Pages

Sunday, July 8, 2018

இந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண்மனைகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 08
இந்தியாவை ஆண்ட அரசர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் கட்டிய அரண்மனைகள், பெரும் பங்களாக்கள், கோடை வாசஸ்ஸதலங்கள் பல வரலாற்று பெருமைமிகு சின்னங்கள் நவீன வணிகமய இந்தியாவில் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் ஹோட்டல்களாக மாறியுள்ளன. அவற்றிலிருந்து சிலவற்றை பற்றிய சிறுகுறிப்புகளை காண்போம்.

1. தாஜ் உமைத் பவன் பேலஸ் - ஜோத்பூர் - ராஜஸ்தான்
இந்தியாவிலுள்ள அரண்மனைகளிலேயே மிக இளமையான அரண்மனை இதுவே. 1929 நவம்பரில் துவங்கிய இதன் கட்டுமானப் பணிகள் 1943 ஆம் ஆண்டு தான் நிறைவு பெற்றன. அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் மடிந்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்காகவே இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர் ரத்தோர் அரசவம்சத்தை சேர்ந்த மஹாராஜா உமைத் சிங் என்பவராவார்.

26 ஏக்கர் பரப்பளவில் 347 அறைகளுடன் உள்ள இந்த ஹோட்டலுக்கு சித்தார் அரண்மனை என்ற இன்னொரு பெயரும் உள்ளது. தற்போது அவரது பேரன் கஜ் சிங் என்பவர் இதன் உரிமையாளராக இருக்கும் நிலையில் தாஜ் ஹோட்டல் குழுமம் நிர்வகிக்கின்றது.

2. ராஜ்மஹல் பேலஸ் - ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
1798 ஆம் ஆண்டு ராஜ் சிங் சிஸோடியா என்ற அரசரால் இது கட்டப்பட்டது. இவர் (அக்பருடன் சண்டையிட்ட) மன்னர் ரானா பிரதாப் சிங் என்ற புகழ்பெற்ற மன்னரின் கொள்ளுப் பேரன் ஆவர். இந்த அரண்மனை ஜெய்ப்பூர் - கோட்டா நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூரிலிருந்து 170வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

3. ரம்பாக் பேலஸ் - ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர் மஹாராஜா குடும்பத்தினர் வேட்டைக்கு செல்லும் போது பயன்படுத்தும் அரண்மனையாக இருந்துள்ளது. இது ஜெய்ப்பூர் நகருக்கு அருகிலேயே 8வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. தாஜ் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த அரண்மனை 1957 ஆம் ஆண்டில் சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டது.

4. பல்ஸாமந் லேக் பேலஸ் - ஜோத்பூர்
ஜோத்பூரிலிருந்து 8வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இது பண்டைய மார்வார் எனும் நாட்டின் தலைநகராக இருந்த மண்டோர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையை சுற்றியுள்ள ஏரி 12 ஆம் நூற்றாண்டில் தோண்டப்பட்டுள்ளது ஆனால் இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் ஜோத்பூரை சேர்ந்த மஹாராஜா முதலாம் ஜஸ்வந்த் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இவர் முகலாயா ஆட்சியின் ஆதரவின் கீழிருந்த ரத்தோர் அரச வம்சத்தை சேர்ந்தவர். முகலாயா கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

5. பெர்ன்ஹில்ஸ் பேலஸ் - ஊட்டி
1844 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைத்தளபதியான கேப்டன் எப். காட்டன் என்பவரால் கட்டப்பட்டு 1860 ஆம் ஆண்டிற்குள் பல கைகள் மாறியது. 1873 ஆம் ஆண்டு 12 வயது மைசூர் இளவரசர் 10 ஆம் சாமராஜேந்திர உடையார் 10,000 ரூபாய்க்கு இந்த 40 ஏக்கர் அரண்மனையை ஆங்கிலேயர்களிடமிருந்து விலைக்கு வாங்கியது முதல் இது மைசூர் உடையார் வம்ச மஹாராஜாக்களின் கோடை வாசஸ்தலமாக இருந்து வருகிறது.

இந்த அரண்மனையின் தற்போதைய உரிமையாளர் மைசூர் மகாராணி பிரமோதயா தேவி என்பவராவார். தற்போது 50 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த அரண்மனை 19 ரீகல் சூட்களுடைய ஹோட்டலாக இருந்து வருகிறது.

6. தாஜ் பால்குநுமா பேலஸ் - ஹைதராபாத்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினாரிலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த 32 ஏக்கர் அரண்மனை. இதை 1884 ஆம் ஆண்டு கட்டியவர் பைகா எனும் குடும்பத்தை சேர்ந்த விகார் அல் உம்ரா என்பவராவார். இதன் கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளில் நிறைவடைந்தது.

இத்தாலிய கட்டிட பாணியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை பின் ஆறாம் ஹைதராபாத் நிஜாம் எனும் அரசர் 1897 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி தன்னுடைய கெஸ்ட் ஹவுசாக பயன்படுத்தினார் மேலும் இந்த அரண்மனையிலுள்ள நூலகத்தில் மிக அரிய குர்ஆன் பிரதி ஒன்றும் பாதுகாக்கப்படுகிறது. தற்போது இந்த அரண்மனை 220 அறைகள் மற்றும் 22 ஹாலுடன் கூடிய ஹோட்டலாக பயன்பட்டு வருகிறது.

7. சமோதி பேலஸ் - ஜெய்ப்பூர்
சுமார் 475 ஆண்டுகளுக்கு முன் ராஜபுத்திர – முகலாயா கலப்பு பாணியில் கட்டப்பட்ட அரண்மனை தற்போது சமோதி ஹோட்டல் குழுமத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

8. தேவிகார் பை லெபூவா – உதய்பூர்
ஆரவல்லி மலையின் மீது அமைந்துள்ள இந்த தேவிகார் அரண்மனை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நவீன வசதிகளுடன் 1999 ஆம் ஆண்டு ஹோட்டலாக உருமாற்றம் பெற்றது.

9. பூல்மஹால் பேலஸ் - கிஷன்கார்
ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை ஒட்டி குண்டாலா எனும் ஏரி அமைந்துள்ளது. இந்த அரண்மணை 1870 ஆம் ஆண்டு கிஷன்கார் மஹாராஜா என்பவரால் கட்டப்பட்டு தற்போது ஹோட்டலாக செயல்பட்டு வருகிறது.

10. லஷ்மி நிவாஸ் பேலஸ் - பிகானீர்
பிகானீர் மஹாராஜாக்களின் அரண்மனையாக இருந்த இந்த லஷ்மி நிவாஸ் அரண்மனை பொதுவாக பொதுமக்களின் கண்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், குயின் மேரி போன்ற உயர் பிரபலங்கள் மட்டும் சென்று விருந்தினர்களாக தங்கக்கூடிய உயர் வகுப்பினரின் அரண்மனையாக இருந்தது. 1904 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த மரபு உடைக்கப்பட தற்போது ஹோட்டலாக மாறியுள்ளது.

11. கஸ்மண்டா பேலஸ் - முஸ்ஸோரி
முஸ்ஸோரியில் உள்ள மிகப்பழமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இது ஆரம்பத்தில் சர்ச் வளாகமாக பெங்கால் எஞ்சினியர் குழுவைச் சேர்ந்த கேப்டன் ரென்னி டைலர் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்பு பிரிட்டீஷ் படை வீரர்களுக்கான மருத்துவமனையாகவும் அதன் பின்பு முஸ்ஸோரியின் முதலாவது பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டது.

1915 ஆம் ஆண்டு லக்னோ அருகிலுள்ள அவாத் பிரதேசத்தின் தாலுக்தாரராக (ஜமீன்தார்) இருந்த கஸ்மண்டா குடும்பத்தவரால் வாங்கப்பட்டு அரண்மனையானாது. 2014 ஆம் ஆண்டுடன் 100 வருடங்களாக 6 தலைமுறைகளாக அந்த குடும்பத்திடமே இந்த அரண்மனை உள்ளது.

1992 ஆம் ஆண்டு கஸ்மண்டா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளான ராஜ்குமார் தின்ராஜ் பிரதாப் சிங்ஜி என்பவரால் கஸ்மண்டா என்ற குடும்பப் பெயரிலேயே சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இன்றும் கஸ்மண்டாவின் வாரிசுகள் இங்கு வந்து தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

12. லலிதா மஹால் பேலஸ் - மைசூர்
இந்திய வைஸ்ராய் போன்ற உயர் அந்தஸ்துடைய ஆங்கிலேயர்களை உபசரிப்பதற்காக மைசூர் மஹாராஜா இந்த அரண்மனையை 1931 ஆம் ஆண்டு கட்டினார்.
13. தேவ்கார் மஹால் - ராஜசமந்த்
உதைப்பூர் மஹாராஜாவின் உயர் அரசப் பிரதானிகளான 16 பேர் கூடும் இடமாக இந்த அரண்மனை கட்டப்பட்டது. ராஜஸ்தானின் 4வது மிகப்பெரிய ஜாகிராக இருந்த தேவ்கார் ராவத்களின் அரண்மனையாகவும் இருந்தது. மேவார் நாட்டு கட்டிடக் கலையை பரிமளிக்கும் இந்த அரண்மனை தேவ்கார் அரச குடும்பத்தினரால் ஹோட்டலாக மாற்றப்பட்டதுடன் இந்த அரண்மனையின் மற்றொரு பகுதியில் அரச குடும்பத்தினர் இன்னும் வாழ்ந்து வருவதுடன் ஹோட்டலையும் நேரடி மேற்பார்வை செய்தும் வருகின்றனர்.

14. தி ஓபராய் கிராண்ட் ஹோட்டல் - கல்கத்தா
தி கிரேண்ட் டேம் ஆஃப் சௌரிங்கி என்றழைக்கப்படும் இந்த ஓபராய் ஹோட்டல் 1880களில் கோலனல். கிராண்ட் என்ற வெள்ளையரின் மாட மாளிகையாக கட்டப்பட்டது. பின்பு மிஸஸ். ஆன்னி மோங்க் என்பவரால் விடுதியாக மாற்றப்பட்டது. 1911 ஸ்டீபன் என்பவரால் வாங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு ஸ்டீபன் மரணமடைந்தார், 1937 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பரவிய தொற்று நோய்க்கு இந்த ஹோட்டலின் சுகாதாரமின்மையே காரணம் என சந்தேகிக்கப்பட்டு அன்றைய அரசினரால் மூடப்பட்டது.

1937 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலை லீசுக்கு வாங்கியும் பின்பு 1943 ஆம் ஆண்டு முழுமையாக விலை கொடுத்தும் வாங்கிய ராஜ் பகதூர் மோகன் சிங் ஓபராய் என்பவரால் துவக்கப்பட்ட ஹோட்டல் குழுமத்தின் முதல் விதையாகும் இது.

கோல்கத்தா நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆங்கிலேயர் கால வடிவ உபசரிப்பிற்கு புகழ்பெற்றதுடன் இங்குள்ள தூண் இல்லா பிரமாண்ட பால் ரூம் ஆங்கிலேயர் காலம் முதல் இன்று வரை பல்வேறு அரசு விழாக்கள் நடைபெறும் இடமாக நீடிக்கின்றது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் சுமார் 4,000 பிரிட்டீஷ் படைவீரர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான பார்ட்டிகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டதால் இதன் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கி இன்று உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி மலர்ந்துள்ளது ஓபராய் ஹோட்டல் குழுமம்.

15. ரவ்லா நர்லாய் - ரனக்பூர் - ராஜஸ்தான்
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரண்மனை ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் புகழ்பெற்ற ஜோத்பூர் மற்றும் உதய்பூர் இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. இது ஜோத்பூரின் ஜாகிர்களாக (ஜமின்தார்கள்) இருந்த அரச குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.
16. ரன்வாஸ் - நாகவூர் - ராஜஸ்தான்
12 ஆம் நூற்றாண்டில் ஆண்ட நாகர் வம்ச அரசர்களின் தலைநகராகும்.(நாக ஊர் என்பதே காலப்போக்கில் நாகபூராக மறுவியுள்ளது). இங்கு அவர்கள் அஹ்ஹிசித்திரகார் எனும் கோட்டையை கட்டியிருந்தனர். இந்த கோட்டை ராஜஸ்தானின் புகழ்பெற்ற தார் பாலைவனத்திற்கு ஜோத்பூரிலிருந்து செல்லும் நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. (பண்டைய நாகர்கள் தமிழர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது).

17 ஆம் நூற்றாண்டு முதல் முகலாய பேரரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசான ரத்தோர் வம்ச ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் ஜோத்பூர் மஹாராஜா தன்னுடைய 16 மனைவியர்களின் அந்தப்புரமாக இதை விரிவுபடுத்தி சொகுசாக வாழ்ந்தார். அந்த அந்தப்புர கோட்டையே தற்போது ரன்வாஸ் எனும் பாரம்பரிய சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது.


17. அஹ்லியா கோட்டை – கார்கோன் - மத்திய பிரதேசம்
நர்மதா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ள மஹேஷ்வர் கோட்டையின் மதில்களுக்கு மேல் அமைந்துள்ளது 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அஹ்லியா கோட்டை. தற்போது இந்தோர் அரச குடும்பத்தின் கீழுள்ள இந்த அஹ்லியா கோட்டை எனும் நவீன ஹோட்டலின் இன்றைய உரிமையாளர் இளவரசர் சிவாஜி ராவ் ஹோல்கர் எனப்பராவார்.

18. தி தாஜ் மஹால் பேலஸ் - மும்பை
நூற்றாண்டு கால 7 அடுக்கு கட்டிடம் கோதிக், கிராகோ-ரோமன், ராஜஸ்தானிய, இஸ்லாமிய கலவையில் கட்டப்பட்டதுடன் உள்வேலைப்பாடுகள் இத்தாலிய மற்றும் ராஜ்புத்தான கலையில் வடிவமைக்கப்பட்டது. சீத்தாராம் கண்டீராவ் வைத்யா மற்றும் டி.என். மிர்ஸா ஆகியோரின் வடிவமைப்பை கட்டிடமாக எழுப்பியவர் ஆங்கிலேயே எஞ்சினியர் வி.ஏ.சேம்பர்ஸ் என்பவராவார். தாஜ் ஹோட்டல் இருவேறு காலகட்ட கட்டிடங்களை உள்ளடக்கியது, ஒன்று 1903 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தாஜ் மஹால் பேலஸ் மற்றும் 1973 ஆம் ஆண்டு உருவான தாஜ் மஹால் டவர்ஸ்.

இதன் நிறுவனரான ஜாம்ஷெட்ஜி டாட்டா என்பவரை அன்றைய பம்பாயில் இயங்கிய 'வெள்ளையர்கள் மட்டும்' ஹோட்டலான 'வாட்ஸன் ஹோட்டல்' என்ற நிறவெறி ஹோட்டலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் போட்டிக்கு கட்டியதே இந்த தாஜ் மஹால் ஹோட்டல். இந்திய ஹோட்டலிலேயே இங்கு தான் முதன்முதலாக மின்சார வசதி, அமெரிக்க மின்விசிறி வசதி, ஜெர்மானிய லிப்டு வசதிகள், துருக்கிய ஸ்டைல் பாத்ரூம் வசதி, ஆங்கிலேயே பட்லர்கள் போன்ற வசதிகளுடன் திறக்கப்பட்ட முதல் ஹோட்டலாகும்.

1903 ஆம் ஆண்டு இது திறக்கப்பட்ட போது மின் விசிறியுடன் கூடிய அறையின் ஒருநாள் வாடகை 13 ரூபாய், சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் வேண்டுமானால் 30 ரூபாய்கள். எனினும் இங்கு அதிகம் தங்கியவர்கள் எல்லாம் ஆங்கிலேயே மேட்டுக்குடியினரும், பன்னாட்டு ஆட்சியாளர்களுமே.

கூடுதல் வரலாற்றுத் தகவல்:
ஜாம்ஷெட்ஜியின் சகோதரியான ஷைலா டாட்டா என்பவரின் மகளான ருட்டன் பெடிட் (சுருக்கமாக ருட்டி) என்ற 16 வயது இளம் பெண்ணை பாகிஸ்தானின் ஸ்தாபகரும், சுதந்திர பாகிஸ்தானின் முதலாவது கவர்னர் ஜெனரலுமான 40 வயது முஹமது அலி ஜின்னா காதலித்து 42வது வயதில் ருட்டிக்கு 18 வயதாகும் போது 2வது மனைவியாக மணந்தார். ருட்டன் பெடிட்டாக இருந்து மர்யம் ஜின்னாவாக மாறிய இவர்களுக்கு டினா ஜின்னா என்றொரு மகள் மட்டுமே வாரிசு.

குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்து கொண்ட ருட்டன் பெடிட் இதே ஹோட்டலில் அவருடைய 18வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த போது தான் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்பாக "தான் ஜின்னாவை" திருமணம் செய்து கொள்ளப் போவதாக பகிரங்கமான அறிவித்து அதிர்ச்சியளித்தார் அத்துடன் டாட்டா குடும்பத்துடனான அவரது உறவும் முறிந்தது.

பல்வேறு முரண்பாடுகள் நிறைந்த இந்தத் திருமண வாழ்க்கையும் அல்ப ஆயுளிலேயே கசந்து போய் (விவாகரத்து செய்து கொள்ளாமல்) பிரிந்து வாழ்ந்ததும், 1900 ஆம் பிறந்த ருட்டி 1929 ஆண்டு இளம் வயதிலேயே மரணத்தை இதே தாஜ் ஹோட்டலிலேயே தழுவியதும் தனிக்கதை.

19. தாஜ் லேக் பேலஸ் - உதய்பூர் - ராஜஸ்தான்
1746 ஆம் ஆண்டு பிச்சோலா எனும் ஏரியின் நடுவே கட்டப்பட்டுள்ளதால் இதற்கு மிதக்கும் அரண்மனை என்றும் மான்சூன் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் இருந்து உதைப்பூர் நகரின் அழகையும், ஆரவல்லி மற்றும் மச்லா மக்ரா போன்ற மலைகளின் எழில் கொஞ்சும் அழகை ரசிக்க முடியும்.

1983 ஆம் ஆண்டு தயாரான ஆக்டோபுஸி (Octopussy) எனும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் இந்த அரண்மனையிலும் படமாக்கப்பட்டன. ஆக்டோபுஸியின் பெரும்பாலான காட்சிகள் உதய்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்தியாவிலேயே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆங்கில படம் ஒன்றின் முக்கிய சண்டை காட்சி ஒன்றில் இந்திய ஆட்டோ ரிக்ஷா ஒன்றும் பயன்படுத்தப்பட்டது உலகளவில் வித்தியாசமாக உணரப்பட்டது.
ஜின்னா மர்யம் திருமண ஒப்பந்தப் பத்திரம்

ருட்டி (எ) மர்யம் ஜின்னா

Sources: travel.fropky.com / wikipedia / etc.
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...