Pages

Monday, April 23, 2018

மறைந்து வரும் மனிதநேயம் !

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் 
நாம் வாழுகின்ற இவ்விருபத்தோராம் நூற்றாண்டு, நாகரீகத்தின் உச்சத்திலிருப்பதாக நாம் பெருமை பட்டுக்கொண்டிருக்கிறோம். அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும், கலைகளிலும், பொருளியியலிலும், பொறியியலிலும், வாணிபத்திலும், வானியலிலும், மருத்துவத்திலும், மனோதத்துவத்திலும் உயர்ந்து நிற்பதாகப் பெருமிதம் பொங்கக் கூறிக்கொண்டிருக்கிறோம். அவை மட்டுமே மனித நாகரீகத்தை வெளிக்காட்டும் அடையாளங்களாகி விடுமா?

இன்றைய உலகின் மிகப்பெரும் தேவையாக இருப்பது உணவோ, உடையோ, உறைவிடமோ அல்ல. இவையெல்லாம் மனிதனின் அடிப்படை தேவையென்றாலும், இவற்றிற்கெல்லாம் மேலாகத் தேவையென வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றுண்டு. அதுதான் மனிதநேயம். இன்று இந்த மனிதநேயத்துக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மனிதகுலம் பல்வேறு சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மனிதநேயம் மறைந்து வருவதற்கு பல காரணங்களைக் கூறலாம். அவற்றில் ஒன்று கொடுமைமிகு கோப உணர்ச்சி. கோப மிகுதியால் அற்பக் காரணங்கள் கூட மனிதநேயத்தை மாசுபடுத்தி விடுகின்றன. அதனால்தான் அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்கள், "நெருப்பு, விறகை எரிப்பதுபோல் கோபமானது ஈமானை எரித்துவிடும்" என்றார்கள். 'சினத்தைச் சேர்ந்தாரைக் கொல்லி' என வர்ணிக்கும் வள்ளுவப் பெருந்தகை தேவையற்ற சினத்தினால் தீய விளைவுகளே வந்து சேரும் என்பதை,

"மறத்தல் வெகுனியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்"

என்ற குறள் வாயிலாகக் கூறுகிறார்.

சினத்தை அடக்க முடியாத போது, மனிதர்களிடையே சகிப்புத் தன்மை அற்றுப்போய்விடுகிறது. சகிப்புத் தன்மை இல்லையென்றால் மனிதநேயம் மாய்க்கப்பட்டு விடுகிறது. இருவேறு சாதிகளுக்கிடையே சகிப்புத் தன்மை இல்லாது போனதால்தானே சில ஆண்டுகளுக்கு முன் கீழ வெண்மணியில் சில உயிர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டன. இருவேறு மதங்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால்தானே 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. அண்மைக் காலமாக சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் சகிப்புத் தன்மை இல்லாது போனதால்தானே தினம் தினம் மனித உயிர்கள் கொத்து கொத்தாக அழிகின்றன.

மனிதநேயம் அழிந்து வருவதற்கு அடுத்து காரணமாக அமைவது ஆசை. "ஆசையே அழிவுகளுக்குக் காரணம்" என்பது புத்தபிரானின் போதனை. "பாவம் செய்யத் தூண்டுவது பேராசையே; பேராசையும், இறைநேசமும் ஒரே உள்ளத்தில் ஒன்றுகூடி இருக்க முடியாது" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்னுரை.

ஆசைகள் பல என்றாலும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன பொல்லாதவைகள். அன்றைய அரசர்களின் மண்ணாசையால் எத்தனை, எத்தனை சாம்ராஜ்யங்கள் சரிந்துள்ளன என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மக்களாட்சியிலும், இவ்வாசை தொடரத்தானே செய்கிறது. தந்தையின் சொத்து அவர் மறைவுக்குப்பின் பங்கிடப்படும்போது அதில் அதிகம் அடையவேண்டும் என்ற ஆசையின் காரணமாக உடன் பிறப்புகளுக்குள் அடிதடி நிகழ்வதும், அதனால் உறவுகள் முறிவதும் சகஜமாக இருக்கிறது.

அடுத்தது பெண்ணாசை. அன்றாடம் தினச் செய்தித்தாள்களில் ஒரு வகைச் செய்தியை அதிகம் காணமுடிகிறது. மாற்றான் மனைவி மீது ஆசை கொண்ட ஒருவன் அவளோடு உறவாடுகிறான். அதையறிந்த அவளுடைய கணவன் அடங்கா ஆத்திரமுற்று அவ்விருவரையும் கொன்றுவிடுகிறான். செய்தித்தாள்களில் வேறொரு வகைச் செய்தியும் வருவதுண்டு. ஒரு பெண்ணை ஒருவன் ஒருதலையாகக் காதலிக்கிறான். ஆனால், அவளுக்கோ அவன்மீது காதலில்லை. தனக்குக் கிடைக்காத அவள் வேறொருவனுக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற வெறிகொண்டு அவனைக் கொல்வதோடு, தன்னையும் மாய்த்துக் கொள்கிறான்.

பெண்ணாசை கொண்ட சில மனித மிருகங்களுக்கு வயது கூட ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை. கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை உலகையே உறைய வைத்துள்ளது. ஜம்மு ~ காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் ராசான கிராமத்தில் 8 வயது சிறுமி ஆஷிஃபா ஜனவரி 10-ம் தேதி காணாமல் போன நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு அவரின் வீட்டருகே சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டாள். அச்சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. அச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் குற்ற ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 2 காவல்துறை அதிகாரிகளும், ஒரு காவலரும் அடங்குவர்.

அடுத்து வருவது பொன்னாசை ~ அதாவது பண ஆசை. பண ஆசையால் உந்தப்பட்டுப் பாதகம் செய்கின்ற கூட்டங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. உயிர் காக்கும் இடமான மருத்துவமனைகள் கூட பணம் பறிக்கும் விஷயத்தில் விதிவிலக்காக இல்லை. காப்பாற்ற முடியாது எனக் கைவிடப்பட்ட நோயாளியைக்கூடப் பணம் பறிக்கும் ஆசையில் பல நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். செத்தப்பிணத்தை வைத்துக்கூட மருத்துவம் பார்ப்பார்கள் என்ற சம்பவத்தை ஒரு சமயம் ஒரு ஊடகம் வெளிச்சம்போட்டுக் காட்டியது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழைகளின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் உடல் உறுப்புகளைக் களவாடி விற்கும் கொடுமைகள் நம்மைக் கலங்க வைக்கின்றன. மற்ற உறுப்புகளை வீட அதிக அளவில் விற்பனைக்கு வருவது மனித 'கிட்னி'தான். வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, உடல் பரிசோதனை எனக்கூறி அறுவை சிகிச்சை மூலம் களவாடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கிட்னி திருட்டைத் தடுப்பதற்கு ஒரு சட்டமே உள்ளது. ஆனால், இச்சட்டம் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிரே செயலிழந்து நிற்கும் பரிதாபத்தைதான் பார்க்க முடிகிறது.

மண்ணில் மனிதநேயம் மலர வேண்டும். அதற்காக மக்கள், சமூகம், அரசு
அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் எனபதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மறைந்து வரும் மனிதநேயத்தை காக்க வேண்டும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...