Pages

Saturday, June 23, 2018

கற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்கள்)

தஞ்சாவூர் ஜூன்.23-
பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் முன்மாதிரியாக (ரோல் மாடல்) உள்ளனர். அண்மையில் திருவள்ளூர்  மாவட்டம் வெளியகரம்  அரசு உயர்நிலைப்  பள்ளியில் கற்பிப்பதிலும், மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தியதாலும் ஏற்பட்ட உறவால் பணியிட மாற்றத்தில் சென்ற பட்டதாரி ஆசிரியர் பகவானை விட மறுத்து மாணவ, மாணவிகள் போராடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ஒருவர், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருவது மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்குள்ள பள்ளியில்  நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மசினகுடி கிராமத்தை சேர்ந்த செ.இராமநாதன் கடந்த 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணியாற்றி வரும் இவர் மாணவர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

பாடங்களை வெறுமனே வாசித்தல், கரும்பலகையில் படம் வரைந்து எழுதிக் காட்டுதல் என இல்லாமல், கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளிப்பதால், மாணவர்களை எதையும் எளிதில் கிரகித்துக் கொள்கின்றனர். இதனால் வெறும் மனப்பாடம் என இல்லாமல், அறிவுப்பூர்வமான முறையில் எளிதாக கற்கின்றனர். பாடப்புத்தகங்களில் வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, பெற்றோர் அனுமதியோடு  நேரில் அழைத்து சென்று காட்டி பாடம் நடத்தி வந்தார்.
தற்போது அரசு உத்தரவு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லாமல், பள்ளியை சுற்றி உள்ள இடங்களில் உள்ள மரம், செடி, மூலிகைகளை நேரில் காட்டி விளக்கி பாடம் நடத்தி வருகிறார். அறிவியல் பாடங்கள் குறித்து பாடம் நடத்தும் போது, உடல் உறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்க ஆட்டின் மூளை, இதயம், கிட்னி போன்ற பொருட்களை வாங்கி வந்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

மேலும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் 3 டி, 4 டி அனிமேஷன் காட்சியாக  கானக விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றையும், விண்வெளிகள், கோள்கள், விமானம், ராக்கெட், பழங்கால டைனோசர்கள் குறித்தும் எளிதாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் பாடங்களை விளையாட்டாகவே கற்கின்றனர். மேலும் நெகிழிப் பை ஒழிப்பு, கருவேல மரம் அகற்றல் போன்ற விழிப்புணர்வு விசயங்களையும் பேரணி, போட்டிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் தினம், உலக குடிநீர் தினம், கை கழுவுதல் தினம் அனைத்து தினங்களையும் பள்ளியில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.   

இதுகுறித்து ஆசிரியர் செ.ராமநாதனிடம் கேட்டபோது,
"மாணவர்களுக்கு வெறுமனே பாடத்தை நடத்துவதால், எவ்விதமான பலனும் இல்லை. நம்மை சுற்றி சாதாரணமாக கிடைக்கும் கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து நேரடி செயல் விளக்கம் மூலம் கற்பிப்பதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துவதால், அவர்கள் ஆசிரியர் என்ற பயம் இன்றி நல்ல ஒரு நட்புறவோடு பாடங்களில் எழும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.  அக்கறையோடு கற்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்" என்றார்.

இதுகுறித்து அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அருந்ததி கூறுகையில், 
"எங்கள் பள்ளியில் ஆசிரியர்- மாணவர் பயம் கிடையாது. பள்ளி ஆசிரியர் ராமநாதன் பாடம் நடத்துவதே அலாதியானது. அவர் பாடம் என்றால் எங்களுக்கு அல்வா தின்பது போல சுவையான விசயம். நாங்கள் படித்து என்னவாக ஆசைப்படுகிறோம் எனக்கேட்டு, டாக்டராக விரும்பும் மாணவனை டாக்டர் உடையிலும், வழக்கறிஞராக விரும்பும் மாணவனை வழக்கறிஞர் உடையிலும் புகைப்படமாக எடுத்து பள்ளி வகுப்பறையில் மாட்டி வைப்பார். என்ன படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம் என்பது பற்றி எல்லாம் சொல்லித் தருவார்" என்ற மாணவியிடம் , " நீ என்னவாக ஆசை ? " என்றபோது பளிச்சென "கலெக்டர்" என்றார்.

நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் பெறப்பட்ட விளையாட்டு பொருட்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரங்களில் விளையாட்டு பயிற்சியும் அளித்து வருகிறார். கட்டிட பொறியாளர் சங்கம் மூலமாக வழிபாட்டு கூட்டத்திற்கு பயன்படுத்த ஒலிபெருக்கி சாதனங்களும், லயன்ஸ் அமைப்பு மூலம் பெறப்பட்ட பிரிண்டர் இயந்திரம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நகல் எடுக்கவும் பயன்படுத்துகிறார்.

ஏதோ வந்தோம்.... சம்பளம் வாங்கினோம்...... சென்றோம் என இல்லாமல், அர்ப்பணிப்போடு செயல்படும் இதுபோன்ற ஆசிரியர்களால் தான் அரசுப்பள்ளிகள் இன்றும்  உயிர்ப்போடு செயல்படுகிறது என்றால் மிகையில்லை .....!!!!
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. இது தான் தமிழ்நாடு அரசின் புதிய பாடதிட்ட வழிமுறை. நமதூரில் உள்ள பள்ளிகளுக்கு இது ஒரு வழிகாட்டியாக‌ அமைய வேண்டும். நடைமுறை படுத்துவார்களா! என பார்ப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...