Pages

Tuesday, March 20, 2018

இந்திய எதிர்காலத்திற்கு ஆபத்து! வரலாற்றை திரிக்கும் வேலைக்கு குழு அமைத்தது மோடி அரசு!

வேண்டுகோள்: 
அன்புநிறை வாசகர்களே! இது ஒரு நீண்டதொரு பெரிய பதிவு என்றாலும் பயனுள்ளதொரு கட்டூரை. இந்த வரலாற்று திரிபின் மூலம் பாதிக்கப்படப்போவது முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் மட்டுமல்ல மாறாக பார்ப்பனர், பனியாக்கள் அல்லாத ஒட்டுமொத்த இந்தியர்களுமே என உணருங்கள். 

படிக்கும் போது ஒருவகையான சோர்வுத்தன்மையும் கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது போன்ற உணர்வும் ஏற்படும் என்றாலும் தயவுசெய்து கடைசிவரை படித்து ஆபத்தை உள்வாங்கிக் கொள்ள முற்படுங்கள் என வேண்டுகிறேன். 

நேரடியாகவே ஆங்கிலத்தில் படித்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக அந்த கட்டூரையின் சுட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. 

http://gulfnews.com/news/asia/india/by-rewriting-history-hindu-nationalists-aim-to-assert-their-dominance-over-india-1.2183557

கருத்தாக்கத்தில் தவறு காண்பவர்கள் தயவுசெய்து காரணத்துடன் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். (நம்ம ஊரான்)

இந்தியாவின் வரலாற்றை மாற்றி (திரித்து) எழுதுவதன் மூலம் இந்து தேசியவாதிகள் (என கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்) பிற இனங்களின் மீதான தங்களது மேலாதிக்கத்தை மீண்டும் வன்மையாக நீட்டிக்க முயல்கின்றனர்.

கடந்த வருட ஜனவரி மாதத்தின் ஒருநாள் மத்திய டெல்லியிலுள்ள ஒரு வெள்ளை மாளிகையில் கல்வியாளர்களின்(?) குழுவொன்று கூடியது. அவர்கள் ஒன்றுகூடியதன் நோக்கம் 'இந்திய வரலாற்றை எவ்வாறு திருத்தி (திரித்து) எழுதுவது என்பது பற்றி ஆலோசிப்பதற்காகவே. (During the first week of January last year, a group of Indian scholars gathered in a white bungalow on a leafy boulevard in central New Delhi. The focus of their discussion: how to rewrite the history of the nation).

இந்த கல்வியாளர்கள் (எனும் போர்வைக்குள் ஒழிந்துள்ள (காவிச் சிந்தனைக்) குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்து காவி தேசியவாதத்தை பின்னனியாக கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் சத்தமின்றி நியமிக்கப்பட்டுவிட்ட சங்கதி தற்போது தான் முதன்முறையாக வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

இந்த குழுவினரின் (சதி) ஆலோசணை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அதன் உறுப்பினர்கள் அளித்த நேர்காணலில், எங்களிடமுள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புக்களும், மரபணு ஆய்வுகளும் இந்த தேசத்தின் ஆதிகுடிகள் இந்துக்களே, மக்களும் மதமும் வேறு எங்கிருந்தும் வந்தவையல்ல, அவர்களிடமுள்ள வேதங்கள் (புராணங்கள்) உண்மையானவையே அன்றி அவை (மூட நம்பிக்கையில் அமைந்த) கற்பனை கதைகள் அல்ல என கூறினர்.

14 பேர் கொண்ட இந்த கல்வியாளர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக்குழுவின் ஒட்டுமொத்த கருத்து என்னவெனில், சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகையுடனும் பல்லின மதங்களின், இனங்களின் கலவையாக காட்சியளிக்கும் இந்த இந்தியாவை அரசியல் அதிகாரத்தையும் மீறி என்றென்றும் தங்களுடைய கைக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர் இந்து தேசியவாதிகள் (எனக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்). எனவே, இந்தியா இந்து தேசம், இந்துகளுக்கு மட்டுமேயான தேசம் என்பதற்கு ஏற்ப இந்தியாவை கட்டமைக்க வேண்டியுள்ளதாம்.

இந்த கட்டமைப்பின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்து நிலவுகின்ற பன்முகத்தன்மைகளை அடியோடு நீக்க விரும்புகின்றனர். இன்றைய நவீன இந்தியா என்பது குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் மன, மத மாற்றங்கள் எனும் 'பல வண்ணக்காட்சிகள்' கொண்ட மக்கள் தொகை மூலம் வேறுன்ற செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையிலேயே பெரும்பான்மை இந்துக்களுக்கு அடுத்து இஸ்லாமியர்களும் இதரர்களும் சுமார் 240 மில்லியன் அளவுக்கு இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த குழுவின் தலைவரான கே.என். தீக்ஸித் கூறியதாவது, பண்டைய வரலாற்றின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசுக்கு உதவும் ஒரு அறிக்கையை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம் எனக்கூறியதை இக்குழுவின் சூத்திரதாரியாக விளங்கும் மத்திய கலாச்சாரத் துறை மந்திரி மகேஷ் ஷர்மா என்பவர் உறுதிபடுத்தியதுடன் 'இந்த குழுவினரின் வேலை இந்திய வரலாற்றை மாற்றி எழுதும் எங்களுடைய ஒரு பெரிய (சதி) திட்டத்தின் சிறுபகுதியே எனக்கூறினார்.

2014 ஆம் ஆண்டு மோடியின் தலைமையில் இந்த அரசு பதவியேற்றதில் இருந்து முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அதிகரித்து காணப்படும் மதப் பாகுபாடுகள் ஆகியவை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களால் இதுபோல் முஸ்லீம்கள் எப்போதும் ஒரேயடியாக ஒதுக்கப்பட்டதே இல்லை என அகில இந்திய மஜ்லீஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி கூறினார்.

மேலும் இந்த மத்திய அரசு இந்திய முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்துகின்றது எனவும் கூறினார். இக்கட்டூரையின் மீது பிரதமர் மோடியின் கருத்தை பெற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முயன்றபோது அவர் கருத்து கூற முன்வரவில்லை.

வகுப்பறைகளுக்குள்:
இந்தியாவில் இதுபோன்ற வரலாறுகளுக்கு எதிரான சித்தாந்த விவாதங்களை கிளப்பி விடுவதற்கு பின்னுள்ளது ராஷ்டிரிய சுயம் சேவக்சங்க் என்கிற ஆர்எஸ்எஸ் என அழைக்கப்படுகின்ற (பார்ப்பனர்களை தலைவர்களாக கொண்ட) இயக்கமாகும். இந்த இயக்கத்தின் உதவியுடன் தான் நரேந்திர மோடி தேர்தலில் வென்று பிரதமரானார், நீடிக்கின்றார். எனவே தான் இந்த ஆர்எஸ்எஸ் (பயங்கரவாத சிந்தனைகளில் ஊறிய) இயக்க உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக விவசாயம், நெடுஞ்சாலை, உள்நாட்டு பாதுகாப்பு (போன்ற அனைத்து முக்கியத்) துறைகளில் நுழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள சுமார் 170 மில்லியன் முஸ்லீம்களின் முன்னோர்களும் ஒருகாலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான் என்பதால் முஸ்லீம்கள் இந்தியாவை பாரத மாதாவாகவும், இந்து மதத்தை தங்களின் வாழ்வியலின் ஒரு அங்கமாகவும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வன்மையாக வற்புறுத்துகிறது. இந்த இயக்கத்தில் தன் சிறுவயது முதல் அங்கம் வகிப்பவர்களில் மோடியும் ஒருவர். கலாச்சாரத்துறை மந்திரியான மகேஷ் சர்மா தன்னுடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து முற்றிலும் கட்டுப்பட்டதொரு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக உள்ளதாக புளங்காங்கிதப்படுகிறார்.

இந்தியாவின் தேசிய அடையாளத்தைப் பற்றிப் பேசும் ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, இந்தியாவின் உண்மையான நிறம் காவியே. இந்தியாவில் (மனுதர்மா அடிப்படையில்) கட்டாய கலாச்சாரம் மாற்ற ஏற்படுத்த வரலாற்றை (திரிபுபடுத்தி) மாற்றி எழுத வேண்டியதும் கட்டாயமே என பகிரங்க சாட்சியம் தருகின்றார்.

ஆர்எஸ்எஸ் (எனும் பார்ப்பனிய) இயக்கத்தின் வரலாற்று ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவுள்ள பால்முகுந்த் பாண்டே, (வரலாற்றை மாற்றி எழுதுவது தொடர்பாக கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவை அடிக்கடி சந்தித்து வருவதாக (நடைபெற்று வரும் சதியை மறைக்காமல்) கூறுகின்றார்.

மேலும் இந்துக்களின் பண்டைய நூல்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல என நிறுவ (பீஜேபி ஆட்சியிலிருக்கும்) இதுவே சரியான தருணம் எனவும் வாக்குமூலம் தருகின்றார்.

பள்ளிக்கல்வி பாடங்களிலும், கல்விசார் ஆய்வுகள் மீதும் எவ்வாறு இந்து வரலாற்றை உட்புகுத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழு விரைவில் வழிகாட்டும் என எதிர்பார்ப்பதாக மகேஷ் ஷர்மா கூறினார். 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது முதல் இன்று வரையான இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய முழுமையான ஆய்வு மற்றும் உலகின் பிற காலச்சாரங்களின் மீது அதன் தாக்கம் குறித்து ஆராயும் குழுவென்றே அரசின் ஆவணங்களில் இக்குழுவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் (பார்ப்பனர்கள்) சுமார் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து ஊடுருவியவர்கள் என்று போதிக்கப்பட்டு வரும் வரலாறு நீக்கப்பட்டு இந்தியாவில் இந்து மதமே முதன்மையானது, முதலில் தோன்றியது என பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் எனவும் மகேஷ் ஷர்மா தெரிவித்தார். (அதாவது மகேஷ் ஷர்மாவின் இக்கூற்றுப்படி, பதிலை ஆய்வுக்குழுவிடம் தந்துவிட்டு அதற்கேற்றவாறு கேள்வியை தயாரிக்கச் சொல்லியுள்ளனர்)

இடப்பெயர்வுகளால் ஒன்றிணைந்த பன்முக கலாச்சார மக்களால் உருவான சங்கமமே 'இன்றைய இந்தியா' என்பதையே ஏற்க மறுக்கின்றனர் இந்து (பார்ப்பன) தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோரும், மோடியின் சகாக்களும். இந்தியா இந்து என்ற ஆதி குடிகளால் இயல்பாய் உருவானதே என 'இல்லாத ஒன்றை' நம்பச் சொல்கின்றனர். யார் இந்த மண்ணின் மைந்தர்கள் என வலிந்து நிறுவுவதே இந்து தேசியவாதிகள் (எனும் பார்ப்பனர்கள்) முன்னுள்ள பெரும் சவாலாகும்; ஏனெனில் அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்து ராஜ்ஜியத்தில் இந்துக்களே முதன்மையான பூர்வீகக்குடிகள் என நிறுவினால் மட்டுமே இந்து மதம் (பார்ப்பன மதம்) ஒரு இறக்குமதி செய்யப்பட்ட மதமல்ல என்பதையும் நிறுவ முடியும் என புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ரோமிலா தாப்பர் தெரிவிக்கின்றார்.

தங்களே அந்த மூதாதையர் வழிவந்த வம்சாவளியினர் என்பதையும் முன்னோர் வழிவந்ததே தங்களின் மதம் என்பதையும் வலிந்து உறுதிப்படுத்த (பார்ப்பன) இந்து தேசியவாதிகள் என அழைத்துக் கொள்வோர் மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் பண்டைய இந்திய குறித்த பல வரலாற்று ஆய்வு நூல்களின் ஆசிரியரும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவருமான புகழ்பெற்ற பெண் வரலாற்றாசிரியர் 86 வயது ரோமிலா தாப்பர்.

இந்து தேசியவாதிகள் என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் சுமார் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து வந்தேறியவர்கள் என்ற வரலாற்று கோட்பாடு பிரிட்டீஷ் இந்தியாவின் காலத்தில் தழுவப்பட்டது என காவி கட்சியினர் குமுறுகின்றனர்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்கள் 'இந்தியாவின் மதச்சார்பின்மை கோட்பாட்டையும், முஸ்லீம்களின் சகிப்புத்தன்மையையும் போற்றி வந்ததுடன் இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரமே என குறிப்பது முற்றிலும் தவறானது என்று கூறிச் சென்றுள்ளார்.

நேரு துவங்கி சுமார் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட அவரது காங்கிரஸ் கட்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை மதித்ததுடன் அவர்களை மத அடிப்படையில் பாகுபடுத்தி நடத்துவதையும் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனம் சட்டப்பூர்வமாக தடுத்துப் பாதுகாத்தது.

வலதுசாரி இந்துக்கள் (பார்ப்பனர்கள்) இந்திய சரித்திரத்திற்கு எதிராக புதியதொரு இந்து காவி முகத்தை நிறுவுவதற்கான பிரச்சாரத்தை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரான சசிதரூர் கூறினார்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இந்தியர்கள் பன்முகத்தன்மையில் உறுதி கொண்டு நிலைத்துள்ளதை கலைத்துப் போடும் வகையில் இந்து தேசியவாதம் எனும் பிளவு உணர்வை மக்களிடையே தூண்டி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இந்து மத நூற்களில் கூறப்பட்டுள்ள புனைவுகள்:
இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் மேலாண் இயக்குனரை சமீபத்தில் 14 கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை உறுப்பினர்களாக கொண்ட வரலாற்றை திருத்தி எழுதவுள்ள குழுவினர் அதன் தலைவரான திக்ஷீத் தலைமையில் சந்தித்து உரையாடியது. தீக்ஷீத் என்பவரும் அதே தொல்பொருள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரி என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த வரலாற்றுத் திருத்த (திரித்தல்) கல்விக்குழுவினர் தங்களின் ஆய்வறிக்கையை (?) பாராளுமன்றத்தில் கலாச்சார துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் சமர்ப்பிப்பர் பின்பு மனிதவள அமைச்சகத்திற்கு அந்த வரலாற்று கண்டுபடிப்புகளை(?) கல்விக்கூட பாடப் புத்தகங்களில் பாடங்களாக வெளியிட பரிந்துரை செய்வார். கல்வி மற்றும் கல்வியறிவுத் திட்டங்களுக்குப் பொறுப்பான மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மற்றொரு கடும்போக்கு ஆர்எஸ்எஸ்காரரான பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார அமைச்சகம் பரிந்துரை செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் மனிதவள அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். பள்ளி, கல்லூரிகளில் தற்போது கற்பிக்கப்பட்டு வரும் வரலாறு குறித்து கேள்வி கேட்கும் துணிவு தங்களது அரசங்கத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் மார்தட்டுகிறார் பிரகாஷ் ஜவடேகர்.

வரலாற்று ஆய்வுக்கமிட்டி தனது முதலாவது கூட்டத்தில் இயற்றியுள்ள தீர்மானத்தில், பண்டைய இந்து நூல்களுக்கும் பல்லாண்டுகள் பின்னுள்ள பண்டைய இந்தியாவிற்கும் இடையில் சான்றுகளைப் பொருத்தி ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என அதன் தலைவர் திக்ஷித் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்பை ஏற்படுத்துவதன் வழியாக இந்து புராண நூற்களில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மையானவை, இந்தியர்கள் அனைவரும் பண்டைய இந்துக்களின் வழிதோன்றல்களே என இருபலன்களை முடிவாக பெறமுடியும்.

தொல்பொருள் கள ஆய்வுகள், மனித எச்சங்கள் மீதான கார்பன் டேட்டிங் போன்ற காலக்கணிப்புகள் போன்ற ஆய்வுகளையும் நடத்துவதன் மூலம் தங்களுக்கு தோதானதொரு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவான ஓரு குறுக்கு யுக்தியையும் வழங்கி, தங்களின் மறைவான குறிக்கோளில் வெற்றியடைய விரும்புகிறது இந்த காவி ஆய்வுக்குழு.

கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது, இந்து வேதங்கள் அனைத்தும் உண்மையானவையே என நிறுவ (திணிக்க) விரும்புகிறோம். ராமாயணம் என்ற புராணத்தைப் பற்றி குறிப்பிடும் போது அது 'மனித உருவில் கடவுள் வாழ்ந்த காவியம்' எனவே, ராமாயணத்தை போற்றி வணங்குகிறேன், அது ஓர் வரலாற்று ஆவணம் எனவும் நம்புகிறேன். இவற்றை புனைவு என்று சொல்பவர்களின் நம்பிக்கை தவறானாதாகும். இந்த புராணம் ராமன் எவ்வாறு தன் மனைவியை ஒரு ராட்சச அரசனிடமிருந்து மீட்டான் என விவரிக்கும் நிகழ்வுகள் இந்தியர்களுக்கு தங்களின் பாலினக் கடமையுணர்வுகளை கற்றுத்தருகின்றது என கூறினார்.

பழங்கால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள 'மாய நதியான' சரஸ்வதியை அகழ்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை தருவோம். மேலும் (பார்ப்பன) வேதங்களில் காணப்படும் சாஸ்திர நிகழ்வு காலங்களை ஆய்வு செய்வதுடன் மற்றொரு புராணமான மஹாபாரத்தில் சொல்லப்பட்டுள்ள போர் நடைபெற்ற களங்களையும் வெளிக்கொண்டு வருவோம் என மந்திரி மகேஷ் சர்மாவும் ஆய்வுக்குழுவின் தீர்மானங்களும் சொல்கின்றன.
கிருஸ்தவர்களின் பைபிளில் பூர்வக்காலத்தில் ஏற்பட்டதொரு பிரம்மாண்ட வெள்ளப் பெருக்கும், நோவா மற்றும் அவரது கப்பல் பற்றியும் பேசப்படுகின்ற அதே நம்பிக்கையை பின்பற்றி இந்தியாவின் பண்டைய வரலாறுகளையும் ஆராய்ந்தால் இன்று கட்டுக்கதைகள் என சொல்லப்படுபவையும் நாளை உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும். குர்ஆனையும் பைபிளையும் வரலாற்றின் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும் போது ஏன் இந்து (பார்ப்பன) வேதங்களை இந்தியாவின் வரலாறாக ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது எனவும் சர்மா வினவினார்.

மோடியால் உத்தரவிடப்பட்டு இப்படியொரு வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழு உருவாக்கப்படவில்லை என்றும் இது மந்திரி சர்மாவின் ஏற்பாட்டிலேயே நடைபெற்று வருவதாகவும் அரசு ஆவணங்கள் சொல்கின்றன என்றாலும் இத்திட்டம் மோடியின் கண்காணிப்பில் நடைபெற்று வருவதை அவரது செயல்கள் உறுதி செய்கின்றன. 2014 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு மருத்துவமனை திறப்புவிழாவில் உரையாற்றிய மோடி இந்து (பார்ப்பன) வேதங்களில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளையும் யானைத் தலையுடன் காணப்படும் விநாயகர் பற்றியும் புகழ்ந்து பேசினார்.

நாங்கள் வணங்கி வழிபடும் விநாயகரின் யானைத்தலை தோற்றம் பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக்காலத்தில் இருந்துள்ளதையும், இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் அன்றைக்கு இருந்துள்ளதாலே இது சாத்தியமாகி இருக்கின்றது, இதுபோன்று எங்கள் மூதாதையர்கள் பங்களிப்புச் செய்த பல சரித்திரங்கள் உள்ளன எனக் கூறினார் என்றாலும் இதுகுறித்து மேல்விளக்கங்கள் பெற முயன்ற ராய்ட்டாஸ்; செய்தி நிறுவனத்திற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அறிவியல்பூர்வ அணுகுமுறை:
14 பேர் கொண்ட இந்த வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழுவின் 9 உறுப்பினர்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பேட்டி கண்டது. தற்போது அறியப்பட்டுள்ள இந்திய வரலாற்றை விட நாம் அறியாத இந்திய வரலாறு மிகவும் பழமையானது, இந்தப் பழமையான வரலாற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள் மற்றும் இன்னபிற ஆதாரங்களை பொருத்துவதே தங்கள் பணி என ஒப்புக் கொண்டனர் என்றாலும் தங்கள் குழுவின் உள்ளார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேச மறுத்துவிட்டனர். பேட்டியளித்த இந்தக் குழுவில் ஒரு புவியியல் துறை அறிஞர், தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள், சமஸ்கிருத மொழி அறிஞர்கள் மற்றும் 2 அரசியல்சார் அரசுப் பிரதிநிதிகளும் அடக்கம்.

இந்த வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழுவில் ஒருவரும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை பேரசிரியருமான சந்தோஷ் குமார் சுக்லா என்பவர் கூறியதாவது, இந்து (பார்ப்பன) கலாச்சாரம் பல மில்லியன் வருடங்கள் பழமையானது என தான் உறுதியுடன் நம்புவதாக ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளார். (அவர் நம்பிக்கை அவர் இஷ்டம், அந்த நம்பிக்கையை ஏன் பிற இந்தியர்களை நம்பச் சொல்லி வற்புறுத்த வேண்டும்). டெல்லி பல்கலைகழகத்தின் முன்னாள் மொழியியல் துறை தலைவரான ரமேஷ் சந்த் சர்மா என்பவர், தான் கண்டிப்பாக அறிவியல்பூர்வ அணுகுமுறைகளை மட்டுமே கடைபிடிக்கப்போவதாகவும், எந்த கருத்தியல் நிர்பந்தத்திற்குள்ளும் என்னை நுழைத்துக் கொள்ள மாட்டேன் என திருவாய் மலர்ந்துள்ளார்.

இந்திய கூட்டரசின் சார்பில் மத்திய கலாச்சார துறையின் கீழ் ஆண்டுக்கு சுமார் 400 மில்லியன் டாலர்கள் (1.46 பில்லியன் ரூபாய்கள்)இந்திய வரலாற்றை (திரித்து) திருத்தி எழுதுவதற்கும், அதுகுறித்து பிரச்சாரம் செய்வதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஒரு மருத்துவரும், பல சங்கிலித் தொடர் மருத்துவமனைகளின் உரிமையாளருமான மகேஷ் சர்மா கலாச்சார (பண்பாட்டுத்) துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட பின், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படியே செயல்படுவதாக (வஞ்சகப்) புன்னகையுடன் கூறுகின்றார். மத்திய டெல்லியில் உள்ள அவரது பங்களாவின் வரவேற்பறை வாசலில் பாரத மாதா எனும் கற்பனை சித்திரத்துடன் அவர் மதிக்கும் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் படங்களே அலங்கரிக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இவர் தனது அமைச்சகத்தின் சார்பாக பல நூறு கருத்தரங்குகளை, பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி 'நமது புகழ்பெற்ற கடந்த கால மேலாதிக்கத்தை' (மனுதர்ம அடிப்படையில் பார்ப்பனர்களைவிட மற்ற மனிதர்கள் யாவரும் தாழ்ந்தவர்களே, பார்ப்பனர்களுக்கு அவர் அடிமைகளே எனும் உருப்படாத தத்துவத்தை) நிலைநாட்டுவதே தங்களின் பிரதான நோக்கம் என தெரிவித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியால் (நேருவால்) கடைபிடிக்கப்பட்டு அவர்வழி வந்த காங்கிரஸ் அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த தாராளவாதம் மற்றும் மதச்சார்பற்ற தத்துவங்களுக்கு எதிராக புதிய சிந்தனைக் களம் ஒன்றை உருவாக்குவது அவசியம் எனவும் கூறினார்.

கலாச்சாரத் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது செயல்படும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வலதுசாரி இந்து தலைவர்கள் (ஆர்எஸ்எஸ்) என அறியப்படுபவர்களின் நிகழ்ச்சிகளால் வசப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பாஜகவின் தலைவர் அமீத்ஷாவால் முன்னாள் பிரதமர் நேரு மேற்கத்திய சிந்தனைகளால் பீடிக்கப்பட்ட நபராக சித்தரிக்கப்பட்டார். எங்களுடைய கொள்கைகள் மீது இந்திய மண்ணின் வாசனை நிரம்பியிருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவின் வரலாற்றில் நமது (பார்ப்பனர்) கடந்த காலத்தை பற்றிய உண்மைகளை (பொய்களை) புகுத்த (திணிக்க) இதுவே சரியான தருணம் எனவும் கூறியிருந்தார்.

இந்த வரலாற்று திரிபு கொள்கைகளுக்கு பின்னுள்ளவர்கள் யார்? (மேற்காணும் பதிவின் கருத்துச் சுருக்கம்)

1. இந்திய வரலாறு குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்களை ஏற்படுத்துவதன் பின்னனியில் தீவிரப் பழமைவாத இயக்கமான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கமே உள்ளது. 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பிஜேபி கட்சியின் ஆட்சியமைய உதவியதுடன் முக்கிய அமைச்சகங்களான விவசாயம், நெடுஞ்சாலைகள், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பலவற்றில் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டில் வார்த்தெடுக்கப்பட்டவர்களையே அமைச்சர்களாக அமரச் செய்துள்ளது.

2. வம்சாவளி இந்தியர்களான 172 மில்லியன் முஸ்லீம்களும் தங்களின் மூதாதையர் மதம் இந்து என்பதையும், தாங்கள் அனைவரும் பாரதத் தாயின் புதல்வர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என ஆர்எஸ்எஸ் கட்டாயப்படுத்துகின்றது. இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் குழந்தைப்பருவம் முதல் ஒரு தீவிரத் தொண்டராக இருப்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. பண்பாட்டுத்துறை மந்திரி மகேஷ் சர்மாவின் அதிகாரபூர்வ சுயசரிதையிலும் தான் ஒரு 'முற்றிலும் அடிபணிந்த ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரர்' என பகிரங்கமாகவே எழுதியுள்ளார்.

3. பார்ப்பனர்களின் இயக்கமான ஆர்எஸ்எஸின் செய்தித் தொடர்பாளரான மோகன் வைத்யா என்பவர் கூறியதாவது, காவியே இந்தியாவின் நிறம். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைக்க (திரிக்க) வேண்டியது அவசியம் என்றார். மேலும் ஆர்எஸ்எஸின் வரலாற்று ஆராய்ச்சி குழுவின் தலைவரான பால்முகுந்த் பாண்டே தான் தொடர்ந்து மகேஷ் சர்மாவை சந்தித்து வரலாற்றை (திரிப்பது) திருத்துவது சம்பந்தமாக பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன் 'இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம் என்றும், புராணங்கள் கட்டுக்கதையல்ல அவை வரலாறு என நிறுவ வேண்டும் எனவும் கூறினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...