Pages

Tuesday, May 1, 2018

உழைப்பின்றி உயர்வில்லை!

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன்
அதிரை நியூஸ்: மே 01
'கேடில் விழுச்செல்வம் கல்வி', கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்றெல்லாம் போற்றப்படும் கல்வியானது மனிதனை மகத்தான இடத்துக்கு இட்டுச் செல்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் எப்போதும் எல்லோருக்கும் அந்த உண்மை ஒன்றுகிறதா என்ற கேள்வி எழுவதை நாம் மறுப்பதற்கில்லை. கல்வி கற்ற பலர் போதிய முயற்சியும் உழைப்பும் இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் உயர்நிலையை எட்ட இயலாதுத் தோற்றுவிடுகிறார்கள். உழைக்கும் உழைப்பாளிகளுக்கு அத்தகைய நிலை அதிகம் இருப்பதில்லை. அதனால், தான் மனித வாழ்வில் உழைப்பு முக்கிய இடம் பெறுகிறது.

பூமிப்பந்து சுழன்றுகொண்டே இருப்பதைப் போல, நதிகளெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பதைப்போல, காற்றெங்கும் வீசிக்கொண்டே இருப்பதைப்போல மனிதன் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு உழைப்பும் முயற்சியும் அவசியமாகிறது. இதைத்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், "மூச்சு நின்றுவிடுவதல்ல மரணம்; முயற்சி நின்றுவிடுவதே மரணம்" என்றார்.

'வெற்றி வேண்டுமா? போட்டுப்பாரடா எதிர் நீச்சல்' என்பது நாம் கேட்டு மகிழ்ந்த ஒரு திரை இசை. அந்த எதிர் நீச்சல் எபது என்ன? முயற்சியும் உழைப்புமேயாகும். ' உழைப்பின்றி உயரவில்லை' என்பது ஆன்றோர் பலரின் அறிவுரை. " உண்ணும் உணவில் உயர்ந்தது உழைத்து உண்பதே" என நவின்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ~ வீணில்
உணடுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்"

எனப்பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

"அடிமை போன்றே உழைப்போரே அரசனைப் போன்றே சுகித்திடலாம்
மிடிமை யகற்றும் இவ்வழியில் மிடுக்காய் உணர்வாய் பொன்மொழியே"

என்பது இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களின் கவிதை வரிகள்.

உழைப்பு, உயர்வின் உச்சத்தைத் தொடுவதற்கு உதவுகிறது என்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பது மருத்துவம் நமக்கு உணர்த்தும் உண்மை. "இதய ஆரோக்கியத்தை மூன்று விஷயங்கள் தீர்மானிக்கின்றன. அவற்றில் ஒன்று உடல் உழைப்பு" என்கிறது ஒரு மருத்துவக் குறிப்பு. (மற்ற இரண்டு ஆர்யோக்கியமான உணவு, மன அழுத்தத்தை குறைத்தல்)

உழைப்புக்கு உன்னத இடமளிக்கிறது இஸ்லாம். "சோம்பேறியாய் இராதே; உழைத்து வாழ்" என்று உழைப்பின் உயர்வை உணர்த்துகிறது இஸ்லாம். உழைக்க மறுத்து யாசிக்கும் போக்கை உத்தம நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். "ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டுத் தன் முதுகில் விறகுக்கட்டைகளை சுமந்து விற்று வாழ்வது, மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்வதைவிடச் சிறந்ததாகும். இதன்மூலம், அவனுக்கு இழிவு ஏற்படாமல் அல்லாஹ் தடுத்துவிடுவான்" என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். உழைப்போரின் கூலியை உடனே வழங்கிவிட வேண்டும் என்பதை வலியுறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "வேலை செய்தவரின் கூலியை அவருடைய வியர்வை உலர்வதற்கு முன்னரே கொடுத்துவிட வேண்டும் என்றார்கள். இதைத்தன இறையருட் கவிமணி அவர்கள்

"வியர்வையது உலகுமுன்னர் வேலைசெய்வோர் கூலியினை
நயமாகக் கொடுப்பதற்கு நவின்ற நபி நாயகமே"

எனக் கவிதையில் கவினுறக் கூறுகிறார்.

உழைப்பாளர் தினத்தன்று நிச்சயம் ஜப்பானியர்கள், அனைவரது நினைவுக்கும் வருவர். ஜப்பானியரின் வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் அவர்களை 'ஃபீனிக்ஸ்' (Phoenix) பறவைக்கு ஒப்பிடுவர். கிரேக்க, எகிப்திய இதிகாசங்களில் ஃபீனிக்ஸ் என்ற ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது. இப்பறவையின் ஆயுட்காலம் 500 ஆண்டுகள். தன் இறுதிக் காலம் எப்போது வருகிறது என்பது இப்பறவைக்குத் தெரியும். அப்போது நறுமணம் கமழும் தாவரத் தண்டுகள், வாசனைப் பொருட்கள் கொண்டுக் கூடு கட்டும்; அந்தக் கூட்டைத் தீயிடும்; எரியும் தீயில் குதிக்கும்; சாம்பலாகிவிடும். அப்போது ஓர் அதிசயம் நிகழும். கனன்றுக்கொண்டிருக்கும் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் எழுந்து வரும். இதனை ஃபீனிக்ஸ் எழுச்சி (Rise of  Phoenix ) என்பர். ஜப்பானின் நிலையும் இதுதான். இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஜப்பானிய பொருளாதாரம் தரைமட்டமானது. ஆனால் 15 ஆண்டுகளில் ஜப்பான் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகிவிட்டது. காரணம் ஜப்பானியரின் உழைப்பு.

இறைவன் படைத்த படைப்புகளில் மிகச்சிறியது எறும்பு. எறும்புக்கு இரண்டு வயிறுகளாம். ஒன்று உணவைச் செரிப்பதற்கு; மற்றொன்று உணவைச் சேமித்து வைத்துக்கொள்வதற்கு. உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எறும்பு. மழைக் காலத்துக்கு முன்னேரே அது சுறுசுறுப்புடன் இயங்கித் தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெற்றுச் சேமித்து வைத்துக்கொள்கிறது.

எறும்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு அனைவரும் உழைப்போம்; உயர்வோம் என உழைப்பாளிகள் தினத்தன்று உறுதிகொள்வோமே.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...