.

Pages

Thursday, December 20, 2018

சைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சியம் ~ 'சைக்கிள் நாயகன்' அதிரை தப்லே ஆலம்!

அதிராம்பட்டினம், டிச.20
தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற வேண்டும் என்பதே என் லட்சியம் என்றார் விரைவாக சைக்கிள் ஓட்டிச்சென்று சாதனை படைக்கும் அதிராம்பட்டினம் இளைஞர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மகன் தப்லே ஆலம் (வயது30). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

தனது 10-வது வயதிலிருந்து விரைவாக சைக்கிள் ஓடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளார். இதுவரையில், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளார்.

இதுகுறித்து 'சைக்கிள் நாயகன்' தப்லே ஆலம் நம்மிடம் கூறியது;
'என்னுடைய 10-வது வயதில், சைக்கிள் விரைவாக ஓட்டும் ஆர்வத்தை அறிந்துகொண்ட எனது பெற்றோர் எனக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தனர். அன்று முதல் இன்று வரை எங்கு சைக்கிள் பந்தயம் நடந்தாலும் அங்கு சைக்கிளுடன் ஆஜராகிவிடுவேன். மேலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை பிற ஊர்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன். இதில், அதிராம்பட்டினம் ~ திருச்சி, அதிராம்பட்டினம் ~ சேத்தியாத்தோப்பு, அதிராம்பட்டினம் ~ இராமநாதபுரம், அதிராம்பட்டினம் ~ சிதம்பரம், அதிராம்பட்டினம் ~ மாயவரம், அதிராம்பட்டினம் ~ வேளாங்கண்ணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளேன்.

எனது பயணங்களின் போது காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றேன். அவர்கள், எனது ஆர்வத்தை ஊக்கப்படுத்தினர். பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினர். கிராம மக்கள் எனக்கு உணவுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

எனது அடுத்த இலக்கு தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் மாநிலம் வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.  சைக்கிள் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை, காற்றை மாசுபடுத்துவதும் இல்லை, உடற்பயிற்சிக்கும் துணைபுரிகிறது. எனவே, ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும்.

சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் வகையில் கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் சைக்கிள் போட்டிகளை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். சைக்கிள் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். தகுதியான சைக்கிள் வீரர்களை தேர்வு செய்து தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாநில மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியம். ரேஸ் சைக்கிள் வாங்கும் அளவுக்கு தனக்கு பொருளாதார வசதியில்லை. அரசு அல்லது தனியார் அமைப்புகள், கொடையாளிகள் உதவி செய்தால் சாம்பியன்ஷிப் பட்டம் பெற இயலும்' என்றார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.