Pages

Wednesday, September 5, 2018

ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர்!

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன்

அதிரை நியூஸ்: செப்.05
இன்று செப்டம்பர் 5-ம் நாள். நாடெங்கிலும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்ற ஆண்டு இதே நாளில் அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தில் "என்னைச் செதுக்கிய ஆசிரியர் சிற்பிகள்" என்ற தலைப்பில் என்னை ஒரு கல்வியாளனாக  உருவாக்க உதவிய என்னுடைய ஆசான்கள் சிலரைப்பற்றிப் பதிவிட்டுருந்தேன். இவ்வாண்டு முழுச் சமுதாயத்தைச் செதுக்க விரும்பிய சிற்பியும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணக்கர்த்தருமான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைச் சற்றே நினைவு கூற விழைகிறேன்.

பெரிய படிப்பாளி, நல்ல பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், தத்துவ அறிஞர், சோவியத் நாட்டின் இந்தியத் தூதர், உலகின் பல பல்கலைக் கழகங்கள் வழங்கிய கவுரவ முனைவர் பட்டங்களுக்குச் சொந்தக்காரர், நாட்டின் குடியரசுத் தலைவர், நேர்மையான நிர்வாகி என்பன போன்ற பன்முகத்தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள்.

"உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எளிமையாக இருத்தல், உண்மையாக வாழ்தல், களங்கமற்று இருத்தல், உள்ளங்கனிந்திருத்தல், வாழ்க்கையை நேசித்தல், துயரத்தையும் ஆபத்தையும் எதிர்த்து வாழ்தல் என்ற பண்புகளோடு இவரைப்போன்று வாழ்ந்தவர்களும் இல்லை; வாழக் கற்றுத்தந்தவர்களும் இல்லை" என்று மகாத்மா காந்தியடிகள் அவர்கள் இராதாகிருஷ்ணன் அவர்களைப்பற்றிப் போற்றிக் கூறியுள்ளார்.

நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உச்சநிலைப் பதவிவரை உயர்ந்த இராதாகிருஷ்ணன் அவர்களின் தொடக்கப்பணி ஆசிரியப் பணியாகவே அமைந்தது. தமது 21-ம் வயதில் சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய அவரது ஆசிரியப் பணி 1909 முதல் 1948 வரை 40 ஆண்டுகள் நீண்டது.

சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தியத் தத்துவம் பற்றி அவர் வகுப்பெடுக்கும் முறையால் ஈரக்கப்பட்டுப் பிறக் கல்லூரி மாணவர்களும் மாநிலக் கல்லூரிக்கு வந்து அவரது விரிவுரையை ஆர்வத்தோடு கேட்பார்கள். அந்த அளவுக்கு மாணவர்களைக் கவரும் திறனுடைய ஆசிரியராகத் திகழ்ந்தார்.

பல பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் அழைப்பு விடுத்ததால், அவருக்கு பல கல்லூரிகளில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. 1918 முதல் 1920 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1920 ம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்துக்குப் பணிமாறினார்.  கல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது, அவர் அமர்ந்திருந்த குதிரை ரதத்தை அவருடைய மாணவர்கள் பிரியத்துடன் இழுத்துச் சென்றனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் அவருக்கிருந்த மரியாதையை உலகுக்கு உணர்த்தியது.

1931 ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1936 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசைச் சமயங்கள் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டு வாரணாசிப் பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தரானார். சில காலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தராக இருந்துள்ளார்.

ஆசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவர்கள் பாட அறிவைப் பெறுவதற்கு மட்டுமல்லாது, ஆற்றல், ஒழுக்கம், நேர்மை சார்ந்த பண்புகளைப் பெறுவதற்கும் நல்ல வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் முகமாக அவர் கூறிய அறிவுரைகள் தற்கால ஆசிரியர்கள் அவசியம் கைகொள்ளத்தக்கவை ஆகும். " மாணவர்கள் நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல்பாடுகள் நாட்டிற்குத் தலைக் குனிவையும், ஏமாற்றத்தையும் உண்டுபண்ணிவிடும். 50 ஆண்டுகள் உலகின் பல பகுதிகளில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற முறையில் ஒன்று கூறுவேன். ஆசிரியர் செய்வதை மாணவர் பின்பற்றுவர். ஆகவே, முந்தியவர் பிந்தியவருக்குச் சரியான முன்மாதிரியாக இருக்க வேண்டும். அறிவைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்பதுதான் அந்த அறிக்கை.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அறிவுரைகளுக்கு எதிராக ஒரு சில ஆசிரியர்களின் நடைமுறை இருப்பதை நாம் மறுக்க இயலாது. 'பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது; மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தல்; கல்லூரிப் பேராசிரியை கைது' போன்ற ஊடகச் செய்திகள் அவ்வப்போது வெளியாகி நம்மை வேதனையுறச் செய்கின்றன. தங்களின் இத்தகைய செயல்பாடுகள் ஆசிரியர் சமுதாயத்தையே மாசுபடுத்துகின்றன என்பதை இத்தகைய புல்லுருவிகள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஒழுக்க நெறிகளைப் பேணி,  ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகளுக்கேற்ப, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால் மட்டுமே 'ஆசிரியப்பணி அறப்பணி' என்ற கூற்றுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...