.

Pages

Wednesday, December 19, 2018

அமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினைவும் (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.19
ஆல்பிரட் சில்வெஸ்டர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி கனடா, டொரன்டோவிலுள்ள அவருடைய மூத்த மகளுடைய இல்லத்தில் தனது 82வது வயதில் காலமானர், அவரைப் பற்றி அனைவரும் பொதுவாக அறிந்து கொள்ள வேண்டிய நினைவலைகளே இது!

பொதுவாக இந்திய வெளியுறவுத் துறை சார்ந்த அலுவலகங்களிலும் வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் எண்ணிக்கையும், கையும் எப்போதுமே ஓங்கியிருக்கும், இது நம்மில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் இதற்கான விதையாக ஆல்பிரட் சில்வஸ்டர் போன்ற நம்பிக்கை மனிதர்கள் பலர் இருந்துள்ளார்கள் என்பது இவரது வரலாற்று குறிப்புக்களின் மூலம் அறிய முடிகிறது.

சற்றே நீண்டுள்ள..... 
சுவையான அமீரக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள இவரது வாழ்க்கை குறிப்புக்களை காண்போம். இந்தப் பதிவு ஓர் காலக்கண்ணாடி என்பதை ஏற்பவர்களுக்கு நீளம் பெரிதாக இராது என நம்புகிறோம்.

ஆல்பிரட் சில்வஸ்டர், கேரளாவின் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரா எனும் ஊரைச் சார்ந்த சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவரின் பள்ளிப்படிப்பும் அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் முடிந்தவுடன் ஒரு ஆண்டு காலம் சொந்த ஊரில் காலேஜ் லெக்சரராக பணியாற்றிய அனுபவத்துடன் 1960 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்து நேஷனல் கவுன்சில் ஆப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் எனும் கல்வியகத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைகிறார்.

இதைத் தொடர்ந்தே அவருக்கு அமெரிக்காவில் பகுதி நேர வேலையுடன் டாக்டரேட் படிக்கவும், பல்கலைக்கழக ஸ்காலர்ஷிப்பும் கிடைக்க அமெரிக்கா செல்ல விரும்புகிறார் ஆனால் ஒவ்வொரு செமஸ்டருக்கும் 2,000 டாலர் கட்டினால் தான் அமெரிக்கா விசாவை அமெரிக்கத் தூதரகம் வழங்கும் என்ற தடை குறுக்கே வருகிறது. மேலும் அன்றைய இந்திய சட்டங்களும் இவ்வளவு டாலர்களை வெளிநாடு கொண்டு செல்ல அனுமதிக்காது என்பதுடன் இந்தியாவில் டாலர்களை பெறுவதும் அப்போது பெருங்கஷ்டம், டாலர்களை திரட்ட வேறு என்ன வழி?

ஆல்பிரட் சில்வஸ்டருக்கு கிடைத்த ஆலோசணையின்படி குறுகிய காலம் அபுதாபியில் தங்கி வேலை செய்து திரட்டும் டாலர்களை கொண்டு அப்படியே அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என திட்டம் தயாரானது. ஆயிரமாயிரம் மேற்கல்விக் கனவுகளுடன் 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பம்பாயிலிருந்து (மும்பை) கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணியாக 135 ரூபாய் (19.12.2018 இன்றைய நிலவரப்படி 7.06 திர்ஹம்) டிக்கெட் கட்டணத்தில் புறப்பட்டார். (அன்றைய காலத்தில் முதல் வகுப்பு பயணியாக செல்வதாக இருந்தால் இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்ய வேண்டுமாம்) பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் இருந்து பிற பயணிகளை போல் டாட்டா சொல்லி கையசைக்கிறார் ஆனால் இவருக்காக திரும்ப கையசைக்க உறவினர்கள், நண்பர்கள் என யாரும் அங்கில்லை.

கப்பல் முதலில் பாகிஸ்தானின் கராச்சிக்கும் பின் ஓமனின் மஸ்கட்டிற்கும் சென்று கடைசியாக 5 நாட்களுக்குப் பின் துபை கடற்கரைக்கு வருகிறது. அப்போது துபையில் துறைமுகம் என முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஏதுமில்லை மாறாக கயிற்று ஏணியின் வழியாக படகில் இறங்கியே கரைக்கு வர முடியும். கரைக்கு வந்தபின் 2 மேஜைகள் மட்டுமே உள்ள இமிக்கிரேசன் அலுவலகத்தில் அதிகாரிகள் அமர்ந்து பாஸ்போர்டில் பிரிட்டீஷ் பாதுகாப்பின் கீழ் ட்ரூசியல் ஸ்டேட்ஸ் (Trucial States) எனும் நிலையிலிருந்த அன்றைய ஒருங்கிணைக்கப்படாத அமீரக விசாவை அடித்து தருகின்றனர். இன்று துபை விமான நிலையத்தில் காணப்படும் பல இமிக்கிரேசன் கவுண்டர்களையும் அதன் நீண்ட வரிசை பரபரப்பையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். பிரிட்டீஷ் அரசின் உதவி மற்றும் பாதுகாப்பின் கீழ் 1971 ஆம் ஆண்டு வரை ட்ரூசியல் ஸ்டேட்டுகள் என்ற அந்தஸ்தில் இருந்தவையே இன்றைய ஒருங்கிணைந்த அமீரகம். (The UAE was part of what was called Trucial States by the British and was a British protectorate until 1971.)

துபையிலிருந்து அபுதாபியிலுள்ள அவரது உறவினரை நாடி பயணம் பாலைவன மண்சாலையில் தொடர்கிறது. அப்போது இருநகரங்களுக்கு இடையே ஒரு சில லேண்ட்ரோவர் வாகனங்களே டேக்ஸிக்களாக இயங்கின மேலும் ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் வழிதவறி காணாமல் போவோரை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்சாலைகளுக்கு அரபி பெயர் ஷப்கா (Shabka), இப்போதுள்ள ஷப்கா பஸ் ஸ்டாண்டு தான் அப்போது துபையின் பெரிய பஸ் ஸ்டாண்ட். அன்றைய பணத்தின் பெயர் கல்ஃப் ருபீ (Gulf Rupee) எனும் இந்திய ரூபாய்கள்.

40 முதல் 50 டிகிரி சூடான அபுதாபியில் அவர் தங்கியது ஈச்சமர கீற்றால் வேயப்பட்ட கொட்டகை ஒன்றில். அன்றைய வாழ்வாதார பொருட்களிலேயே பழைய மண்ணெ;ணெய் கேன்களில் கழுதை மீது ஏற்றி வரப்படும் தண்ணீர் மிகவும் விலை மிகுந்ததாக இருந்துள்ளதால், கடல் நீரே கழிப்பிட நீராக பயன்பட்டுள்ளது. ஒரு சில வீடுகளில் மட்டுமே மின்சார ஜெனரேட்டர்கள் இருந்துள்ளன. கழுதைகள் பேரீத்தம் பழங்கள், மண்ணென்ணெய் போன்றவற்றை சுமப்பதற்கும் பெருமளவில் பயன்பட்டுள்ளது.

சூடான இப்பிரதேசத்தில் ஆல்பிரட் சில்வஸ்டர் கடலில் குளித்தும், கடற்கரை மணலில் புதைந்திருந்தும் பல நாட்கள் தன் உடம்பை குளிர்ச்சியாக பராமரித்துள்ளார். அடிக்கடி கடற்கரை செல்லும் பழக்கத்தால் ஒரு நீச்சல் வீரராகவும் மாறியுள்ளார்.

இவரது அன்றைய அபுதாபி நண்பர்களின் எச்சரிக்கையை பாருங்கள்... ஆல்பிரட் இங்கே படிச்சவங்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம்பா, ஊருக்கு போற வழியப் பாரு என அறிவுறுத்தியுள்ளனர். இன்று இந்த அறிவுரையின் நிலை தலைகீழாக மாறியுள்ளது, என்ன படிப்பினையை நமக்குத் தருகின்றது?.

அபுதாபியில் அப்போது மிகப் பெரிய கம்பெனியாக பிரிட்டீஷ் பெட்ரோலியம் (BP - British Petroleum) கம்பெனி 'தாஸ் தீவில்' (Das Island) கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து பேரல் ஒன்றுக்கு 1 பவுண்டு வீதம் அபுதாபி அரசிற்கும் இன்னொரு பவுண்டை தனக்கும் வைத்துக் கொண்டதாம் அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2 பவுண்டு மட்டுமே. இதற்கு அடுத்து  அபுதாபியில் இருந்த பெரிய நிறுவனங்களாக ஸ்பின்னீஸ், ஆப்ரிக்கன் ஈஸ்டர்ன் போன்றவை இருந்துள்ளன.

வேலை தேடிச்சென்ற இடங்களில் சிலர் இவரிடம் 'விரலால் தட்டினால் எழுதுமே' அதைத் தெரியுமா? என விசாரிக்க, புரிந்து கொண்டவர் உடனே டைப் ரைட்டர் ஒன்றை வாங்கி இன்றும் நம்மில் பெரும்பாலோர் 2 விரல்களால் கம்ப்யூட்டரோடு பேசுவது போல் அவரும் 2 விரல்களால் தட்டி டைப் ரைட்டிங்கை சுயமாக கற்றுள்ளார். இதற்கிடையில், வீட்டுக்கருகிலிருந்த பாலஸ்தீனிய நாட்டு ஆசிரியர்கள் சிலருடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக அவர்களுக்கு ஆங்கிலத்தை போதித்து விட்டு பண்டமாற்றாக அரபி மொழியை கற்றுக் கொண்டுள்ளார்.

ஒருமுறை அபுதாபி மின்சார அலுவலகத்திற்கு ஏதோவொரு வேலையாக சென்றபோது அங்கிருந்த மின்வாரிய இயக்குனர் தன் முன்னிருந்த இங்கிலீஷ் கடிதத்தை படிக்க முடியாமல் விங்கிலீஷ் பாணியில் தவித்துக் கொண்டிருந்த போது அவருக்கு படித்துகாட்டி உதவி செய்ய, அந்த நேரம் பார்த்து அபுதாபியில் பிரிட்டீஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் கட்டிட கான்ட்ரக்ட் பணிகளை செய்து வந்த அல்பெர்ட் அபேலா என்ற லெபனானிய கட்டுமான நிறுவனத்தின் முதன்மை எஞ்சினியர் மில்ஹாம் நாஸிப் என்பவரும் மின்சார அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரிடம் ஆல்பிரட் சில்வஸ்டருக்காக வேலை வாங்கித் தருமாறு மின்துறை இயக்குனர் சிபாரிசு செய்ய அதே லெபனானிய நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்தது, உபயம் இங்கிலீஷ்.

லெபனானிய கட்டுமான நிறுவனத்தில் கடுமையாக உழைத்ததன் விளைவாக விரைவிலேயே அங்கு துணை மேலாளர் அளவுக்கு அதிகாரம் கிடைத்தது. இந்நிலையில் அபுதாபி ஆட்சியாளர் ஷேக் ஜாயித் அவர்களின் கஸ்ர் அல் ஹொஸன் அரண்மனையில் Qasr Al Hosn Palace)  பணியாற்ற இங்கிலீஷ் படித்தவர்கள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுமாறு முதன்மை எஞ்சினியர் மில்ஹாம் நாஸிபிடம் ஒருவர் சொல்ல, அடுத்த நாள் ஆல்பிரட் சிஸ்வஸ்டர் அரண்மனை அலுவலக வேலையில் சேர்க்கப்பட்டார். அவரது வேலைவாய்ப்பு கடிதத்தை மன்னர் ஷேக் ஜாயித் அவர்களே கையெழுத்திட்டு வழங்கினார்.

இன்று அரசு தொடர்புடைய வேலைகளுக்கு தனித்தனி அமைச்சக அலுவலகங்கள் இருப்பது போல் இல்லாமல் அன்றைய காலத்தில் அனைத்து வேலைகளுக்கான இறுதி ஒப்புதலை (final Approval) அபுதாபி அரண்மனைக்கு வந்து தான் வந்து அனைவரும் பெற்றுச் செல்ல வேண்டும் என்பது விதி.

தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேல் அரண்மனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு எண்: 1 என்ற இலக்கத்துடன் வேலைக்கான அடையாள அட்டை (அபுதாபியின் முதலாவது லேபர் கார்டு) வழங்கப்பட்டது இதனால் அதுமுதல் அங்கு அவரது பெயரே 'அவ்வல் வாகிது' (Awwal Wahid) என பட்டப்பெயருடன் வழங்கலாயிற்று. இவரது மனைவி எடித் ஆல்பிரட் அவர்களே அமீரகத்தின் முதலாவது படித்த மகப்பேறு மருத்துவர் (Dr Edith Alfred, one of the first gynaecologists in the UAE)  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு சேருமுன் அவருக்கு வைக்கப்பட்ட இன்டர்வியூ என்ன தெரியுமா? அவரிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டு அதற்கு பதில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அந்தக் கடிதம் பாகிஸ்தானின் அன்றைய ஜனாதிபதி அயூப் கான் அவர்களிடமிருந்து வந்திருந்தது. இதற்கு முன் ராஜதந்திரி ரீதியிலான கடிதங்கள் எதையும் எழுதியிராத சில்வஸ்டர் சற்றே அதிர்ந்தாலும் பிறகு சுதாரித்து பதில் எழுத, உடனடியாக அவரை வேலைக்குச் சேர்த்தனர்.

அந்த கடிதத்தில் மாண்புமிகு எனப் பொருள்படும் ஹிஸ் எக்ஸலென்ஸி என்று (His Excellency) உபயோகித்திருந்தார் ஆனால் முஸ்லீம் நாட்டின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினால் 'டியர் பிரதர் இன் இஸ்லாம்' (Dear Brother in Islam) என்றே எழுத வேண்டும் என்பதை அதன்பின் கற்றுக் கொண்டார். இவருடைய ஆரம்ப பணிக்காலம் தொடங்கி அபுதாபி மன்னரின் சார்பாக இங்கிலாந்து ராணி எலிஸாபெத், இந்தியாவின் இரும்பு மங்கை இந்திரா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கின்றார்.

அபுதாபியில் அப்போது சராசரி மாத சம்பளமாக 500 திர்ஹம் தரப்பட்டு வந்த நிலையில் அவருக்கு 3 மாத திறனறியும் காலம் (Probation Period) வரை 1,200 திர்ஹம் என்றும் பின் 2,000 திர்ஹமாக உயர்த்தியும் வழங்கினார் ஷேக் ஜாயித் அவர்கள். இது நடந்தது 1967 ஆம் ஆண்டு மே மாதம். 1966 ஆம் ஆண்டு தான் ஷேக் ஜாயித் அவர்கள் அபுதாபி ஆட்சியாளராக வந்திருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

1968 ஆம் ஆண்டு ஆல்பிரட் அவர்களுக்கு ஷேக் ஜாயித் அவர்கள் தங்கமுலாம் பூசப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார், இந்த வாட்சை தன் வாழ்நாளின் மிகப்பெரும் விருதாக போற்றிய சில்வஸ்டர் தான் இறக்கும் வரை அதாவது நாள் தவறாது தொடர்ந்து 46 ஆண்டுகளாக பெருமையுடன் அணிந்திருந்தார். அதற்குப் பிறகும் பலமுறை வாட்சுகளை பரிசாக பெற்றிருந்தாலும் முதலாவதாக பெற்ற வாட்சே மனதோடு ஒன்றிய பொக்கிஷமானது.

ஒருங்கிணைந்த அமீரக இணைப்பிற்கான முதலாவது சந்திப்பு அபுதாபி அரண்மனையில் 1968 ஆம் ஆண்டு ஷேக் ஜாயித் அவர்களுக்கும் துபை ஆட்சியாளர் ஷேக் ராஷித் அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது, அமீரகத்தில் பயன்பாட்டிலிருந்த இந்திய ரூபாய் 4 கோடியை இனி அமீரகத்தில் செல்லாது (Demonetization) என அறிவித்து இந்திய அரசிற்கே திருப்பித் தந்தது. அபுதாபி அரண்மனையின் சார்பில் முதன்முதலாக இங்கிலாந்தில் மேற்படிப்பு படித்து வந்தது. ஒருமுறையில் இங்கிலீஷ் டைப் ரைட்டரில் ஷேக் சுல்தான் (ஷேக் ஜாயித் அவர்களின் தந்தை) என இரு விரல்களால் டைப் அடிப்பதை ஷேக் சுல்தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதேபோல் அவரும் இரு விரல்களால் டைப் அடித்து மகிழ்ந்தது எல்லாம் இவரது பசுமையான நினைவில் நிலைத்திருந்தது.

அபுதாபியின் ஆட்சியாளராக ஷேக் ஜாயித் அவர்களின் அண்ணன் ஷேக் ஷக்பூத் பின் சுல்தான் அல் நஹ்யான் (Shaikh Shakbout bin Sultan Al Nahyan) இருந்து கொண்டிருந்த நிலையில் அபுதாபிக்கு உட்பட்ட அல் அய்ன் நகரின் பொறுப்பாளராக இருந்தவர் தான் ஷேக் ஜாயித் அவர்கள். அல் அய்னில் அவர் நடத்திய சிறப்பான ஆட்சித்திறனால் அவரது குடும்பம் மற்றும் பிரிட்டீஷாரின் உதவியுடன் அபுதாபியின் ஆட்சியாளராக பதவி ஏற்றார் இதனால் கோபமுற்ற ஷேக் ஷக்பூத் அவர்கள் நாட்டை விட்டே வெளியேறினார். எனினும் அவரை அப்படியே விட்டுவிடாமல் மீண்டும் அபுதாபியில் அவருக்காக கட்டப்பட்ட அரண்மனையில் குடியமர்த்தியதுடன் நோய்வாய்ப்பட்டிருந்த அவரை கடைசி வரை அன்புடன் கவனித்துக் கொண்டார் என சாட்சி பகர்கின்றார் சில்வஸ்டர்.

ஆரம்ப நாட்களில் பலமுறை ஷேக் ஜாயித் அவர்களுடனும், ஷேக் ராஷித் அவர்களுடனும், ஷேக் ஜாயித் அவர்களின் பன்னாட்டு விருந்தினர்களுடனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியுள்ளார் என்றாலும் அரண்மனை மற்றும் அலுவலகப் பணிகளின் விரிவைத் தொடர்ந்து விருந்துண்பது தடைபட்டுள்ளது. ஆல்பிரட் சில்வஸ்டர் பணி ஓய்வு பெறும் போது, தான் விரும்பிய காலம் வரை அமீரகத்திலேயே வசிக்கலாம் என ஷேக் ஜாயித் அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் எனினும் கனடாவில் வாழும் மூத்த மகளுடைய சூழ்நிலையின் காரணமாக கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இப்போது மீண்டும் இப்பதிவின் 2வது பாராவை படியுங்கள்! 
ஆல்பிரட் சில்வஸ்டர் தனது சொந்த கிராமமான சக்திகுளங்கரா மற்றும் அருகிலுள்ள ஊர்களின் அனைத்து வீடுகளிலிருந்தும் குறைந்தது வீட்டிற்கு ஒருவர் என அமீரக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். இவரது மூலம் வேலைவாய்ப்பை பெற்ற மலையாளிகள் தாங்கள் அறிந்த பிற மலையாளிகளுக்கு அந்த வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர், இன்னும் தொடர்கின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.