.

Pages

Saturday, December 8, 2018

அதிரையில் முதல் கட்டமாக 50 கூரை வீடுகள் புனரமைக்கத் திட்டம் ~ செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.08
கஜா புயலில் பாதிப்படைந்த கூரை வீடுகள் புனரமைக்கும் பணிக்காக அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பில், உலமாக்கள், அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், சமுதாய அமைப்புகள், நற்பணி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய 'அதிரை கஜா புயல் புனரமைப்பு கூட்டமைப்பு' தொடங்கப்பட்டதையடுத்து, இக்கூட்டமைப்பின் சார்பில், முதல்கட்டமாக, புயலில் கூரை வீடுகளை இழந்து பிற இடங்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு தற்காலிக ஏற்பாடாக வீடுகள் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில், இக்கூட்டமைப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் அலுவலகத்தில் இன்று (டிச.08) சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி கூறியது;
கஜா புயலில் கடுமையாக பாதிப்படைந்த அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உலமாக்கள், சமுதாய அமைப்புகள், பல்வேறு தன்னார்வலர்கள் மூலம் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் அடுத்தக்கட்டமாக, புயலில் பாதிப்படைந்த கூரை வீடுகள் சீரமைக்கும் பணிக்காக 'அதிரை கஜா புயல் புனரமைப்பு கூட்டமைப்பு' தொடங்கப்பட்டுள்ளது. அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பில் 22 பேர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பாதிப்படைந்த கூரை வீடுகளின் குடும்பத்தாரிடமிருந்து 300 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சார்பில் 5 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக அதிகம் பாதிப்படைந்த 50 கூரை வீடுகளின் புனரமைக்கும் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி அதன் துணைத்தலைவர் பேராசிரியர் மவ்லவி. எம்.ஏ முகமது இத்ரீஸ் கூறியது;
இந்த கூட்டமைப்பின் நோக்கம், கஜா புயலில் கூரை வீடுகளை இழந்தவர்கள் ஆங்காங்கே வீதிகளிலும், இன்ன பிற இடங்களிலிலும் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில், அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பில், உலமாக்கள் வழிகாட்டுதல் பேரில், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தற்காலிக ஏற்பாடாக இந்த கூட்டமைப்பை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் சாதி, மத, இன பேதமின்றி பாதிப்படைந்த அனைத்து சமுதாய மக்களின் கூரை வீடுகளும் கணக்கெடுப்பு செய்து, முதல்கட்டமாக கூரை வீடுகள் புனரமைக்கும் பணிக்காக வெளியூர்களிலிருந்து தென்னை கீற்று, கம்பு, கயிறு, சீட் ஆகியவற்றை வரவழைத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இப்பணியின் நிதி தேவைக்காக, 'ADIRAI GAJA CYCLONE RELIEF FUND' என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நிதி தேவையை பூர்த்தி செய்ய எண்ணும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் கொடையாளிகள், நற்பணி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்களிப்பு செய்யலாம். மேலும், கீற்று, கம்பு, கயிறு, சீட் போன்ற வீடு புனரமைப்பிற்கு தேவைப்படும் நிவாரணப் பொருட்களாகவும் வழங்கலாம்.

நிதி வரவு ~ செலவு குறித்து தினமும் கூட்டமைப்பினர் ஓன்று கூடி ஆலோசித்து முடிவு செய்வர். நிதி அனுப்பக்கூடியவர்களின் நோக்கத்திற்கு ஏற்பவும், பயன்பெருபவர்களுக்கு முழுமையாக சேரும் வகையிலும் முழு கண்காணிப்பில் ஒவ்வொரு செலவினங்களும் நேர்மையான முறையில் செலவிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் மற்றும் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் பாதிப்படைந்த மக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலமாக்கள், அதிரை பைத்துல்மால் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைத்தலைவர் இசட். அப்துல் மாலிக், கூட்டமைப்பின் செயலர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பொருளாளர் எம்.எஸ்.எம் முகமது யூசுப், இணைச் செயலாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் கூட்டமைப்பு அல்லாஹ்வின் உதவி பெற்று இஃலாசுடன் செயல் பட வேண்டும் என்ற துஆடன் வாழ்த்தும்...

    ReplyDelete
  2. இத்துடனேயே பணம் அனுப்ப வசதியாக பேங்க் கணக்கு எண் விபரங்களையும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தொலைபேசி எண்ணுடன் விபரம் வெளியிட்டு இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.