.

Pages

Sunday, December 2, 2018

புயல் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் பகுதிகளில் எம்.எல்.ஏ அபூபக்கர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினத்தில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ,  கஜா புயலால் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் பகுதிகளில் இன்று (டிச.02) ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு 600 குடும்பங்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசியது;
சமீபத்தில் வீசிய கஜா புயலினால் அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட அரசு மீட்டுப் பணிகள், நிவாரணப் பணிகளில் துரிதமாக செயல்படவில்லை. கிராமப் பகுதிகளுக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படவில்லை. முறிந்த விழுந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் வருகை ஒரு கண் துடைப்பு நாடகமாக இருக்கிறது. பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தென்னை விவசாயிகளுக்கு அரசு வழங்கக்கூடிய நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. இவற்றை அதிகரித்து வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புயலினால் கடும் சேதமடைந்த மீனவர்களின் படகுகளை கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.

டெல்டா பகுதியில் தற்போதையை மின்சாரக் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவற்றை அரசு பரிசிலிக்கவேண்டும். மேலும், இப்பகுதி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். மத்திய அரசு வழங்கிய கஜா புயல் நிவாரண நிதி மிகவும் குறைவு. இவற்றை அதிகப்படுத்தி வழங்கவேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில், புயல் பாதிப்படைந்த டெல்டா பகுதிகளில் கடந்த 15 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப்பணிகளுக்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில், மாநிலச் செயலாளர்கள் ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு மேலும் காலம் தாழ்த்தாமல், மக்களின் அதிருப்திக்கு ஆளாகாமல், புயல் பாதிப்படைந்த டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

அப்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.பி நசுருதீன், ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில், நிஜாமுதீன், இப்ராஹீம் மக்கீ, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீது, செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.