Pages

Saturday, March 10, 2018

அதிராம்பட்டினத்தில் சீமான் பேச்சு (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மார்ச் 10
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியது;
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து அளித்த அறிவு ஆசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவை இந்துகள் நாடு என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள். என்னுடைய மூதாதையர்கள் மொழிகூட தமிழ்தான் என்றார்.

இன அரசியல் வலிமை என்பது நாங்கள் முன்னெடுத்தது அல்ல. எங்கள் தாத்தா கண்ணியமிகு காயிதே மில்லத் முன்னெடுத்தது. காயிதே மில்லத் என்றால் தமிழில் வழிகாட்டி என்று பொருள். அவர் காட்டிய வழியில் அவரது பேரன்கள் பயணிக்கிறோம். மிகவும் தொன்மையான மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்மொழி தான் இந்திய மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி. அந்த தமிழ் மொழி என் தாய்மொழி என்பதில் நான் பெருமையடைகிறேன். இஸ்லாம் எங்கள் வழி. இன்பத் தமிழே எங்கள் மொழி என்ற முழக்கத்தை இந்திய பாராளுமன்றத்தில் முழங்கியவர் நமது தாத்தா காயிதே மில்லத் அவர்கள்.

மதம் என்பது நாம் ஏற்றுக்கொண்டது. தமிழும், தமிழர் என்பதும் நமது பிறப்பின் அடையாளம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். சாதி மதங்கள் என்று தமிழனால் சாதிக்க முடியாது. இமயமலை வரை பரவியிருந்த தேசிய இன மக்கள் இன்று குறுகி குறுகி அதிகார வலிமையற்று தாய்நிலத்தில் அடிமைப்பட்டு கிடக்க காரணம் அரசியல் வலிமை, அதிகார வலிமையற்று நிற்பதுதான்.

பழனி பாபா சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார். மதத்தை முன்னிறுத்தி நின்றால் நம்மை தனிமை படுத்துவார்கள். அச்சுறுத்துவார்கள். மொழி, இனமாக நின்று பார், நீ வலிமை பெறுவாய், பாதுகாப்பாக வாழ்வாய் என்று கற்பித்தார்.

முகமது நபி (ஸல்) கூறினார்கள் ஒருவன் இன பற்றுடன், மொழி பற்றுடன் வாழ்வது இனவெறி அல்ல. தனது இனம் சார்ந்தவன் என்பதற்காக அவன் செய்யும் அனைத்து தீமைகளுக்கும் உடந்தையாக இருப்பதுதான் இனவெறி. ஒரு இனம் மற்றொரு இனத்தை தாக்கி அழிப்பது இனவெறி என்றார். இவற்றைதான் நாங்கள் பின்பற்றுகிறோம். தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்றார் நபிகள் நாயகம், இன்று சமூகத்தில் நல்ல கல்வி இருக்கா? தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள். கல்வியை காசுக்கு விற்கிறார்கள். கல்வி என்பது மானுட உரிமை. அவற்றை கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. கல்வியை சந்தைப்பொருளாக மாற்றித் தந்தது இந்த அதிகாரங்கள். உயிர் காக்கும் மருத்துவம், ஏழைக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு ஒன்று. எல்லா உயிரினங்களுக்கு தேவையாக இருக்கக்கூடிய குடிநீரை வியாபாரமாக்கியது உண்டா? நாம் விலைக்கு வாங்கி குடிப்போம். மற்ற உயிரினங்கள் எங்கே போகும்?

குண்டு வீசி கொலை செய்வது மட்டும் இனப்படுகொலை அல்ல. குடிக்க வைத்து கொலை செய்வதும் படுகொலைதான். அதேவீட கொடியது, ஒரு இனத்தை, அதன் தாய் மொழியிலிருந்து வெளியேற்றி அனுப்புவது மிகக் கொடுமையான படுகொலை. தமிழனை தாய் மொழியிலிருந்து அப்புறப்படுத்தி அவனின் அடையாளத்தை அழித்து அவனை கொள்வது என்பது மிகக்கொடுமையான இனப் படுகொலை.

படிக்கும் மாணவர்கள் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம் என்கிறார். இவற்றை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். படித்தவர்கள் விலகி நின்றால் யார் வழிகாட்டுவது? மாணவர்கள் யாரும் என்னுடைய சினிமா படங்களை பார்க்க வேண்டாம் என்று சொல்ல முடியுமா? மாணவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போடாதிங்க என்று சொல்ல முடியுமா? எவ்வளவு ஆபத்தான சிந்தனை இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர் நிலத்தை தமிழர்கள் ஆழ வேண்டும் என்பது தமிழ் தேசிய இனத்தின் இறையான்மை தார்மிக உரிமை.

நாங்கள் பாசிஸ்ட் இனவெறியர்கள் கிடையாது. எங்களைப்போல் இந்த உலகத்தை பேரின்பம் கொண்டு நேசித்த இனம் உலக வரலாற்றில்  கிடையாது. எல்லோரும் மனிதநேயத்தை மட்டும்தான் பேசினார்கள். தமிழன் மட்டுதான் உயிர்மை நேயம் பற்றி பேசினான்.

நாம் இந்துக்கள் அல்ல. இந்து மதத்தையும், இந்தியா என்ற பெயரையும் உருவாக்கியது வெள்ளைக்காரன். வணிகத்திற்காக இங்கு வந்த வெள்ளைக்காரன் நமது பிரிந்த கிடந்த பகுதிகளை இணைந்து இந்தியா என்று பெயரிட்டு அழைத்தான். அவன் தான் இந்து சொல்லையும் உருவாக்கினான். இந்து என்ற சொல் மதமல்ல. நம்முடைய மதம் வீரசைவம் மற்றும் வீரவைணவம் தான். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி நம் தமிழர் மொழி. இதன் பின்னர் வந்ததுதான் மதமும், சாதியும்.

ஓட நடக்க உடம்பில் தெம்பு இருக்கும் போது உங்கள் பிள்ளைகளுக்கு அதிகாரம் கொடுங்கள். அரை நூற்றாண்டு கால அழுக்குகளை கூட்டி சுத்தம் செய்வது சாதாரமானது அல்ல. எங்களுக்கு ஓட்டைப் போட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். நாங்கள் எல்லாவற்றையும் சரிசெய்வோம். கற்றவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது. கல்வி அனைவருக்கும் சரியான சமமான தரமான கல்வி இலவசம். முதலைமைசர், அமைச்சர்கள் வீட்டுப் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும். உயிர் காக்கும் மருத்துவம் ஏழைக்கொன்று, பணக்காரார்களுக்கு ஒன்றில்லை. அனைவருக்கும் சரியான சமமான தரமான மருத்துவம்,  தூய குடிநீர் எல்லோருக்கும் இலவசம். மிக்சி, கிரைண்டர் இலவசம் கிடையாது. இவையெல்லாம் இலவசமாக பெற வேண்டிய நிலையில்லாத ஏழ்மை, வறுமை இல்லாத பொருளாதாரத்தில் மேம்பட்டு மக்கள் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு பொருளாதரத்தில் மேம்படச் செய்வோம். கல்வி, கல்விகேற்ற வேலைவாய்ப்பு, அதற்கேற்ற ஊதியம் அதைக்கொண்டு பெருமையாக வாழ்கிற வாழ்க்கை. இதுதான் எங்களது கனவு. இலவசத்திற்கு கையேந்துவது என்பது தேசியத்திற்கு அவமானம். வாக்குக்கு பணத்தைக் கொடுத்து வாங்குவது அல்ல அதிகாரம். மண்ணை வாழ வைக்கணும். வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு.

இன்று தாய் நிலங்கள் அழிக்கப்பட்டு பாலைவனமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்னொரு தலைமுறை வாழ முடியாத நிலமாக இது மாறிக்கொண்டு இருக்கிறது. இதை பாதுகாத்து, வருங்கால தலைமுறைக்கு பத்திரமான வாழ்விடமாக ஒப்படைப்பதற்கு உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு அரசியல் வலிமை கொடுங்கள்' இவ்வாறு சீமான் பேசினார்.

முன்னதாக, கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே  ஜியாவுதீன், மாவட்ட இணைச் செயலளார் கரிகாலன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மணி. செந்தில், துரைமுருகன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை ஜெயசீலன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன், அய்யம்பேட்டை கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர்.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மீ. செகுபர் சாதிக், செயலாளர் சே.சைபுதீன், பொருளாளர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட முடிவில் துணைச் செயலாளர் சிவக்குமார்  நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...