.

Pages

Friday, December 14, 2018

கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.14
கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மொரிஷியஸ் நாடு

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் மொரிஷியஸ் தீவினருக்கு கரும்பு திகழ்கின்றது. சர்க்கரை தயாரிக்க கரும்புகள் பிழியப்பட்ட பின் அதன் இலைகள், சக்கைகள் போன்ற கழிவுகள் மாற்று எரிபொருளாக மாற்றப்படுகின்றன. இந்த கரும்புச் சக்கை கள் "Bagasse" என்று அழைக்கப்படுகின்றன.

ஓம்னிகேன் (Omnicane) என்ற சர்க்கரை மற்றும் மின்சார தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் தினமும் சாராசரியாக 8,500 டன் என ஆண்டுக்கு சுமார் 900,000 டன் கரும்புக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதுபோல் மொரிஷியஸில் பல சர்க்கரை மற்றும் அனல் மின்சாரத் தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் அரசின் மின்துறைக்கு விற்கப்படுகின்றது.

கரும்பு விவசாய நாடான மொரிஷியஸ் தன்னுடைய நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் சுமார் 14 சதவிகிதத்தை கரும்புச் சக்கை மற்றும் அதன் இலை, சருகுகளிலிருந்து பெறுகின்றது. ஆண்டுதோறும் கரும்பு அறுவடை தொடங்கியவுடன் சுமார் 6 மாத கால அனல் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளாக சேமிக்கப்படுகின்றது அதன் பின் அந்த அனல்மின் உற்பத்தி நிலையங்கள் எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு மாறுகின்றன. மொரிஷியஸின் மின் தேவைகள் காற்றாலை, சூரிய ஓளி மற்றும் நீர்மின் திட்டங்கள் வழியாக கிடைக்கின்றது.

மொரிஷியஸ் தீவு - ஒர் சுருக்கமான வரலாறு:

ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில் இந்தியப் பெருங்கடலுக்குள் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நாடு. ஆரம்பத்தில் இந்தத் தீவில் மனிதர்கள் யாருமில்லை என்றாலும் அரேபிய கடல் வணிகர்கள் ஓய்வெடுக்கும் இடமாக மட்டுமே இருந்தது, இத்தீவிற்கு அரேபியர் இட்ட பெயர் டைனா அரோபி (Dina Arobi). பின்பு போர்த்துகீசிய கடலோடிகள் 1507 ஆம் ஆண்டில் இதை ஒரு தங்குதளமாக உருவாக்கி 'இல்ஹா டீ சிர்னி' (Ilha Die Cirne) என அழைத்தனர் என்றாலும் இத்தீவு அவர்களுக்கு பிடிக்காமல் போக, சொற்ப காலத்திலேயே வெளியேறிவிட்டனர்.

பின்பு 1598 ஆம் ஆண்டு டச்சு கடற்படை (டென்மார்க்) வீரர்கள் வந்திறங்கி 'மொரிஷியஸ்' எனப் பெயரிட்டனர் என்றாலும் 1638 ஆண்டுகளில் தான் ஒரளவிற்கு மக்கள் நிரந்தரமாக தங்கி வசிக்கும் பகுதியாக துவங்கியது என்பதால் 1638 ஆம் ஆண்டிலிருந்தே 1710 வரை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர் என்பதாக வரலாற்றில் கணக்கிடப்படுகின்றது.

டச்சுக்காரர்களே இங்கு மான், வீட்டு வளர்ப்பு பிராணிகள், கருங்காலி மரங்கள், கரும்பு போன்றவற்றை கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தனர் என்றாலும் அவர்களுக்கும் இந்தத் தீவிலிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காததால் தீவை ஆட்சி செய்வதை விட்டும் 1710 ஆம் ஆண்டு வெளியேறினர். 1710 முதல் 1715 வரை ஆட்சியாளர் யாருமின்றியே இருந்தது.

பக்கத்து தீவான ரீ-யூனியன் தீவை (Re-union Island) பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தநிலையில் கேட்பாரின்றி சும்மாகிடந்த இந்தத் தீவை (1715 – 1810) பிரேஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கினர், இதற்கு அவர்கள் இட்ட பெயர் ஐஸில் டி பிரான்ஸ் (Isle De France), பிரான்ஸ் ஆட்சி காலத்தில் தான் இங்கு கரும்பு விவசாயம் செழிக்கத் துவங்கியதுடன் ஒரு கப்பல் கட்டும் தளமும் உருவாக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பல கட்டிடங்கள் உருவாயின, அவற்றில் பல இன்றும் அரசு அலுவலகங்களாக காலத்தை வென்ற உறுதியுடன் நிலைத்துள்ளன. இந்த தீவு 'பிரான்ஸ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின்' (France East India Company) நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

மன்னர் நெப்போலியன் பிரான்ஸை ஆண்டபோது பிரிட்டனுக்கு பெரிய தலைவலியாக மாறியது இந்தத் தீவு, இங்கிருந்த பிரான்ஸ் கடற்படை இந்தியாவை ஆண்ட பிரிட்டனின் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் (Britain's East India Company) வர்த்தக கப்பல்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடித்து வந்ததால் பிரிட்டன் இந்தத் தீவின் மீது படையெடுத்து வென்றது. ஆங்கிலேயர்கள் இந்தத் தீவிற்கு மீண்டும் மொரிஷியஸ் (Mauritius) என்றே பெயரையிட்டனர்.

ஆங்கிலேயர்கள் இங்கு பிரான்ஸ் ஆட்சியில் நிலவிய ஆப்பிரிக்க அடிமை முறையை ஒழித்து 1834 ஆம் ஆண்டுமுதல் 1921 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில்; சுமார் 5 லட்சம் தொழிலாளர்களை படிப்படியாக இறக்குமதி செய்தனர் ஆனால் பின்னாளில் மொரிஷியஸே அவர்களின் தாயகமாக மாறியது. இவர்கள் அங்கு கரும்பு விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைகள், போக்குவரத்து, சாலை அமைத்தல் போன்ற பல பணிகளைச் செய்தனர்.

மகாத்மா காந்தி 1901 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வரும்; வழியில் சுமார் 2 வார காலம் இங்கு தங்கியிருந்த போது இந்தியத் தொழிலாளர்களை சந்தித்து கல்வியிலும், தீவிரமான அரசியலிலும் ஈடுபட உற்சாகமூட்டினார். மொரிஷியஸ் 1968 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றப்பின் பலமுறை இந்நாட்டின் ஆட்சியாளர்களாகவும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் இருந்துள்ளனர், இருந்து கொண்டுள்ளனர், இனியும் வருவர்.

Sources: Emirates 247 & Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.