Pages

Monday, May 14, 2018

காசநோய் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனம் ~ தொடங்கி வைப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (14.05.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முன்னதாக வேலை வாய்ப்புத்துறை சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து இலவச திறன் மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடு ஒளிப்பரப்பப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனம் 14.05.2018 முதல் 19.05.2018 வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறவிருக்கிறது. இவ்வாகனத்தில் பரிசோதனை செய்யும் கருவிகள் உள்ளதால் இதனை பொது மக்கள் பயன்படுத்திகொள்ளலாம்.

மக்கள் குறை தீர் கூட்டத்தில் கடந்த 14.07.2017 அன்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், சரக்கு மினி லாரியும் மோதி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 வீதம் தஞ்சாவூர் வட்டம், ஸ்டேட் பங்க் காலனியை சேர்ந்த செல்வி பிரியதர்ஷினி, ஒரத்தநாடு வட்டம், கண்ணுக்குடி கிழக்கு கிராமம், கீழத்தெருவை சேர்ந்த செல்வி.சுஸ்மிதா, பட்டுக்கோட்டை வட்டம், மூத்தாக்குறிச்சி அஞ்சல், செல்வி அருள்மொழி ஆகியோருக்கு ரூ.1,50,000க்கான காசோலையினையும், பட்டுக்கோட்டை வட்டம், அணைக்காடு கிராமம், நடுத்தெருவை சேர்ந்த நாடிமுத்து என்பவர் கடந்த 27.01.2017 அன்று ஆழ்குழாய் கிணற்றில் குழாயை சரி செய்யும் பணியின் போது  மண் சரிந்து விழுந்து புதையுண்டு இறந்ததால், அவரது வாரிசுக்கு தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

பின்னர், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர குடும்ப நல முறை செயல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் அவர்களால் சென்னையில் வழங்கப்பட்ட 6 விருதுகளை  மருத்துவக்கல்லூரி முதல்வர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ஜெயக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) (பொ) டாக்டர் டி.மாதவி,  சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணி,  மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் சண்முகசுந்தர்,  சமூக  பாதுகாப்புத் திட்ட  தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வீரிய காசநோய் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன்  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...