Pages

Friday, March 2, 2018

சவுதி ஏர்லைன்ஸ், ஏர் இந்திய விமானங்களில் இந்த வருட ஹஜ் டிக்கெட் கட்டணம் குறைப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 02
இந்தியாவில் ஹஜ் மானியம் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வருடாவருடம் ஒரு பெருந்தொகை தாரைவார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய ஆட்சியாளர்களின் மனங்களை உறுத்திவந்த இந்த பெயரளவு ஹஜ் மானியத்தையும் அதிரடியாக ரத்து செய்து புளங்காங்கிதம் பெற்றுக் கொண்டனர் ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரை அந்த மானியம் இருக்கும் போதும் புண்ணியமில்லை இல்லாதபோதும் வருத்தப்பட ஏதுமில்லை என இருந்துவிட்டனர். முஸ்லீம்கள் தங்களின் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற பிச்சைகாசுகளில் செல்ல விரும்பவே மாட்டார்கள் என்பது மட்டுமே உண்மை.

இந்நிலையில், ஹஜ் மானிய ரத்தை நியாயப்படுத்துவதற்காக தற்போது வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஹஜ்ஜிற்கான டிக்கெட் கட்டணத்தில் கணிசமான தள்ளுபடியை அறிவித்துள்ளதை தொடர்ந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸூம் அதேயளவு தள்ளுபடியை தாமும் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய யாத்ரீகர்களுக்கான ஹஜ் விமான சேவைகளை இவ்விரு நிறுவனங்கள் மட்டுமே ஏகபோகமாக நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2014-15 வருடம் நிர்ணயம் செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தின்படி டெல்லியிலிருந்து ஜித்தா சென்று திரும்ப ரூ.98,750 கட்டணம் என்பதை ரூ.71,853 என குறைத்துள்ளனர். அதேபோல் ஹைதராபாத்திலிருந்து சென்று வர ரூ.1,01,600 என இருந்ததை ரூ.65,766 என குறைத்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து சென்று வர ரூ.1,98,350 (என்ன ஒரு ஈவிரக்கமற்ற கட்டணக் கொள்ளை!) வசூலிக்கப்பட்டது இனி ரூ.1,01,400 என வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏர் இந்தியாவும் சவுதி ஏர்லைன்ஸூம் 14 இந்திய விமான முனையங்களை சமமாக பிரித்துக் கொண்டு ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்லவுள்ள நிலையில் சவுதியின் பிளை நாஸ் எனும் தனியார் பட்ஜெட் விமான நிறுவன விமானங்களும் முதன்முதலாக இந்திய மத்திய அரசின் ஹஜ் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் 6 விமான முனையங்களிலிருந்து சேவையாற்றவுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஹஜ் பயணிகள் இந்த வருடம் தங்களுக்கு அருகாமையிலுள்ள ஹஜ் விமான முனையத்தையும், கட்டணம் குறைவான ஹஜ் விமான முனையத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம் என சலுகையளிக்கப்பட்டுள்ளனர். இருங்க! இருங்க!! பிஜேபி ஆளும் மத்திய அரசு அவ்வளவு நல்லவங்களா என வாய்பிளக்க வேண்டாம். ஹஜ்ஜூக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையாம், மக்காவில் தங்குமிடக் கட்டணம் கூடி விட்டதால் அதில் ஈடுசெய்து கொள்வார்களாம்.

சவுதியில் மின்சாரக் கட்டணம் மும்மடங்காகவும், பெட்ரோல் கட்டணம் இருமடங்காகவும் ஆகிவிட்டதால் ஹஜ்ஜூக்கான மொத்த கட்டண ஏற்றம் தவிர்க்க முடியாததாம். அதெல்லாம் சரி ஏர் இந்தியாவில் தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் மட்டும் விட்டுப் பாருங்கள் இதைவிட விமானக் கட்டணம் குறைகிறதா? இல்லையா? என பார்ப்போம் என்பதே முஸ்லீம்களின் மனவோட்டம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...