Pages

Tuesday, October 2, 2018

என்றும் நினைவில் வாழும் 'கல்வித்தந்தை' ஹாஜி SMS ஷேக் ஜலாலுதீன்!

அதிரை நியூஸ்: அக்.02

"The responsible man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt to himself. All progress depends upon the second man" 

பேரறிஞர் பெர்னாட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் காலம் சென்ற கல்வித்தந்தை ~ காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஹாஜி ஜனாப் எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவே நெஞ்சில் நிழலாடும்.

ஹாஜி எஸ்.எம்.எஸ். அவர்கள் தன் மனதுக்குச் 'சரி' எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார்; உறுதியாக அதன்படி செயல்படுவார்; முன்னர் அக்கருத்தை எதிர்த்தவர்களும் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்திடுவார்.     

எனக்கு இனந்தெரிந்த நாள் முதல் அப்பெரியரை நன்கறிவேன். நான் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த காலம் முதல், காதிர் முகைதீன் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பபை முடித்து வெளிவந்த காலம் வரை அவரது பண்பு நலன்களையும், அறிவாற்றலையும், வியத்தகு செயல்களையும் பலர் சொல்லக் கேட்டுள்ளேன். நான், பி.டி பட்டப்படிப்பை முடித்துவிட்டுக் காதிர் முகைதீன் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தபின் தாளாளர் எஸ்.எம்.எஸ் அவர்களிடம் நெருங்கிப்பழகும், பேசும் வாய்ப்பினை பெற்றேன். கடந்த 1986 ஆம் ஆண்டு நான் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பினை ஏற்றபின் அன்னாருடன் நெருக்கம் மேலும் அதிகமானது. அன்னாரைப்பற்றி நான் கேட்டறிந்த செய்திகள் அனைத்தும் மெய் என்பதை நேரடியாகக் கண்டுணர முடிந்தது.

இறுதி வரைக்கும் எதிர் நீச்சலிட்டே வாழ்ந்து, ஊருக்கும், சமுதாயத்துக்கும் நற்பணி செய்த நன்னெறியாளர் ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்கள். தமது இளம் வயதிலேயே எம்.கே.என் அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்று அப்பெருமகனார் நல்ல பல அறச் செயல்களைச் செயல்படுத்த தொடங்கினார். அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலுள்ள சிறுவர்களின், இளைஞர்களின், பெண்களின் கல்விப் பயனை எண்ணிப் பார்த்துக் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தார். இவை ஒன்றும் எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. எதிர்ப்புகள் ஒருபுறமும், பொருளாதாரத் தேவை மறுபுறம் அத்தனையையும் தூள் தூளாக்கிவிட்டு எண்ணிய கருமத்தைத் திண்ணியராய் நின்று செய்து முடித்தார்; வெற்றி கண்டார்.

"அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிர நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்"

என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தாலே கோடி புண்ணியம் என்றால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ஏழை எளியோர்கள் எழுத்தறிவு பெற வசதி செய்துக் கொடுத்துக் கல்விக்கண் கொடுத்த ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்கள் எத்தனையோ கோடி புண்ணியம் செய்திருக்கிறார். எனவேதான் என்றும் நம் மனதில் வாழும் எஸ்.எம்.எஸ் எனப் போற்றப்படுகிறார்.

கொண்ட கொள்கையில் வெற்றிகள் பல கண்ட ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்களின் பண்பு நலன்களை எண்ணிப் பார்க்கும் போது அவர் ஓர் ஒப்பற்ற அற்புத மனிதர் என்ற எண்ணமே ஏற்படுகிறது. அவர்தம் நுண்ணறிவு, நுண்மான், நுழைபுலம், விடா முயற்சி, அசாத்திய துணிவு, ஆணித்தரமான பேச்சு, எதிரிகளையும் தன்பால் ஈர்க்கும் வசீகரப் பார்வை, இருக்கும் இடத்தில இருந்தே காரியம் சாதிக்கும் வல்லமை, மற்றவர் திறமையை மதிக்கும் மாண்பு... இப்படி எண்ணற்ற சிறப்பியல்புகளின் சிகரமாக அவர் திகழ்ந்தார்.

மேடைப் பேச்சினைப் பேசியதில்லை; ஆனால் வலிமை மிக்க சொற்களைக் கொண்டு உரையாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அவரது பேச்சு நம்மைச்  சிந்திக்கவும் - சில நேரங்களில் சிரிக்கவும் வைக்கக்கூடியது. பட்டப்படிப்புப் படித்தவரல்லர்; அவர் எழுதினால் யாரும் திருத்திட முடியாது; அவர் திருத்தினால் யாரும் மறுத்திட முடியாது எனச் சொல்லுமளவுக்கும் அவரிடம் ஆங்கிலப் புலமை இருந்தது. எழுதுகோலும், தட்டச்சுமே அவரது பலமான ஆயுதங்களாக விளங்கின. அரசியல் ஈடுபாடு கொண்டவரல்லர்; ஆனால் அரசியல் ஆருடங்களைக் கணிப்பதில் வல்லவராக விளங்கியவர்; அரசியல்வாதிகள் பலரால் மதிக்கப்பட்டிருக்கிறார். சட்டம் படித்தவரல்லர்; ஆனால் சட்டப் பிரச்னைகளை அலசுவதில் நிபுணராகத் திகழ்ந்தார். ஆடம்பரத்தை விரும்பியவரல்லர்; ஆனால் தம் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசரியர்களும், ஊழியர்களும் அழகாக உடை உடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தம் ஊழியர்களிடம் அதிகக் கட்டுப்பாடுகளை விதித்ததில்லை; ஆனால் அவர்கள் ஒழுக்கம் பேணி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஒருவரின் திறமையை நேரில் பாராட்டியதில்லை; மற்றவர்களிடம் அதனைப் பாராட்டிப் பேசினார்...  இப்படியே அப்பெரியாரது பண்பு நலன்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்கள் மேலும் சிறிது காலம் நம்மோடிருந்திருந்தால், அதிராம்பட்டினம் ஒரு பொறியியல் கல்லூரியைப் பெற்றிருக்கும்; ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட பெற்றிருக்கலாம். அல்லாஹ்வின் நாட்டப்படி அன்னார் நம்மை வீட்டு மறைந்து விட்டாலும், அவர் தொடங்கிய நற்பணிகள் நின்றுவிடாதுத் தொடர்கின்றன. அப்பணிகள் தொடரும் வரை கல்வித்தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ் அவர்கள் என்றும் நம் நினைவில் வாழ்வார்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.                                                               

4 comments:

  1. இந்த மனிதநேயரின் மறுமை வெற்றிக்காக அதிரையர்களும் பயனடைந்த பிற ஊர் சகோதரர்களும் துஆ செய்யுங்கள். இதுவே நாம் இந்த கல்வி வள்ளலுக்குச் செய்யும் கைமாறு.

    ReplyDelete
  2. மேலும் அந்த கல்வி நிருவணம் சிறப்புற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. I also have to recall my olden days when I decided to join the KMC in B.Com course(we were the first batch) I met him along with my dad at his residence at that time he requested me to perform well since they started newly B. Com. course at KMC. and I did promised him to do so.

    ReplyDelete
  4. If he wouldn't start his educational institutions in Adirai many middle class and low income peoples would have lost the golden opportunity to became a degree holders. In fact I am the one among them. Hats of Hajji Janab Shaikh Jalaludeen kaka.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...