Pages

Wednesday, October 3, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் அரிய வகை மரக்கன்றுகள் கண்காட்சி: 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.03
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியோர் இணைந்து நடத்திய 'நம்ம மரங்கள் திருவிழா' விழிப்புணர்வுக் கண்காட்சி கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் கண்காட்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

கண்காட்சியில், அழிந்து வரும் மரங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், அவற்றை அழிவிலிருந்து காக்கவும், பொதுமக்களிடையே மரங்களை வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவற்றை பராமரிப்பது பற்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துப் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. மேலும், புள்ள மருது, காட்டுச்சந்தானம், மலைவேம்பு, உதிர வேங்கை உள்ளிட்ட 110 வகையான மரக்கன்றுகளும், பல அரியவகை மரங்களின் விதைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மரங்களின் மருத்துவக் குணம், பயன்பாடு மற்றும் மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து, வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம் கலைமணி, மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.ராம் மனோகர், மாவட்ட கல்வி அலுவலர் ஜி சின்னையன், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் கே பாண்டியன் ஆகியோர் விளக்கிக் கூறினர். கண்காட்சி ஏற்பாட்டினை, பேராசிரியர்கள் கே.முத்துகுமரவேல், ஓ.சாதிக் ஆகியோர் செய்திருந்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சி அமைப்பாளர் பேராசிரியர் பி. குமாராசாமி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.அம்சத் தொகுத்து வழங்கினார்.

கண்காட்சியையொட்டி கல்லூரி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி, லாரல் சி.பி.எஸ்இ பள்ளி, லிட்டில் பேர்ட் மெட்ரிக். பள்ளி உள்ளிட்ட மாணவ, மாணவிகள் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இக்கண்காட்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் வி. கானப்பிரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...