.

Pages

Thursday, December 6, 2018

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி பட்டுக்கோட்டையில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.06
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், மத்திய, மாநில அரசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் தஞ்சாவூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவோணம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை அன்று நடைபெற்றது.

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் சென்று பாதிப்புகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ 20 ஆயிரம் வழங்க வேண்டும்.

முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ 50 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ 25 ஆயிரம், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 1 லட்சம் வழங்க வேண்டும். தேக்கு, சவுக்கு, சோளம், மா, புளி, யூகலிப்டஸ் போன்ற அனைத்து மரங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும். புயலால் இறந்த மாடு ஒன்றுக்கு ரூபாய் 50 ஆயிரம், கன்றுக்கு ரூ 25 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ 8 ஆயிரம்  மற்றும் கோழி உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு உயிரினங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ரூ15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் குடிசையில் இருப்போர் அனைவருக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பேர் ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் சாந்தகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர்.  சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, சின்னை பாண்டியன், எஸ். தமிழ் செல்வி, கே.அருளரசன்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், மதுக்கூர் காசிநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர்கள் பட்டுக்கோட்டை எஸ்.கந்தசாமி, மதுக்கூர் வை.சிதம்பரம், வி.ச மாவட்ட நிர்வாகி ஏ.கோவிந்தசாமி, மீன் பிடித்தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன், மெரினா ஆறுமுகம், ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் சு.கிருஷ்ணமூர்த்தி, முருக சரவணன், பெஞ்சமின், ஜீவானந்தம், வீரப்பன், மாதர் சங்க நிர்வாகிகள் சரோஜா, கலாவதி, சாந்தி, பூபதி, வாலிபர் சங்க நிர்வாகிகள் மோரிஸ் அண்ணாதுரை, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.