Pages

Wednesday, May 2, 2018

"ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டும் இருக்க முடியாது" ~ ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3 ஆம் இடம் பெற்ற சிவகுருபிரபாகரன் பேச்சு!

பேராவூரணி மே.02
"ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டுமே இருக்க முடியாது" என பேராவூரணி ஜே.சி.குமரப்பா பள்ளியில் நடைபெற்ற  மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த மேல ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த சிவகுருபிரபாகரன் பேசினார்.

பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் புதன்கிழமை அன்று, மாணவ, மாணவிகளுடன் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற சிவகுருபிரபாகரன் சந்தித்து உரையாடினார். அப்பொழுது மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், " ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டும் இருக்க முடியாது. அப்துல் கலாம் அய்யாவிடம் இருந்து கனவு காண்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரிடம் இருந்து ஒரு விசயங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே ஒருவரை மட்டும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளலாம் என்பதை ஏற்க முடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் குருவையே முதன்மையாக கொள்ளலாம். கடவுளை விட குருவே நம் மீது அக்கறையோடு இருப்பார். என் சிறுவயதில் என்னை செதுக்கியதில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்த வேலு அய்யாவின் பணி முக்கியமானது. 'நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நாமே செய்யவேண்டும். வேறு ஒருவரிடம் நாம் அதனை ஒப்படைக்கக்கூடாது' என சிறுவயதில் அறிவுறுத்தியது, இன்றும் 'பசு மரத்தாணி' போல நினைவில் உள்ளது.

பள்ளியில் புத்தகங்களை படிப்பதோடு, தினசரி செய்தித்தாள்களையும் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடியுரிமைப் பணி, போட்டி தேர்வுகளுக்கு அது முக்கியமானதாகும். ஆசிரியர் பணி என்பது விருப்பமான ஒன்று. இந்திய ஆட்சிப்பணி  எனது கனவுப் பணியாக இருந்தது. 4 ஆவது முயற்சியில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன். மாணவர்கள் முயன்றால் இதனை சாதிக்கலாம்.

போட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிகள் வகித்தேன். நான் படித்த தொடக்கப்பள்ளியில் என்னை பேசுவதற்காக அழைத்தபோது, ஐஏஎஸ் ஆகாமல் பள்ளிக்குள் நுழைய மாட்டேன் என சொல்லி விட்டேன். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், நான் ஓடியாடி, புரண்ட அந்த பள்ளியில், எனது உறுதி வெற்றி பெற்ற  சந்தோசத்தோடு காலடி எடுத்து வைப்பேன்.

மாணவர்கள் தாங்கள் விரும்பியதை படிக்கட்டும். பெற்றோர்கள் விருப்பத்திற்காகவோ, மற்றவர்கள் விருப்பத்திற்காகவோ படிப்பை தேர்வு செய்யக்கூடாது. ஆசிரியர்கள், மாணவன் சுயமாகவே முடிவெடுக்கும் வகையில் அவனை தயார்படுத்த வேண்டும். தன்னம்பிக்கையோடு வளரும் மாணவன் எதையும் சாதிக்க முடியும்" என்றார். பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பிலும் சிவகுருபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக பள்ளிக்கு வந்த ஐஏஎஸ் சிவகுருபிரபாகரனை பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர், பொறியாளர் அஷ்வின் ஶ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர். அப்பொழுது ஏசிஇ அறக்கட்டளை தலைவர் ஆவணம் அடைக்கலம், குமரப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் கணபதி, லயன்ஸ் சங்க செயலாளர் ராமநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம், ஒட்டங்காடு தலைமையாசிரியர் கவிமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
 

1 comment:

  1. சிவகுரு ஐ.ஏ.எஸ் அவர்கள் பற்றி தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டூரைகளை படித்து பயன்பெறவும்.

    http://tamil.thehindu.com/tamilnadu/article23726725.ece?homepage=true

    http://tamil.thehindu.com/tamilnadu/article23738984.ece

    http://tamil.thehindu.com/tamilnadu/article23747139.ece

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...