Pages

Wednesday, August 15, 2018

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு !

அதிரை நியூஸ்: ஆக.15
"இந்திய எங்கள் தாய் நாடு ; இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்ற நிலைப்பாட்டோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களை மதவேற்றுமை பாராட்டித் தீவிரவாதிகள் என்ற பட்டம் சூட்டி வெறுத்தொதுக்க முயன்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். முஸ்லீம்கள் நாட்டிற்குச் செய்த சேவைகளையும், தியாகங்களையும் மதச்சாயம் பூசி வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சிக்கின்றார்கள். அக்கூட்டத்தினர். அவ்வாறு மறைக்கப்பட்ட வரலாறுகளில் முதன்மையானது இந்திய விடுதலைப் போராட்டம்.

இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம்கள் தங்கள் சதவீதத்துக்கும் மேலாகவே பங்களித்துள்ளார்கள்; தியாகம் புரிந்துள்ளார்கள். முதல் சுதந்திரப் போர் என்றழைக்கப்படும் 1857 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தில் மற்றவர் பங்கை விட முஸ்லீம்களின் பங்கு மிகுதியானது. இக்கலகத்தின் போது அதிகமானப் பாதிப்புக்குள்ளானவர்களும் அவர்களே. முகலாய மன்னர் இரண்டாம் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். அவருடைய வாரிசுகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கலகத்துக்குப் பின்னர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முஸ்லீம்கள் பின்தள்ளப்பட்டனர்.

இந்தியப் விடுதலை போர் என்றவுடன் முஸ்லீம்களில் முதலில் நினைவுக்கு வருபவர் மைசூரின் மன்னர் தீரர் திப்பு சுல்தான்தான். 1782 ல் மைசூரின் மன்னராக தமது 32 ம் வயதில் முடிசூட்டிக் கொண்ட திப்பு சுல்தான் ஆங்கிலய ஆட்சியருக்குச் சிம்மச் சொப்பனமாக விளங்கினார். ஆங்கிலேயருக்கு எதிரான தமது விடுதலைப் போரை 'ஜிகாத்' என்று வர்ணித்துக் கொண்டார். வெள்ளையர்களுக்கு எதிராக வீரப்போர் பல புரிந்தார். 1784 ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போரில் ஆங்கிலத் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இப்போரின் முடிவு திப்புவை நினைத்து ஆங்கிலேயரைக் குலை நடுங்கச் செய்தது.

திப்பு சுல்தானைப் போரில் நேரில் சந்திக்கத் திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியைக் கையாள ஆரம்பித்தனர். லஞ்சம் தந்து வஞ்சக வலை விரித்தனர். வஞ்சக வலையில் வீழ்ந்த திப்புவின் அமைச்சர்களும், அதிகாரிகளும் திப்புவுக்குத் துரோகம் செய்யத் துணிந்தனர். அவர்களோடு உடன்பாட்டை முடித்த வெல்லெஸ்லி பிரபு ஆங்கிலத் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "இனி துணிச்சலாகத் திப்புவின் மீது நாம் படை தொடுக்கலாம்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலயர்கள் முற்றுகையிட்டனர் திப்பு தமது பதினோராயிரம் படை வீரர்களுடன் எதிர்த்து நின்றனர். முப்பது நாட்கள் முற்றுகை நீடித்தது. திப்புவின் கோட்டையை ஆங்கிலேயர்களால் கைப்பற்ற இயலவில்லை போர்க்களத்தில் திப்பு வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவைத் துளைத்து மண்ணில் சாய்த்தன. விடுதலைப் போரின் போது திப்பு வீரமரணம் எய்தினார். ''திப்புசுல்தான் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்'' என்று தமது 'யங் இந்தியா' இதழில் காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு செலுத்திய முஸ்லிம்களில் 'அலி சகோதரர்கள்' என வரலாற்றில் குறிப்பிடப்பட்ட மவ்லானா முகம்மது அலி அவர்களும், மவ்லானா சவ்கத் அலி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் இவ்விருவரும் காந்திஜி அவர்களை தங்கள் முன்னோடியாகக் கருதினர். அண்ணல் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து இந்த பூமியில் ஒருவருடைய சொல்லுக்கு கீழ்படிக்கிறேன் என்றால், அது காந்தியடிகளின் சொல்லுக்குத்தான்" என்று முகமது அலி கூறுவார். காந்திஜியின் விடுதலைப் போராட்டக் களத்தில் அலி சகோதரர்கள் பங்கேற்றுப் பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.  அதன் விளைவாக ஆங்கில ஆட்சியின் அடக்கு முறைக்கு ஆளாகினர். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1920 களில் காந்திஜியின் உற்ற தோழராக இருந்தவர் 'உமர் சொபஹானி' என்ற கோடீஸ்வரர். இவருக்கு சொந்தமான பஞ்சாலை ஒன்று பம்பாயில் இருந்தது. அந்த பஞ்சாலை வளாகத்தில்தான் ரூ. 50 ஆயிரம் மதிப்புடைய உயர்ரக வெளிநாட்டுத் துணிகளை சுதேசி போராட்டத்தின் போது எரித்தார். அன்றைய போராட்டக்கள வீரர்களில் ஒருவரான பாலகங்காதர திலகரின் சுயராஜ்ய நிதிக்காக காந்திஜி ஒரு கோடி ரூபாய் திரட்ட முயன்ற போது, தனது பங்காக உமர் சொபஹானி ரூ. 3 லட்சத்தை வழங்கி உதவினார். இவ்வாறு அவர் காந்திஜிக்கு உதவுவதை அறிந்த ஆங்கிலேய ஆட்சியினர் உமர் சொபஹானி துணி வியாபாரச் சந்தையை சரியவைக்க ஒரு புகை வண்டி நிறைய சாக்குகளை பம்பாய்க்கு அனுப்பி விலையைக் குறைத்து விற்றனர். இதனால் உமர் சொபஹானியின் வியாபராதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சிறிதும் கலங்காத உமர் சொபஹானி தொடர்ந்து காந்திஜியுடன் நட்பு பாராட்டினார்கள்.

விடுதலைப் போராளி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிர்த் தோழர்களாக விளங்கியவர்கள் 'ஷா நவாஸ்கான்' மற்றும் 'ஹபீபுர் ரஹ்மான்' என்ற இஸ்லாமியர்கள். நேதாஜியின்  'ஆஜாத் ஹிந்த்'  இராணுவத்தின் கர்னலாக பதவி வகித்தவர் ஷா நவாஸ்கான். விமான விபத்துக்குள்ளாகி நேதாஜி உயிர் நீத்த போது, அவருட்டன் பயணித்து உயிர் நீத்த ஒரே இந்தியர் ஹபீபுர் ரஹ்மான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக இருந்த மவ்லான அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை குறைத்து மதிப்பிட முடியுமா?  தமது 24 வது வயதில் 'அல் ஹிலால்' என்ற வார இதழைத் தொடங்கி, அதில் வெளியிட்ட கட்டுரைகள் வழியாக ஆங்கில ஆட்சியை அதிரவைத்தார். அல் ஹிலால் இதழுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். அதனால் அல் ஹிலால் நின்று போனது. ஆனால் ஆஸாத் ஒய்ந்துவிடவில்லை 'அல் பஸாக்' என்ற புதிய இதழைத் தொடங்கி , அதன் வாயிலாகத் தனது போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் தொடர்ந்தது. அதன் விளைவாக ஆஸாத் அவரது சொந்த மாநிலமான வங்காளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

போராட்ட முறையை மாற்றிக்கொள்ள விரும்பிய ஆஸாத் தன்னைப் போல்வர் விடுதலை வேட்கை கொண்டுப் போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்த அலி சகோதரர்களுடன் கரம் கோர்த்தார். அவர்களுடன் இணைந்து பல போர்க்களங்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மூன்று மவ்லானாக்களும் சிறை பிடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டார்கள். இதன் விளைவாக இந்திய உலமாக்கள் மத்தியிலும் விடுதலை எழுச்சி உருவானது. டில்லியில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கையெழுத்திட்ட ஃபத்வா வெளியிடப்பட்டது. " முஸ்லீம்கள் ஆங்கில ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தங்கள் பட்டங்களைத் துறக்க வேண்டும். ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றங்களிலிருந்தும், ஊராட்சி அமைப்புகளிலிருந்தும் வெளியேற வேண்டும்" என்று அந்த ஃபத்வா கட்டளையிட்டது. அது அச்சிடப்பட்டு அதன் பிரதிகள் இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டன.

இந்திய விடுதலை போராட்டத்தில் முஸ்லீம்கள் தீவிரம் காட்டியதன் விளைவாக அவர்கள் தங்களின் உயிர், உடமைகளை மட்டுமல்லாது, பிற்காலச் சந்ததியினருக்குச் கிடைக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவற்றையும் மற்றெல்லாரையும்வீட அதிகம் இழக்கவல்ல சூழ்நிலையும் உருவானது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கமாக கல்வியைப் புறக்கணிப்பது என்ற ஒரு போராட்ட முறையும் அறிவிக்கப்பட்டது. எல்லா சமுதாயமும் இப்போராட்டத்தில் பெயரளவுக்குப் பங்களிப்பு செய்த நிலையில், முஸ்லீம்கள் முழு அளவில் இப்போராட்டத்தில் பங்களிப்பு செய்தனர். 

ஆங்கிலம் கற்பது 'ஹராம்' என மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்த காரணத்தால் படித்துக்கொண்டிருந்த முஸ்லீம்கள் எல்லாம் கல்விச் சாலையை விட்டு வெளியேறினர். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறியவர்களில் ஒருவர்தாம்.  ஆங்கில ஆட்சியில் முஸ்லீம்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருந்த போதிலும், தேசபக்தியின் பெயரால் அச்சலுகையைப் பயன்படுத்த தவறினர். அதன் காரணமாக முஸ்லீம்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் நிலைமை மாறினாலும், விடுதலைக்கு முன்னிருந்த நிலையின் தொடர்ச்சி இன்றும் நிலவவே செய்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இந்த உண்மையைத்தானே சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிபதி 'இராஜேந்திர சச்சார்' குழுவின் அறிக்கையும் நமக்கு சுட்டிக்காட்டியது.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...