.

Pages

Wednesday, September 26, 2018

அமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல்கள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: செப். 26
உலகின் பிற இடங்களில் சர்வ சாதாரணமாக கருதப்படும் ஒரு சில செயல்கள் அமீரக காலச்சாரத்தையும் சட்டத்தையும் மீறக்கூடிய ஒரு செயலாக அமைந்துவிடக்கூடும். அவ்வாறான 9 அலட்சியமான செயல்கள் நம்மை அமீரக சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதுடன் சிறை, அபராதங்கள் போன்றவற்றையும் பெற்றுத் தரக்கூடும் என்பதால் அமீரகத்திற்கு வருகை தருவோர் மிகவும் உஷாராக நடந்து கொள்வது அவசியம்.

1. சாலைகளை குறுக்கே கடப்பது: 
நீங்கள் மிகவும் அவசரமானதொரு தருணத்தில் இருக்கலாம் அல்லது மிகவும் சூடான வெப்பச்சூழலில் கூட இருக்கலாம் ஆனால் அதற்காக கண்ட இடத்திலும் சாலைகளை கடக்கக்கூடாது மாறாக சாலைகளை கடப்பதற்காக போடப்பட்டு 'ஜீப்ரா கிராஸிங்' எனப்படும் கருப்பு வெள்ளை கோடுகள், நடைபாலங்கள் அல்லது மெட்ரோ நிலையங்கள் வழியாக மட்டுமே கடந்து செல்லலாம் மீறினால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2. போட்டோ எடுத்தல்:
நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக அல்லது தேர்ந்த புகைப்பட நிபுணராக இருக்கலாம் அதனால் நீங்கள் சமூக அக்கறையோடு எவருடைய அனுமதியில்லாமலும் போட்டோ எடுத்து சமூக தளங்களில் வெளியிட்டால் பாதிக்கப்பட்ட நபர் எந்த நேரத்திலும் அனுமதியற்ற போட்டோவிற்காக ஆர்வக்கோளாறுடைய உங்கள் மீது புகார் தெரிவித்தாலும் சட்டம் தன் கடமையை உடனடியாக செய்யும். தனிமனித உரிமைகளை மீறும் இந்த சைபர் கிரைம் குற்றத்திற்காக 1 ½ லட்சம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை அபராத்துடன் சிறைத் தண்டனையும் உண்டு.

3. தவறான முறையில் செய்திகள் அனுப்புவது:
மொபைல் போன் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக கெட்ட வார்த்தைகளையும் தவறான சின்னங்களையும் பிறருக்கு அனுப்பினால் பாதிக்கப்பட்டவர் அதற்காக உங்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் அதன் பின்விளைவுகள் அபராதம், சிறை மற்றும் தண்டனைக்குப் பின் நாடு கடத்தல் ஆகியவைகளைப் பெற்றுத்தரும் வல்லமைமிக்கவை என்பதை மறவாதீர்.

4. கைகளால் சைகைகள் காட்டுதல்:
உலகின் பல இடங்களிலும் மேற்கத்திய பாப் கலாச்சர அடிப்படையில் கை சைகைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படாது தான் ஆனால் அமீரக மக்களின் (இஸ்லாமிய) காலச்சாரத்தை பாதிக்கும் இதுபோன்ற பல அசிங்கமான கை செய்கைகள் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் கைகளை கொண்டு சைகை காட்டுமுன் நன்கு யோசித்துக் கொண்டால் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

5. பொதுவெளியில் கார்களை கழுவுதல்:
பொது இடங்களில், கட்டணம் மற்றும் இலவச பார்க்கிங் பகுதிகளில், கட்டடங்களுக்கு முன்னால் என பொது பயன்காட்டிற்கு உள்ள இடங்களில் கார்களை தண்ணீரை ஊற்றி கழுவுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அனுமதிபெற்ற கார் கழுவும் மையங்களுக்குச் செல்லுங்கள் அல்லது தண்ணீர் கீழே சிந்தாதவாறு ஈரத்துணி அல்லது உலர்ந்த துணிகளை கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள்.

6. குப்பைகளை தெருவில் எறிவது:
கையிலுள்ள சிகரெட் துண்டையோ அல்லது மிட்டாய் உரை போன்ற பல சிறு குப்பைகளை தெருவில் எறிவது மிக எளிது தான் ஆனால் அந்த செயல் சுற்றுச்சூழலுக்கும் உங்களுக்கும் உகந்தவையல்ல, அமீரகத்தில் இவை தண்டனைக்குரிய குற்றச்செயலாகவும். இந்த அலட்சியமான தவறான பழக்கம் உங்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உடன்பிறந்தார்களுக்கோ தொற்றக்கூடும் மாறாக அவர்களுக்கு நீங்கள் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தால் அவர்களும் அதேபோல் நல்ல பழக்கங்களை உடையவர்களாக மாறலாம்.

7. காசோலை கணக்கில் பணமின்றி திரும்புதல்:
நீங்கள் கொடுத்த செக் ஒன்று உங்கள் மறதியினால் அல்லது கணக்கில் போதிய பண இருப்பு இன்றி திரும்பினால் அந்த நிமிடத்திலேயே உங்கள் மீது கிரிமினல் குற்றமாக பதிந்துவிடும். ஒருவேளை செக்கை ரத்து செய்ய விரும்பினால் அது மீண்டும் முறையாக உங்கள் கைகளுக்கு வந்து சேர்வதையோ அல்லது அதன் மீது ரத்து செய்யப்பட்டுவிட்ட முத்திரை பதிவதையோ உறுதி செய்து கொள்ளுங்கள். கிரிமினல் குற்ற வழக்காக மாறும் போது இதனால் பற்பல சங்கடங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.

8. நன்கொடை வசூலித்தல்:
உலகின் பல நாடுகளிலும் பல தர்மக்காரியங்களுக்காக நன்கொடைகள் வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன ஆனால் அமீரகத்தில் தனியாகவோ, கூட்டாகவோ, ஆன்லைன் வழியாகவோ அல்லது மறைமுகமாவோ நன்கொடைகள் வசூலிப்பது சட்டவிரோதமாகவும். நியாயமான காரணங்களுக்காக அமீரகத்தில் நீங்கள் நன்கொடை வசூலிக்க விரும்பினால் பதிவு பெற்ற தர்ம ஸ்தாபனங்கள் மற்றும் அனுமதிபெற்ற சமூக ஆர்வலர்கள் வசம் ஒப்படைத்தால் அவர்கள் பரிசீலித்து சட்டபூர்வ அனுமதி பெற்று வசூலித்துத் தருவார்கள்.

9. தனிப்பட்ட ரகசியங்களை பொதுவெளியில் பரப்புதல்:
இரு நண்பர்களுக்கிடையே ரகசியம் பேசிக் கொள்ளப்பட்டது அல்லது பணியாற்றும் நிறுவனம் பற்றி ரகசியமாக தெரிய வந்த தகவல்கள் பொதுவில் கசியவிட்டால் பாதிக்கப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ உங்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உரிமை உண்டு. தனிநபர் உரிமை, அவதூறு மற்றும் ரகசியம் காத்தல் ஆகியவை அமீரக சட்டங்களால் கடுமையாக பாதுகாக்கப்படகின்றன. எனவே, தவறான தகவல்களை பரப்புதல், அவதூறுகளை பரப்புதல், குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் வெளியிடுதல் போன்ற செயல்களின் மூலம் தனிநபர் அல்லது நிறுவனங்களின் மீது வெறுப்பை உண்டாக்குவது கடும் தண்டனைகளை பெற்றுத்தரும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.