Pages

Wednesday, March 28, 2018

71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக்கியரின் நெகிழ்ச்சி!

அதிரை நியூஸ்: மார்ச் 28
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அவசரகதியாலும், ஆழ்ந்த சதியாலும் இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக துண்டாடப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் விளைந்த பெருந்துயரம் வரலாற்றில் மிகப்பெரும் காயாத இரத்தக் கரையாகவே உள்ளது.

இன்றைய தலைமுறைக்கு பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்கள் தேசப்பிரிவினை என்ற எளிய சொல்லோடு கடந்து சென்றுவிடுகிறது ஆனால் அன்றைய பிரிவினை பொழுதில் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் சிதையுண்டும், சொத்து சுகங்களை, உற்றார் உறவுகளை, பிறந்த மண்ணை நிரந்தர பிரிதல் என பல்வேறு சொல்லெணாத் துயரங்களை சந்தித்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது 14 வயது சிறுவனாக இருந்தவர் தற்போது 84 வயதை எட்டியுள்ள சர்தார் ஹர்பஜன் சிங் என்ற பெரியவர். இவரது சொந்த ஊர் பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் 'ஓகாரா' என்பதாகும். இவரது குடும்பமும் அனைத்தையும் விட்டுட்டு இந்திய பகுதியிலுள்ள பஞ்சாபின் சன்டீகர் நகரில் குடியேறியது. அதற்குப் பின் தான் பிறந்த மண்ணை பார்க்கும் வாய்ப்பே கடந்த 71 ஆண்டுகளாக அவருக்கு வாய்க்கவேயில்லை எனினும் அவரது நினைவுகள் மட்டும் எப்போதும் 'ஓகாரா'வவையே சுற்றிவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் தனது பிறந்தகமான 'ஓகாரா'விற்கு சென்று தனது பூர்வீக வீட்டை தரிசித்த வேளையில் உள்ளத்தின் பூரிப்பு கண்களில் நீராய் பெருக்கெடுத்து ஓடியது. அந்நகர மக்களும், வியாபாரிகளின் சங்கமும் மலர்தூவியும், பாஞ்சாபிய கலாச்சார மேளங்களை இசைத்தும் வரவேற்பளித்தனர்.

சர்தார் ஹர்பஜன்சிங்கின் தந்தை ஓகாராவில் வியாபாரிகளின் சங்கத்தலைவராக இருந்தபோது கைப்பட எழுதி வந்த ஒரு கணக்கு வழக்கு ஏட்டையும் (லெட்ஜர்) நினைவுப்பரிசாக வழங்கி மகிழ்ந்தனர் ஹபீஸ் இம்தியாஸ் ரஸா தலைமையில் செயல்படும் பிரச்சா டிரேடர்ஸ் எனும் வியாபாரிகள் சங்கத்தினர், இந்த சங்கம் முன்பு பிரிட்டீஷ் இந்தியாவில் துர்கா தாஸ் கமிஷன் ஏஜென்ட் என்ற பெயரில் ஹர்பஜன் சிங்கின் தந்தையால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த உணர்ச்சிபூர்வ விஜயம், ஓகாராவாசிகளின் அன்பு, பெருந்தன்மை, வியாபாரிகளின் உளங்கனிந்த வரவேற்பு என சர்தார் ஹர்பஜன் சிங் திக்குமுக்காடியதை அவரது மகனும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியுமான அமர்தீப் சிங் பாட்டியா தனது டிவிட்டர் கணக்கில் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதுடன் இருநாட்டு மக்களும் மீண்டும் எத்தகைய தடைகளுமின்றி சுதந்திரமாக இருநாடுகளுக்குள்ளும் சென்றுவரும் சூழ்நிலைகள் அமைதி மற்றும் பரஸ்பர இணக்கத்தின் மூலம் உருவாக வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வை பற்றி குறிப்பிட்ட ஓகாராவாசியான சாஜித் அலி என்பவர், இருநாட்டு அரசியல் காரணங்களையும் தாண்டி இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பரஸ்பரம் நேசிக்கின்றோம். எங்களுடைய மண்ணின் மைந்தனை வரவேற்பதில் பேருவுவகை கொள்கின்றோம் என தெரிவித்தார்.

ஓகாராவில் தற்போது ஒரு சீக்கியர் கூட இல்லாத நிலையிலும் அவரது வீடு அதே அமைப்பில் இன்னும் பராமரிக்கப்பட்டு வருவதை சுட்டிய சர்தார் ஹர்பஜன் சிங்கின் மகன் அமர்தீப் சிங் பாட்டியா, இது அந்நகர மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது, இந்தியாவிலும் இப்படி நடைபெறுமா? என்ற தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியதை வழமைபோல் சிலர் விமர்சிக்கத் துவங்கியதை அடுத்து, நான் பாகிஸ்தானை புகழ்ந்தோ அல்லது வேறு யாரையும் இகழ்ந்தோ பேசவில்லை மாறாக ஒருவருக்கொருவரை நேசிக்கத் தெரிந்த மக்களையும் அவர்தம் மனிதநேயத்தையுமே பாராட்டியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த டிவிட்டர் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த கல்ஸா எய்டு (Kalsa Aid) என்ற தொண்டு அமைப்பின் தலைவர் ரவீந்தர் சிங் என்பவர் கூறியதாவது, நானும் கூட பாகிஸ்தானிய மக்களால் அன்போடும், மரியாதையுடனும் வரவேற்கப்பட்டுள்ளேன். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சிலர் இருக்கின்றனர் தான் ஏன் அவர்களை வெறுக்கின்றோம் என்ற காரணம் தெரியாமலேயே ஆனால் நேசிக்கத் தெரிந்தவர்கள் இருபுறமும் ஏராளமாக உள்ளனர் என தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...