.

Pages

Thursday, December 6, 2018

சவுதியில் 30 வருடங்களாக தினமும் தவறாமல் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரிக்கும் பெரியவர்!

அதிரை நியூஸ்: டிச.06
சவுதியில் 30 வருடங்களாக தினமும் தவறாமல் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் பெரியவர் ஒருவர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்' அல்லது "நோயாளி ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம் கொண்டுவரப்பட்டால்' அவர்கள், "அத்ஹிபில் பஃஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'' என்று பிரார்த்திப்பார்கள்.

பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5675) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5021)

நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் (5017)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். 

"இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (1865),(4758)

5649 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

என்பன போன்ற பல நபிமொழிகள் மூலம் நோயாளிகளை சென்று சந்தித்து நலம் விசாரித்தல் இஸ்லாத்தில் எவ்வாறு சங்கைப்படுத்தப்பட்டுள்ளதை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேற்காணும் ஹதீஸ்களுக்கு ஏற்ப சவுதி அரேபியாவின் அல் மஜ்மா நகரைச் சேர்ந்தவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்பவரும் பேரீத்தம் பழத் தோட்ட விவசாயியுமான 'அலி இப்ராஹீம் அல் மூஸா' அவர்கள் ரியாத் கவர்னரேட்டுக்கு உட்பட்ட அல் மஜ்மா நகரின் 'ஹவ்தத் சுதைர் மருத்துவமனைக்கு' கடந்த 30 வருடங்களாக தினமும் சென்று அங்குள்ள நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியும், அவர்கள் நலம் பெற வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும், சக மனிதனாக அருகிலிருந்து உறவாடி மனதளவில் அவர்களுக்கு நன்நம்பிக்கையை எற்படுத்தியும், இதற்கு முன் பலதரப்பட்ட நோய்களுடன் வந்தவர்கள் எல்லாம் எவ்வாறு குணமாகி வீடு திரும்பினார்கள் என எடுத்துச் சொல்லி மனவலிமைக்கான ஆலோசணைகள் வழங்கி வருவதையும் தொடர்ந்து தவறாமல் செய்து வருகின்றார்.

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராத அலி இப்ராஹீம் அல் மூஸா அவர்கள் தற்போது தன்னால் வாகனத்தை இயக்க முடியாத நிலையிலும் தன்னுடைய மகனின் உதவியுடன் வாகனத்தில் மருத்துவமனைக்கு வருவதை நிறுத்தவில்லை. இவரது கனிவான சேவையை அங்கீகரிக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் தாமே முன்வந்து நினைவு பதக்கம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி கண்ணியப்படுத்தியது. அல்லாஹ் இந்த நல்லடியாரின் அமல்களை பொருந்திக் கொண்டு மறுமையில் பரிசாக உயரிய சுவனத்தை வழங்கி கவுரவிக்க பிரார்த்திப்போமாக!

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.