேச தடங்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த விமான நிலையம் இஸ்லாமிய கலாச்சார கட்டிட வடிவமைப்பியலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இதன் உட்புறத் தோற்றம் உலகின் சிறந்த வடிவமைப்புக்களில் ஒன்று.
5. Wellington Int'l Airport - New Zealand
5. வெல்லிங்டன் சர்வதேச விமான நிலையம் ~ நியூஸிலாந்து: 
இது உலகின் அழகற்ற விமான நிலையங்களில் ஒன்று என இகழப்பட்டாலும் இதன் 'ராக் டெர்மினலின்' (Rock Terminal) வடிவமைப்பு இப்பழியை துடைத்து காப்பாற்றுகிறது. 'ராக் டெர்மினலின்' உட்புற அழகிய வடிவமைப்பில் சொக்கிப் போவீர்கள். இந்த விமான நிலையம் 1947 ஆம் வருடம் திறக்கப்பட்டதுடன் நியூஸிலாந்தின் 3வது பரபரப்பான விமான நிலையமாகவும், 30 சர்வதேச தடங்களை இணைக்கும் நிலையமாகவும் திகழ்கிறது.

6. கன்சாய் சர்வதேச விமான நிலையம் - ஜப்பான்: 
அருகிலுள்ள ஒசாகா நகர சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலை சமாளிப்பதற்காக ஒசாகா விரிகுடா கடல் (Osaka Bay) பகுதியில் செயற்கை தீவு ஒன்று 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதன் மீது இவ்விமானத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 20 சர்வதேச தடங்களுக்கு விமானங்கள் பறக்கின்றன.
7. ஜியோவன்னி நிசெல்லி விமான நிலையம் - இத்தாலி: 
உள்நாட்டு சேவையை மட்டும் செய்து வரும் இந்த விமான நிலையத்திற்கு வெனீஸ்-லிடோ விமான நிலையம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு 2 விமானச் சேவைகள் மட்டுமே நடைபெறுகின்றன என்றாலும் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் உள்ள லவுஞ்சுகளில் மிகவும் அருமையான, உலகில் ஒன்றென போற்றத்தக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தை சுற்றி காணப்படும் வெனீஸ் நகர நீர்ப்பரப்பும் (லகூன்) அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
8. பிரின்ஸஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம் - செயின்ட் மார்ட்டீன்  
கரீபியன் தீவுகள்: வெஸ்ட் இன்டீஸ் என அழைக்கப்படும் கரீபியன் தீவுகள் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கடற்கரைக்கு மிக மிக அருகில் இருப்பதால் விமானங்களை தொட்டுவிடும் தூரத்தில் ரசிக்கலாம். மேலும் விமான நிலையத்தின் உள்ளும் ஸ்தம்பிக்கச் செய்யும் அழகு இலங்குகிறது. இங்கிருந்து 15 சர்வதேச விமானத் தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
9. கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் - சவுதி அரேபியா: 
தம்மாம் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த விமான நிலையம் 1999 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தின் ராஜரீக உட்தோற்றமும், ஆடம்பரமும், உணவகங்களின் உபசரிப்பும் அரேபியர்களின் விருந்தினர்கள் மீதான அன்பையும் உபச்சாரம் போன்றவற்றையும் எடுத்தியம்புவதாக உள்ளது. இதற்கு முன் தஹ்ரானிலுள்ள ராணுவ விமான நிலையமே பயணிகள் விமான நிலையமாக செயல்பட்டு வந்தது.
10. கர்ராஸ்கோ சர்வதேச விமான நிலையம் - உருகுவே: 
இந்த விமான நிலையம் பயணிகள் பெரிதும் விரும்பும் விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து 15 சர்வதேச தடங்களுக்கு விமான சேவை நடைபெறுகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய டெர்மினல் பிரசித்தி பெற்ற வடிவமைப்பாளர் ரபேல் வினோலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மேலும் இதன் 365 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதன் கூரை பிரமிக்கச் செய்யும் வனப்பாகும்.
11. கெய்ரோ சர்வதேச விமான நிலையம் - எகிப்து: 
இந்த விமான நிலையம் எகிப்து நாட்டிலேயே மிகவும் பரபரப்பு நிறைந்த வான் போக்குவரத்து உடையதும் பிரம்மாண்டதுமாகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு அடுத்து 2வது பெரிய விமான நிலையமுமாகும். இங்கிருந்து 30க்கு மேற்பட்ட சர்வதேச தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தினுள் நிஜ பேரீத்த மரங்களும், வண்ண விளக்குகளில் ஜோடனையும் ஜொலிக்கச் செய்கின்றன.
12. சர் சிவூ சாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையம் - மொரிஷியஸ்: 
உச்சரிக்க மிகவும் கடினமாகவுள்ள இந்த விமான நிலையத்தின் பெயர் 'சர் ஷிவ் சாகர் ராம்கூலம்' என்றிருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இங்கு தமிழர்கள் உட்பட பல இந்திய வம்சாவளியினரே அதிகளவில் வாழ்வதுடன் தொடர்ந்து ஆட்சிபுரிந்தும் வருகின்றனர். இது தலைநகரிலிருந்து 48 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதுடன் 20 சர்வதேச வான் தடங்களையும் இணைக்கின்றது. இந்த விமான நிலையத்தின் வெளிப்புறத் தோற்றம் 'கற்பனையான வேற்று கிரகவாசிகளின் விண்கல' (Alien Spaceship) தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் உட்புற அலங்காரமும் ரசிக்கும்படியே உள்ளது.
13. டென்வர் சர்வதேச விமான நிலையம் - அமெரிக்கா: 
யுனைடெட் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவேயாகும், அமெரிக்காவின் 6வது மற்றும் சர்வதேச அளவில் 18வது பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இதன் கூரைகள் பிற விமான நிலையங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு கொத்தான கூடாரங்களின் (Bunch of Tents) தொகுப்பு போல் அமைக்கப்பட்டுள்ளதுடன் உட்புறமும் மிக நேர்த்தியான அலங்காரத்தால் வசீகரிக்கக்கூடியது.
14. ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்: 
1998 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அழகிய விமான நிலையத்திலிருந்து 20 உலக நாடுகளின் 30 விமான நிலையங்களுக்கு சேவைகள் நடைபெறுகின்றன. இந்த விமான நிலையத்தின் மேற்கூரையின் அழகிலும் உட்புற அழகான வடிவத்திலும் மயங்கினால் உங்களுடைய அடுத்த விமானத்தை தவறவிட நேரிடலாம், அப்படியொரு அழகு.
15. மால்வினாஸ் அர்ஜென்டினாஸ் உஷூஐயா சர்வதேச விமான நிலையம்: 
உஷூஐயா எனும் குட்டித்தீவில் அமைந்துள்ள இச்சிறிய சர்வதேச விமான நிலையம் உலகின் தென்கோடி (Southernmost) திசையில் அமைந்துள்ள ஒரே விமான நிலையமாகும். இது 1995 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புற வித்தியாசமான வடிவமைப்புக்கள் மிகச்சிறந்தவைகளில் ஒன்றாக விளங்குகிறது.
16. வான்கூவர் சர்வதேச விமான நிலையம் - கனடா: 
வான்கூவர் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் 1968 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்பதுடன் கனடாவின் 2வது பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இதன் வருகை பகுதியில் இமிக்கிரேசன் கவுண்டருக்கு முன்னுள்ள கூடம் (Arrival Hall) உங்களை மெய்மறக்கச் செய்யும் என்பதுடன் அழகிய, பிரம்மாண்ட மீன்காட்சி தொட்டி (Aquarium) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
17. பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையம் - சீனா: 
இது ஆசியா கண்டத்தின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று என்பதுடன் இதன் டெர்மினல் 3 உலகின் பெரிய முனையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது 1958 ஆம் ஆண்டு முதல் செயல்படுவதுடன் சுமார் 100 சர்வதேச தடங்களுக்கும் சேவை வழங்குகிறது. இதன் சுந்தரத் தோற்றம் உங்களின் பொன்னான நேரத்தை விழுங்கிவிடும் என்பது உறுதி.
18. பிராங்பர்ட் விமான நிலையம்: 
ஐரோப்பாவின் 4வது மற்றும் ஜெர்மனியின் முதலாவது பரபரப்பான விமான நிலையமாகவும் திகழ்கிறது. நகரிலிருந்து மிகச்சில கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 சர்வதேச நாடுகளின் சுமார் 300 விமான நிலையங்களுக்குச் செல்லலாம். இதன் உட்புற லாபிகள் ஒரு விமான நிலையத்தை போன்று அல்லாமல் நட்சத்திர விடுதிகளை (Star Hotels) போன்ற உணர்வை தரும்.
19. கோப்பன்ஹேகன் சர்வதேச விமான நிலையம் - டென்மார்க்: 
1925 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வரும் இந்த விமான நிலையம் நகரிலிருந்து 8 வது கி.மீ.யில் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களிலேயே இதுவே மிகப்பழமையானது. நோர்டன் / நோர்டிக் நாடுகள் (Norden or Nordic Countries) என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நர்வே, சவீடன், கிரீன்லாந்து, ஃபரோ தீவுகள் மற்றும் ஆலந்த் தீவுகள் ஆகியவற்றிலேயே மிகப்பெரிய விமான நிலையம் இதுவேயாகும். இதன் அக அலங்காரங்கள் உங்கள் தாடைகளில் உமிழ்நீரை வடியச் செய்யும் ஆற்றலுடையவை.
20. பிரிஸ்பேன் சர்வதேச விமான நிலையம்: 
ஆஸ்திரேலியாவின் 3வது பரபரப்பானதும், மிக அழகியதுமான இந்த விமான நிலையம் 1988 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது பிரிஸ்பேன் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளதுடன் இங்கிருந்து 20 சர்வதேச நாடுகளுக்கு பறக்கலாம். இதன் உட்பகுதி மிக நவீன டிஸைன்களாலும் பல வண்ண உயிர்ச் செடி கொடிகளாலும் இன்னபிறவற்றாலும் அழகு தாண்டவமாடுகிறது.
21. சிட்னி சர்வதேச விமான நிலையம்: 
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையம் உலகின் மிகப்பழமையான பயணியர் விமான நிலையமாகும். இது சிட்னி நகரின் தென்பகுதியில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதுடன் ஆஸ்திரேலியாவின் மிக பரபரப்பான விமான நிலையமுமாகும். இங்கிருந்து 35 சர்வதேச விமான தடத்திற்கும், 36 உள்நாட்டு விமானத் தடத்திற்கும் பயணம் செய்யலாம். சிறப்பு வாய்ந்த இந்த பழைய விமான நிலையத்தின் உட்பகுதிகள் மிகப்பெரும் பரப்பில் கலையம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
22. ஹமாத் சர்வதேச விமான நிலையம் - கத்தார்: 
இந்த நவீன விமான நிலையம் 2014 ஆம் ஆண்டு திறக்கப்படுமுன் தோஹா சர்வதேச விமான நிலையமே பிரதான விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. வண்ணமய விளக்குகளால் ஜோடிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தினுள் உயிர் பேரீத்த மரங்களும் உள்ளது சிறப்பு.
23. கோலோங் பான் விமான நிலையம் - ஜெர்மனி: 
இது பிரம்மாண்ட விமான நிலையமாக இல்லாத நிலையிலும் ஜெர்மனியின் முக்கிய அழகியல் சூழ்ந்த விமான நிலையங்களில் ஒன்றாகவே விளங்குகிறது. கோலோங் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், பான் நகரிலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளதுடன் 30 உலக நாடுகளின் 100 சர்வதேச வான் தடங்களை இணைக்கிறது. இதுவும் ஓர் வாங்க பழகலாம் வகை இனிய ஏர்போர்ட் தான்.
24. ஓ.ஆர்.டம்போ சர்வதேச விமான நிலையம் - தென் ஆப்பிரிக்கா: 
1952 ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த விமான நிலையம் அரசால் 2006 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்படுமுன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் என்றே அழைக்கப்பட்டது. இங்கிருந்து அண்டார்டிகா கண்டம் நீங்கலாக அனைத்து கண்டங்களுக்கும் இடைநில்லா விமானங்கள் இயக்கப்படுகின்றன. தலைநகரிலிருந்து சில கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ள இந்த விமான நிலையமே ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும். இதன் அழகும் வனப்பும் சொல்லித் தெரிவதல்ல!
25. மெல்போர்ன் விமான நிலையம்: 
மெல்போர்ன் பிரதேசத்திற்குள்ளேயே அமைந்து 4 விமான நிலையங்களில் இதுவே முதன்மையானதும், ஆஸ்திரேலியாவின் 2வது பரபரப்பான விமான நிலையமுமாகும். இது 1970 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதுடன் நகரிலிருந்து 23வது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களும் கனிவு நிறைந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

Source: http://viralhotnewz.com
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...