Pages

Thursday, March 8, 2018

மகளிருக்கு மாண்பளித்த மாநபி !

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் 
அதிரை நியூஸ்: மார்ச் 8
"பெண்ணுக்கு ஆண் ஆடையாகவும், ஆணுக்குப் பெண் ஆடையாகவும் இருந்து கொள்ளுங்கள்" என்பது இறைமரையாம் திருக்குர் ஆனின் தெளிவுரை. பெண்ணின் மானத்தைக் காக்க வேண்டிய கடமை ஆணுக்கும், ஆணின் மானத்தைக் காக்க வேண்டிய கடமை பெண்ணுக்கும் உண்டு என்றும், ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய பொறுப்பு இருபாலருக்கும் உண்டு என்றும் அழகுற உணர்த்துகின்றது மேற்கண்ட இறைவசனம். திருக்குர்ஆனையே தமது குண ஒழுக்கமாகக் கொண்டிருந்த நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் மேற்கண்ட திருமறைக் கருத்தை ஒட்டியமைந்து விளங்குகின்றன.

இம்மண்ணுக்கும் மின்னல் வேகத்தில் முன்னேறி என்ன, பெண்ணுரிமை முழுமையாகப் போற்றப்படுகிறதா? தந்தையின் சொத்தில் சரிசம உரிமை பெண்ணுக்கும் தரப்படுகிறதா? ஆணின் மறுமணத்தை மறுக்காது வரவேற்கும் சமுதாயம் மங்கையரின் மறுமணத்தை மறுத்து ஒதுக்குவது சரிதானா? பெண்ணின் புதுமணம் கூடப் பெரும்  பணம் கொடுத்தால்தானே நடைபெறுகிறது என்ற அவல நிலையை அனுமதிப்பது நீதிதானா? இவ்வினாக்களை ஒவ்வொருவருக்கும் தனக்குத்தானே கேட்டுச் சரியான விடை கண்டு சிந்தித்து செயல்பட வேண்டாமா?

இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னேரே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட வினாக்கள் அத்துணைக்கும் சரியான விடை கண்டு அவற்றைத் தம் முக்கிய போதனைகளாக வெளியிட்டும், அவ்வாறே வாழ்ந்தும் பெண்ணுரிமையை நடைமுறை படுத்தியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன் அறிவிலும், ஆற்றலிலும், செல்வத்திலும், செல்வாக்கிலும் உயர்நிலையில் இருந்து அரபிய நாட்டுக் குறைஷிகளிடையே இருந்து பெண்களின் நிலையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்குப் பின் பெண்கள் நிலையில் ஏற்பட்ட மருமலர்ச்சியையும் எண்ணிப்பார்த்தால், பெண்ணினத்தின் ஒளிவிளக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள் என்பது நமக்கு நன்கு விளங்கும்.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள பெண்கள் நிலை மிகப் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு ஆடவனும் வரம்பு மீறிக் கணக்கில்லாப் பெண்களை மணம் செய்து கொள்ளலாம். அவன் வேண்டும்போது மணம் செய்துகொண்டு வேண்டாத போது எக்காரணமுமின்றி மணவிலக்கு செய்துவிடும் நிலை இருந்தது. திருமணத்தில் பெண்ணுக்கு எவ்விதச் சுதந்திரமும் கிடையாது. திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் பெறவேண்டிய அவசியமே இல்லை. தந்தை, சகோதரன் விருப்பப்படியே பெண்ணின் திருமணம் நிறைவேறியது.

பெண்ணுக்குத் தந்தையின் சொத்திலோ, கணவன் சொத்திலோ உரிமை ஏதும் கிடையாது. ஓர் ஆடவன் தன் தந்தையின் மரணத்திற்குப் பின் தந்தையின் மறுதார மனைவியைத் தனது உடைமையாக்கிக் கொண்டு, விரும்பினால் தான் அவளை மணந்து கொள்ளவும், இல்லையேல் தான் விரும்பும் ஒருத்தனுக்கு மணம் முடித்துக்கொடுக்கவும் உரிமை பெற்றிருந்தான். மணவிலக்கு செய்வதற்கு ஆணுக்கு மட்டும் சுதந்திரம் உண்டு. பெண்ணுக்குக் கிடையாது. பெண் குழந்தை பிறந்தால் அதை  துன்பக்குறியாகக் கருதி அதை உயிருடன் புதைத்துவிடும் கொடூர நிலை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த ஏற்பாடு திருமணதிற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு, குழந்தையை பெற்றுடுத்த தாயே இக்கொடுஞ்செயலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது. போரின் போது சிறைபடும் பெண்களை உயிருடன் நெருப்பில் வீசி எறியும் வழக்கம் இருந்தது. 1400 ஆண்டுகளுக்கு முன் அராபிய நாட்டுப் பெண்கள் நிலை இதுதான். ஏன், பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான்.

விடிவு வராதா? வேதனை தீராதா? என வாடி நின்ற வனிதையர்களுக்கு, இருண்ட வானில் தோன்றிய விடிவெள்ளியாக, கடும் பாலையில் ஊறிய நீருற்றாக, கொடும் வெம்மையில் வீசிய குளிர் தென்றலாக நபிகள் நாயகம் (ஸல்) தோன்றினார்கள்.  வான்மறை வழிநின்று வையகத்து வனிதையர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழி வகைகளை வகுத்துத் தந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளாலும், பேரூழைப்பாலும் பெண்களின் அவல நிலை மறையத் தொடங்கியது. அவர்கள் வாழ்வில் மாற்றம் மலரத் தொடங்கியது. பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைக்கும் பெருங்கொடுமை அடியோடு அகன்றது. ஒவ்வொரு ஆடவனும் மனம்போன போக்கில் கணக்கற்ற மனைவியரை மணந்தகொள்ளும் வழக்கம் ஒழிந்தது. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட  மனைவியரை மணந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுமானால், திருமறை கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நான்கு மனைவியர்களை மணந்து கொள்வதற்கு இஸ்லாத்தில் இடமளிக்கப்பட்டது. ஆனாலும், திருமறையிலுள்ள நிபந்தனைகளை நன்கு கவனித்தால் ஓர் ஆடவன் ஒரு மனைவியுடன் இல்லறம் நடத்துவதே நடைமுறைக்கும் எளிதென்பதை நாம் அறியமுடியும். முகமது நபி (ஸல்) அவர்கள் போதனையால் காரணமின்றி மனைவியை மணவிலக்குச் செய்யும் நிலையும் நின்று போயிற்று. தக்கக் காரணம் இருந்தால் மட்டுமே மணவிலக்கு அனுமதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மணவாழ்விலிருந்துத் தன்னை விடுவித்துக் கொள்ளும் உரிமை பெண்ணுக்கும் வழங்கப்பட்டது. மணவிலக்குப் பெண்களைப் பெரிதும் பாதிப்பால் அதை முகமது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வெறுத்தார்கள். "மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விசயங்களால் மணவிலக்கைப் போன்று இறைவனால் வெறுக்கப்படுவது வேறொன்றும் இல்லை" என்ற முகமது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நம் சிந்தனைக்குரியது. முகமது நபி (ஸல்) அவர்களின் காரணமாகப் பெண்ணின் சம்மதமின்றி மணம் செய்விக்கும் வழக்கம் ஒழிந்தது.  திருமணத்திற்கு பெண்ணின் சாட்சியும், அதற்கான சாட்சியும் முக்கிய நிபந்தனைகளாக்கப்பட்டன.

பெண்களின் பாதுகாப்பு கருதிப் பெண்கள் பர்தா முறையை பேணவேண்டும் என்ற கொள்கை இஸ்லாத்தில் கொண்டு வரப்பட்டது. இக்கொள்கை பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக பலரும் எண்ணுவது தவறு. இறைவன் படைப்பில் இயற்கையிலேயே பெண் அழகும் கவர்ச்சியும் மிக்கவள். அவள் தனது அழகையும், கவர்ச்சியையும் பிற ஆடவர்க்கு முன் காட்ட நேரும் போது அதனால் இருபாலருடைய எண்ணங்களும் தூயம கெட்டு'விடக் கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாகத்தான் பெண்களின் பர்தா முறை இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் முயற்சியால் மங்கையர்களை இழிவுபடுத்திய செயல்கள் அத்துணையும் ஒழிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு உலக வரலாற்றில் அதுவரை இல்லாத சலுகைகளும் வழங்கப்பட்டன.  தந்தை, சகோதரன் ஆஸ்தியிலும், கணவன் ஆஸ்தியிலும் பெண்ணுக்கென ஒரு பகுதி ஒதுக்கவும், அவ்வஸ்தியை நிர்வகிக்கும் முழு அதிகாரம் அவள் பெறவும் வழி வகுக்கப்பட்டது. அராபிய நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் கூட சமீப காலம் வரை சில சமூகக் கடமைகளிலும் சமயக் கடமைகளிலும் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையை நாம் மறுப்பதற்கில்லை. "பெண்கள் பாவத்தின் தலைவாசல்" என்றும், "ஆணை மயக்க வந்த பிசாசு" என்றும் பட்டங்கள் சூட்டிப் பெண்கள் சமயக் கடமையாற்றத் தடை செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலை இன்றில்லையென்றாலும் கூட சிற்சில இடங்களில் இம்மூடக் கொள்கை முழுதும் மறைந்துவிடவில்லை. 14 நூற்றாண்டு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண் கல்வியை ஆதரித்து நின்றார்கள். " சீனாவிற்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக" என்று போதித்த முகமது நபி (ஸல்) அவர்கள், "அக்கல்வியைத் தேடித் பெறுவது ஆண், பெண் இருபாலாருக்கும் கடமை ஆகும்" என்பதையும் தெளிவுப்படுத்தினார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் வேதம் ஓதலாம் வணக்க தர்மங்களைச் செய்யலாம்" என்று கூறிப் பெண்கள மார்க்கக் கடமைகளில் ஈடுபடுத்திப் பெண்களை பெருமைப்படுத்தினார்கள்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...