Pages

Tuesday, April 10, 2018

சவுதி – கத்தார் இடையேயுள்ள தரைவழியை பிளந்து கடல் வழியை ஏற்படுத்தி கத்தாரை தீவாக துண்டிக்கத் திட்டம்!

அதிரை நியூஸ்: ஏப்.10
சவுதி – கத்தார் இடையேயுள்ள தரைவழியை பிளந்து கடல் வழியை ஏற்படுத்தி கத்தாரை தீவாக துண்டிக்கத் திட்டம்.

சவுதி அரேபியாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையில் இருக்கும் ஒரே தரைவழி இணைப்பு சல்வா பார்டர் (Salwa Border) எனப்படும் எல்லையாகும். கத்தார் நாடு மூன்று புறமும் கடலால் சூழப்பட்டும் சவுதியுடன் உள்ள இந்தத் தரைவழியுடன் இணைந்திருப்பதாலும் இன்று வரை அதுவோர் தீபகற்ப நாடாக திகழ்கிறது. இந்த சல்வா பார்டர் வழி மட்டுமே தரைவழியாக வளைகுடா அரபு நாடுகளையும் பிற உலக நாடுகளையும் இணைக்கிறது.

கடந்த வருடம் ரமலான் மாதத்தில் திடீரென கத்தார் மீது சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டதுடன் இருபுறமும் கடும் வார்த்தகத் தடைகளையும் விதித்துக் கொண்டன. உச்சகட்டமாக கத்தாரை உலகுடன் தரைவழியாக இணைக்கும் சல்வா பார்டர் எனப்படும் எல்லையையும் சவுதி நிரந்தரமாக இழுத்து மூடியது. வான்வெளி போக்குவரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மீண்டும் பழையபடி ராஜிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் 13 வகையான நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என 'அழுத்தம்' கொடுத்தும் வருகின்றன. கத்தார் எதற்கும் மசியாமல் மாற்றுவழிகளை கண்டுபிடித்து பின்பற்றி வருகிறது. இந்த இருதரப்பிற்கும் இடையில் உள்ள உண்மையான பிரச்சனைகள் என்ன? யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று நம்மைப் போன்ற சாமானியர் வெளியுலகிற்கு தெரியும் நிகழ்வுகளை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. என்றாலும் இந்தளவுக்கு கடுமை வேண்டாமே என்றே மனிதாபிமானமிக்க உள்ளங்கள் ஏங்குகின்றன.

மேற்படி முன்னுரையின் மூலம் இச்செய்தியின் பின்னனியில் உள்ள சாராம்சத்தை ஓரளவு யூகித்திருப்பீர்கள். 3 பக்கம் கடல் சூழ்ந்துள்ள நிலையில் சவுதிக்கும் கத்தாருக்கும் இடையில் தரைவழி எல்லையுடன் உள்ள சுமார் 60 கி.மீ தூரத்திற்குள்ள நிலப்பகுதியை துண்டித்து கடல்வழி கால்வாயை (Sea Water Canal) ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது சவுதி. இந்தத் திட்டம் நிறைவேறினால் கத்தார் நாடு ஒரு தீவாக தனிமைப்படுத்தப்படுவதுடன் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் மட்டுமே சென்றடையும் நிலை உருவாகும்.

சவுதி அரேபியா கத்தாரை ஒட்டி தனது எல்லைப்பகுதிக்குள் உள்ள நிலப்பரப்பான சல்வா (Salwa) – கோர் அல் அதீத் (Khor Al Adeed) வரை சுமார் 60 கி.மீ தூரத்திற்கு 200 மீட்டர் அகலத்தில் சுமார் 15 மீட்டர் முதல் 20 மீட்டர் ஆழத்துடன் 2.8 பில்லியன் சவுதி ரியால்கள் செலவில் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான The  Ministry of Defence and the Border Police ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளது. இந்தக் கடற்கால்வாயில் சுமார் 295 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமுடைய கப்பல்கள் கடந்து செல்லலாம்.

இந்த கடற்கால்வாயின் சவுதியின் பக்கத்திலுள்ள கரைகளில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பல கடற்கரைகள், (Private Beaches) சொகுசு விடுதிகள் (Luxury Hotels), உல்லாச போக்கிடங்கள் (Resorts), ஒரு கப்பல் துறைமுகம் (Sea ports), சொகுசுப் படகுகளுக்கான தளங்கள், நீர் விளையாட்டு அமைப்புக்கள் போன்றவற்றை நிறுவிடவும் முடிவு செய்துள்ளன.

இந்தக் கால்வாய் முழுமையாக சவுதி எல்லைக்குள்ளேயே அமையும் என்பதுடன் கத்தார் நாட்டு எல்லையோரத்திலிருந்து 1 கி.மீ தூரம் வரை சவுதிக்கு சொந்தமான அதிகாரபூர்வ காலி நிலமாகவே விடப்பட்டும் வெட்டப்படுமாம். இதன் மூலம் கத்தார் கடல் கால்வாயையோ அல்லது அதன் கரைகளையோ பயன்படுத்திக் கொள்ள முடியாது. இவை அனைத்தும் சவுதியின் எல்லையோர ஊர்களான சல்வா, சகாக், கோர் அல் அதீத், ராஸ் அபு கமீஸ், அக்லத் அல் ஜவாயித் ஆகிய இடங்களில் வரவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கான முதலீடுகளை சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தனியார் நிறுவனங்கள் செய்யவுள்ள நிலையில் எகிப்து நாட்டு நிறுவனங்கள் 'குழி வெட்டும் திட்டத்தை' செயல்படுத்தவுள்ளது. மேலும் ஒரு சவுதி ராணுவத் தளமும் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திலேயே மிகவும் மோசமான திட்டமாக சவுதி அரேபியாவில் அமையவுள்ள அணு ஆலைக்கழிவுகளை புதைக்கும் பகுதி ஒன்றும் இந்த பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இருதரப்பிற்கும் இடையில் குவைத் நாடு மட்டுமே பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இருதரப்பின் பக்கமும் நல்லுறவையும் பேணி வருகிறது என்றாலும் இதுவரை சிறுபலனும் ஏற்படவில்லை.

இறுதியாக, ஆட்சியும் காட்சியும் மாறும் போது மீண்டும் பல பில்லியன் டாலர்களை கொட்டி கடல் மேல் பாலம் கட்டிக் கொள்வார்கள்.

Source: Gulf News
வெறுப்புடன்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...