Pages

Saturday, May 26, 2018

புனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 'பிலால்'

அதிரை நியூஸ்: மே 26
முஸ்லீம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான தினமும் 5 வேளை தொழுகைக்காக மக்களை பாங்கு சொல்லி ஞாபகமூட்டி அழைப்பது முஅத்தின்களின் கடமை. இஸ்லாத்தின் முதல் முஅத்தினாக திகழ்ந்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்குரிய பிலால் (ரலி) ஆவர்கள் இதனாலேயே இன்றும் முஅத்தின்கள் பிலால் என்ற சிறப்பு பெயரிடப்பட்டு கண்ணியப்படுத்தப்படுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் காலத்தின் இன்னொரு முஅத்தினாக பணியாற்றிவர்கள் கண் தெரியாத நபித்தோழரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆவர்கள்.

(முஅத்தின் என்ற பெயரே தமிழுலகில் முஅத்தினார் என மருவி பின்பு மோதினார் என பேச்சுத் தமிழில் அழைக்கப்படுகிறது, அரபி மற்றும் துருக்கிய மொழிகளில் முஅஸ்ஸின் எனவும் அழைக்கப்படுகிறது)

புனித மக்காவில் தற்போது பணியாற்றும் அலி அப்துல் ரஹ்மான் அஹ்மது அல் முல்லா அவர்கள் (சுருக்கமாக அலி அஹ்மது அல் முல்லா) கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 40 வருடங்களாக புனித ஹரம் ஷரீஃபின் முஅத்தினாக பணியாற்றி வருகிறார்கள். எனினும் 1984 ஆம் ஆண்டு தான் அதிகாரபூர்வமாக முதன்மை முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

இந்த முஅத்தின் பணி என்பது அலி அஹ்மது அவர்களுக்கு குடும்ப வழிவழியாக கிடைக்கப் பெற்றது. இவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் மட்டுமே புனிதப்பள்ளியின் முஅத்தினாக பணியாற்ற வேண்டும் என்பது துருக்கியின் ஓட்டமான் அரசபரம்பரையினர் கடைபிடித்த ஓர் மரபு. இவர் தனது முதலாவது பாங்கை தனது 14 வயதில் தனது மாமா அப்துல் ஹபீஸ் கோஜா என்பவர் பாங்கு சொல்ல (அன்றைக்கு பணிக்கு) வர முடியாத நிலையில் முதன்முதலாக ஒருமுறை பாங்கு சொன்னார்கள்.

1945 ஆம் ஆண்டு பிறந்த அலி அஹ்மது அல் முல்லா அவர்களுக்கு இந்த துணை முஅத்தின் பணி அப்போது துணை முஅத்தினாக பணியாற்றி வந்த அவரது மாமா மகன் ஷேக் அப்தல்மலக் அல் முல்லா அவர்கள் இறப்பை தழுவியதை அடுத்தே கிடைத்தது. துணை முஅத்தினாக நியமிக்கப்பட்ட அதேகாலகட்டத்தில் இவரது தாத்தா ஷேக் அலி, தந்தை சித்தீக் மற்றும் இவரது 2 மாமாக்கள் மற்றும் 2 ஒன்றுவிட்ட சகோதரர்களும் முஅத்தின் பணியை செய்து வந்தனர். தான் புனித ஹரம் ஷரீஃபின் முஅத்தினாக நியமிக்கப்பட்டுள்ளதாக தந்தை சொன்ன செய்தியே வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாகும் என நெகிழ்கிறார்.

மிகவும் அழகிய குரலுக்கு சொந்தக்காரரான அலி அஹ்மது அவர்கள் 1970 ஆம் ஆண்டு ரியாத்தில் தொழிற்நுட்ப பட்டதாரியாக படித்து பட்டமும் பெற்றுள்ளார்கள். புனித மதினாவின் மஸ்ஜிதுன்னபவியிலும் ஒருமுறை பாங்கு சொல்லியுள்ளார்.

இவர்கள் பாங்கு சொல்லத் துவங்கும் காலத்தில் இன்றைக்கு உள்ள ஒலிபெருக்கி சாதனங்கள் ஏதுமில்லை. எனவே, பாங்கு சொல்லக்கூடிய முஅத்தின்கள் 7 பேரும் 7 மினாரக்களின் மேல் ஏறி நின்று கொள்வார்கள். முதன்மை முஅத்தின் ஜம்ஜம் கிணறு அருகே இருந்த அல் ஷாபீ மகம் என்கிற இடத்திலிருந்து பாங்கு சொல்வதை தொடர்ந்து சுற்றியுள்ள பாப் அல் உம்ரா, பாப் அல் ஜியாரா, பாப் அல் ஹெக்மா போன்ற 7 மினாராக்களில் இருந்தும் பிற துணை முஅத்தீன்கள் திசைக்கொருபுறம் பாங்கை சத்தமாக திருப்பிச் சொல்லுவார்கள். ஒலிபெருக்கிகள் வந்தபின் இந்த பழக்கம் நிறைவுபெற்றது.

இஸ்லாமிய உலகம் சந்தித்த மிகவும் மோசமான தருணங்களின் ஒன்றான, 1979 ஆம் ஆண்டு புனித கஃபத்துல்லாஹ்வை மஹ்தி (அலை) என அழைத்துக் கொண்ட ஒருவரும் அவரது ஆதரவாளர்களும் ஆயுதமுனையில் கைப்பற்றி 23 நாட்கள் தொழுகையோ, தவாபோ, இன்னபிற இபாதத்துக்களோ ஏதும் நடைபெறாமல் செய்தனர். கடைசியாக கஃபா இரத்தம் சிந்தியே மீட்கப்பட்டது. கஃபா மீட்கப்பட்டவுடன் அன்றைய சவுதி அரேபியாவின் மன்னர் காலித் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் முன் மஃரிப் தொழுகைக்காக முதல் பாங்கை மீண்டும் சொல்லி தடைபட்டிருந்த இபாதத்துக்களை துவக்கி வைத்தார்கள்.

'பிலால்' என வாஞ்சையுடன் அழைக்கப்படும் அலி அஹ்மது அல் முல்லா அவர்களின் பாங்கோசை அனைத்து நவீன வடிவ தொழிற்நுட்பங்கள் வாயிலாகவும் உலகெங்கும் பரவி இருப்பதுடன் பல ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகின்றன. முக்கியமாக, முஅத்தின் பணியை மார்க்க கடமையாக, ஹரம் ஷரீஃபில் பாங்கு சொல்வதை கிடைத்தற்கரிய பேருவாக விரும்பி நிறைவேற்றி வருகிறாரே ஒழிய வருமானத்திற்கு சுயதொழில் செய்து சம்பாதித்து வருகிறார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...